ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 10, 2009


அன்னையர் தினமும் அரைக்கால் டவுசர் அரசியலும்


கும்மியடிச்சு குதியம் குத்தியவனும் மாங்குமாங்கென்று அன்னையர் தினத்தில் செண்டிமெண்ட் பதிவு போடுறான். இப்படிப்பட்ட குறைவேக்காடு சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கும் அன்னையரிலும் தந்தையரிலும் சொல்லிக்கொள்ளும் செண்டிமெண்ட் ஒன்றும் எனக்கு இல்லை.செண்டிமெண்ட் என்றாலே ஏகக்கடுப்பு. குதிக்காலில் கெந்திக்கெந்தி நடனம் ஆடுபவனையும் கைமுட்டி இறுக்கி "டிஷ்ஷும்"சத்தம் போட்டுசண்டை போடுபவனையும் "தலீவா"என்று கூப்பிடும் இவ்வகை விடயங்களில் ஏகப்பட்ட வெறுப்பு.

அப்படிப்பட்ட ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் எப்படி உயர்ந்தவர்களாகி விடமுடியும். குழந்தைக்குப் பாலில்லாது சாமிக்கு ஊத்துகிறார்களே என்றவனைச் சண்டாளன் என்று சொல்லியவர்கள் பட்டினி கிடந்து சம்பாதித்த பணத்தை படத்துக்கு மாலை போட்டு குடம் குடமாகப் பாலூத்துகின்றார்களே.. இப்படிப்பட்டவர்களைப் பெத்தெடுத்ததில் அப்படி என்ன சாதனை இருக்க முடியும்.

உச்சி மயிரை ஒத்தவிரலால் சுண்டுபவனும் குச்சிக்காலை வைத்து இடுப்பு நெளித்து நடனம் ஆடுபவனையும் பூத்தூவி வரவேற்பவன் என்ன புத்தனா? காந்தியா? இத்தகைய பேமானிகளைப் பெத்தவருக்கு ஏன் கோவில் கட்டவேண்டும்?

வெள்ளைத்தோல் சினிமாக் காரிகளின் தொடைகளுக்குள் கதி மோட்சம் அடைபவனும் கரைவேட்டிக் கம்மனாட்டிகளின் காசுக்காகக் கோஷம் போடுபவனையும் பெத்தெடுத்து இது தான் வாழ்க்கை என்று படிப்பித்து வாழ்க்கையின் சேற்றினில் போட்டு விட்டவர்களைப் பற்றி என்ன இருக்கின்றது. காகமும் தான் தன் குஞ்சுக்கு சோறூட்டுகின்றது.காட்டில் வாழும் மிருகமும் கூட தன் குட்டிகளை காப்பாற்றி வளர்க்கின்றது.

"தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை "என்று வழக்கொன்று இருக்கின்றது. இன்றைய அழுக்குப் பிடித்த சமூகத்தின் சிற்பிகள் இவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களா?

எங்கள் தமிழ் அன்னையர் தந்தையர் பற்றித்தான் எனது ஆதங்கமெல்லாம். அயலவன் செத்துக் கிடந்தாலும் எனக்கென்னவென்று காரக்குழம்பும் கூட்டும் வைத்து வக்கணையாகச் சாப்பிடச் சொல்லித் தந்தவர் அன்னையைத் தவிர வேறு யார்? வீதியில் ஒருவன் அடிபட்டுக் கிடக்கையிலும் வேகமாய் வா என்று கையை இழுத்துச் சென்றவள் யார்? புறணியும் புரளியும் பேச சொல்லிக்கொடுத்தவள்..பெண்களை அடிக்கும் பொட்டையாய் வாழச் சொல்லிக்கொடுத்ததும் வேறு கிரக வாசிகளா?

தனி மனித ஒழுக்கம் வீட்டிலிருந்து தான் வரவேண்டும். வாழ்க்கை பற்றிய பார்வையும் மனிதம் பற்றிய மேன்மையையும் சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள் அன்னையரே?

எனக்கென்ன எனக்கென்ன என்று எம் சமூகம் இன்று கோழைப்பட்டு போய் நிற்பதற்கு இவர்கள் ஒதுங்கிப்போனதே காரணமல்லாது வேறு என்ன?
பெத்தவளுக்கு பசிக்குச் சோறு போட எண்ணமில்லாதவனெல்லாம் குஷ்புவின் குண்டிக்குக் கோவில் கட்டுகின்றான்.

இலஞ்சம் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதியைப்பார்த்து தானைத் தலைவன் தமிழினத் தலைவன் என்று ஜால்ரா தட்டுகின்றான்.தட்டிக் கேட்பவனையும் தட்டி வைக்கத் தடியெடுத்து வரு்கின்றான். சாக்கடைக் கூவம் போல நாறும் அரசியலில் படித்தவர்கள் வரவேண்டுமென்று கூவி விட்டு அதிகம் படித்த இவன் பாய் போட்டுத் தூங்கி விடுகின்றான்.

படித்த ஒரு சரத் பாபு அரசியலுக்கு வர, தோற்பது நிச்சயம் என்று தெரிந்தும் ஏன் இந்த வேலை என்று காலைப் பிடித்து இழுக்கின்றான். உனக்கும் தெம்பில்லை..தெம்புள்ளவனையும் விட்டு விடத் துப்பில்லை.எமது தமிழன் நண்டுக்கு ஒப்பானவன். நண்டுகள் போட்ட பெட்டியை மூடி போட்டு மூடிவைக்கத் தேவையில்லை. ஒன்றின் காலை ஒன்று இழுத்து வைத்து ஒன்றும் வெளியில் தப்பிப்போகாது அவை பார்த்துக் கொள்ளும். அப்படிப்பட்ட கேவலமான சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கும் அன்னையருக்கு பூ போடுவதிலும் புளுகுகள் எழுதுவதிலும் எனக்குச் சம்மதமில்லை.

படித்தவனுக்கெல்லாம் அரசியலில் ஆர்வம் வரவேண்டும். அதர்மத்தைத் தட்டிக்கேட்கும் ஓர்மம் வரவேண்டும். அதனைத் தாய்ப்பாலில் ஊட்டி அன்னை வளர்க்கவேண்டும்.அப்போது தமிழன் பிரச்சினையெல்லாம் தீர்ந்து விடும். குறைந்த பட்சம் மனிதனாக வாழும் உயர்வு கிடைத்து விடும். வெறும் ஜடமாக வாழும் தமிழனைப் பெற்றதற்காகவா?அப்படியொரு வாழ்வை சொல்லிக் கொடுத்ததற்காகவா? அன்னையருக்கு இந்த அவியல்களெல்லாம். அவியல் போடுபவரெல்லாம் மனச்சாட்சியுடன் சொல்லுங்கள் ஒரு நாளாவது உங்கள் அன்னையரைச் சினக்காமல் இருந்ததுண்டா? உங்கள் தங்கையரை எதற்காகவேனும் தண்டிக்காது இருந்ததுண்டா? நான் ஆண் என்று ஒருநாளாகவேனும் அக்காவின் மேலால் அதிகாரம் செய்யாது நடந்ததுண்டா?

இது உங்களின் தனிப்பட்ட குறைபாடல்ல இந்தச் சமூகத்தின் குறை... அது கொண்டுள்ள இளைத்தவர்களின் மீதுள்ள மூர்க்கம்.. அதற்கு பொறுப்பெடுக்க வேண்டியவர்கள் ..இந்த அன்னையரே.."தம்பிக்கு ரெண்டு எக்ஸ்ரா தோசை போடச் சொல்லுவதில் இந்த ஆணாதிக்கம் சொல்லிக் கொடுக்கப் படுகின்றது.பெண்களைச் சரியாக மதிக்கத்தெரியாது அன்பு செலுத்தத் தெரியாது நான் பட்ட வேதனையில் இருந்து வருகின்றது இந்தக் கோபம்.

அன்பைச் சொல்லிக் கொடுக்கும் அன்னையாக அதர்மத்தைத் தட்டிக்கேட்கும் மகனாக பிள்ளையை வளர்க்கும் புது அவதாரம் எடுக்கட்டும். பேமானி சினிமாக்காரனையும் பித்தலாட்ட அரசியல்வாதியையும் தூக்கியெறியும் தோள்வலிமை கொடுத்து வளர்க்கட்டும். துன்பப்படுபவனை தூக்கிவிடும் கரங்கள் கொடுத்து வாழ்த்தட்டும்.

சமுதாய மாற்றம் வீட்டிலிருந்து தொடங்குகின்றது. அது ஆரம்பிக்கும் இடம் அடுக்களைதான். அங்குள்ளவர்கள் இன்று ஒரு பிள்ளையார் சுழி போடட்டும். அப்போது நானும் வருவேன் பூக்களுடன்... அன்னையரை ஆராதிப்பதற்கு.. அதுவரை..

1 comment:

Suresh said...

அருமையான பதிவு தலைவா சொல்லி அடித்தீர்கள்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil