ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 4, 2009


தமிழீழமும் தமிழகப் பங்களிப்பும்


முந்தைய பதிவு கொஞ்சம் உணர்ச்சி வசமாகிப்போய் விட்டது. விளக்கமில்லாத ஒரு சில தமிழக உறவுகளால் மனம் கசந்து போய் விட்டது.

தமிழ் ஈழத்தை இந்தியா பெற்றுத்தரும் என்ற கனவுகள் கலைந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. தமிழ் ஈழ மக்களே போராடி வென்றால்தான் உண்டு என்ற அரிச்சுவடியை நாம் படித்தாகிவிட்டது. அதற்காக சிந்திய குருதியும் விட்ட உயிர்களும் வகை தொகையில்லாது பெருகிக் கொண்டிருக்கின்றது. இருந்த போதும் தமிழீழம் என்ற கனவு மட்டும் கருகிப்போகவில்லை. அதை அடையும் வரை நம் போராட்டமும் ஓய்ந்து விடப்போவதில்லை.

தலைமைகள் மாறலாம் நிலைமைகள் வேறுபடலாம்...ஆனால் முடிவு எது என்பதில் நாம் திடமாகவே இருக்கின்றோம். சர்வதேசமும் எம் நோக்கத்தில் குறை காணலாம் ..குற்றம் சாட்டலாம்..அது அவர்களின் கருத்து.. ஆனால் எமக்கான வாழ்வுக்கு நாங்கள் போராடுவதை நிறுத்தப்போவதில்லை. எமது நோக்கம் சரியானது என்ற தெளிவு மிகச்சிறப்பாகவே நம்மிடம் இருக்கின்றது. இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவே எதிர்த்து வந்தாலும் ஈழத்தில் போராட்டம் ஓய்ந்து விடாது.

நாம் எமது கருத்தில் மிகத் தெளிவாகவே இருக்கின்றோம். அதற்கான போரட்டத்தில் அங்குலம் அங்குலமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றோம். போராட்டத்தில் பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் வரும் என்பதை அறியாதவர்கள் அல்ல. அதை மேவும் வழி வகையும் புரியாதவர்களும் அல்ல. இது மக்கள் போராட்டம்.

இதில் தமிழகத்தின் பங்கு எது என்பதைப் புரிந்து கொண்டால் இந்த அதிகப்பிரசங்கிகளுக்கு வார்த்தைகள் கிடைக்காது போய் விடும். இவர்களின் சிலு சிலுப்புகள் காணாது போய் விடும்.

உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதும் உங்களால் எங்களுக்குத் தரப்படக் கூடியதும் அதிக பட்சம் உங்கள் மாரல் சப்போட் தான். அதற்கு மேலாக உங்களால் ஒரு மண்ணைக்கூட செய்ய முடியாது. பாக்கு நீரிணையின் மீது பாலம் கட்டிப் படையனுப்பவும் முடியாது... ஆயுதம் அம்புகள் என்று அள்ளித்தரவும் முடியாது.

குறைந்த பட்சம் இந்தியாவின் நரித்தனங்களையாவது தட்டிக்கேட்பீர்கள் தடை செய்வீர்கள் என்று எதிர்பார்த்தோம். அதைக்கூட உங்களால் செய்ய முடியாது என்பதை இன்றைய அவலகாலம் உங்களுக்கும் எங்களுக்கும் தெளிவாகவே உணர்த்தி விட்டது. உங்கள் பேச்சை மத்திய அரசு கேட்கும் நிலையிலும் அவர்கள் இல்லை ..கேட்க வைக்கும் வலிமையும் உங்களுக்கு் இல்லை.

இன்று புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டமே ஐ.நாடுகள் முதற்கொண்டு பிரித்தானியா பிரான்ஸ் ஈறாக காத்திரமான பங்களிப்பைச் செய்யத் தூண்டியிருக்கின்றது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொச்சைப் படுத்தாதீர்கள். உங்களால் முடியவில்லை என்பதால் எங்களுக்கு கோபம் இல்லை. உங்கள் நாட்டின் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு உங்களால் இதைத்தான் செய்யமுடியும் என்பதை எம்மால் மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும்.

சட்டத்தை மீறிச் செயற்பட்டு உங்களுக்கும் எமது நிலை வரவேண்டாம். அப்படி நாங்கள் உங்களை வற்புறுத்தவும் போவதில்லை. அதற்காக எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் தமிழனாக இருங்கள் இல்லை இந்தியனாக இருங்கள். அது உங்கள் உரிமை. அதே போல தமிழீழம் குறித்து போராடுவது எங்கள் உரிமை அதனையும் புரிந்து கொள்ளுங்கள். இந்தியா எங்களுக்கு எதிராகவே இருக்கின்றது என்பதை நாம் சந்தேகமின்றி அறிவோம்.

இந்தியாவின் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய முடிந்தால் செய்யுங்கள். அதைதான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது. பல எதிரிகளுடன் போராடுவது சிரமமாக இருக்கின்றது. அதற்கு நாங்கள் இன்னும் வளரவேண்டியது நிறையவே இருக்கின்றது. யாராவது ஆதரவு தெரிவித்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். பாராட்டுவோம். அதை உங்கள் உள்ளூர் அரசியலுக்குள் முங்க வைக்காதீர்கள்.

4 comments:

Anonymous said...

நன்றி. மெளனமாய் ஒரு பெருமூச்சு மட்டுமே பதில்

ராஜ நடராஜன் said...

அரசியல் பிளவுகள் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகம் தனது பங்கை சிறப்பாகவே செய்திருக்க முடியும்.இருந்தபோதிலும் இப்போதைய தமிழக நிகழ்வுகளும் தமிழீழம் கனவுக்கு நேர்,எதிர்மறையாகவும் உதவுகிறது.

ராஜ நடராஜன் said...

நன்றாகத்தானே எழுதுகிறீர்கள்.அப்புறமென்ன பதிவர்களுக்குப் பூச்சாண்டி காட்டும் இட்டாலி வடை.பெயர் வாஸ்து நண்பர்களிடம் கேட்டிருக்கலாமே:)

ராஜ நடராஜன் said...

word verification ஐ தவிர்க்கலாம்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil