ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 18, 2009


கொஞ்சம் பொறுங்கள் கடமையைச் செய்வோம்


இலங்கை அரசிற்கே இல்லாத அக்கறையில் சில பதிவர்கள் தலைவனின் மறைவிற்கு அஞ்சலி ஒட்டத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியெல்லாம் நடந்து விட முடியாது. இது என் எண்ணம். அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடியும். நிகழ்வுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் என் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் பாருங்கள். பின்னர் ஒரு முடிவிற்கு வாருங்கள். 60 வருட கால சுதந்திரத்திற்கான போராட்டம் இது. 30 வருட காலம் தலைவரின் நேரடி பங்களிப்பு. இந்த இராணுவ முற்றுகை என்பது ஒரே இரவில் நடந்து முடிந்ததல்ல. ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக முன்னேறிய கடும் பிரயத்தனம்.

புலிகளோ வான் கலங்கள் நீர்மூழ்கிகள் திறன் மிக்க கடற்படை என்பவற்றைக் கொண்டிருந்தவர்கள். போரை எதிர்கொண்ட வேளையில் சர்வதேசத்தின் நகர்வுகளையும் எதிர்பார்த்திருந்த யுத்தம்.

சர்வதேசத்தின் ஏழை பங்காளன் சமநீதி காவலன் பங்களிப்புகளில் போர் நிறுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்ப படையெடுப்பு காலத்தில் இருந்திருக்கக் கூடும்.புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம்.நோர்வே போன்ற முகவர்களின் செய்திகள் இன்னும் கொஞ்சம் "தாக்கு"பிடிக்க கேட்டிருக்கக் கூடும். ஒபாமாவின் கருணை வேடம் "நிழல்" தரும் என ஆறுதல் பட்டிருக்கக் கூடும். அல்லது வழமை போல ஒரு "பாய்ச்சலில்" சிங்களப்படைகளை அடித்து விரட்டி விடலாம் என்ற தன்னம்பிக்கையும் காரணமாயிருந்திருக்கக் கூடும்.

இதெல்லாம் இம்முற்றுகைப் போரின் ஆரம்ப இடைக்காலங்களில் எதிர்பார்த்திருக்கக் கூடியது தான்.சாள்ஸ் ஆண்டனி காயம் பட்டபோது தயா மாஸ்டர் ஜோர்ஜ் பிடிபட்டபோது போர் பாதகமான திசையில் செல்வதை உணர்ந்திருக்கலாம். இது வரை நடந்த ஈழப்போர்களைப் போலல்லாது எதிர்கொள்ளக் கடினமான போர் என்பதை அனுபவித்திருக்கலாம்.

30 வருடப்போரை வழி நடாத்தியவர்கள் கள நிலையை ஊகித்து அறிவது ஒன்றும் கடினமானதல்ல. போரைத் தொடர்ந்த வண்ணம் சர்வதேசம் எடுக்கக் கூடிய நகர்வுகளை எதிர்பார்த்திருக்கலாம். ஏன் இந்தியத் தேர்தல் முடிவுகளை என்னைப் போல பல கணக்குகளுடன் தொடர்பு படுத்திக் காத்திருந்திருக்கலாம்.

இத்தனையும் தெரிந்தவர்கள் ஈழப்போரை இத்துடன் கருக விடுவார்களா? ஏதோ ஒரு பொழுதில் இப்போது பின்வாங்குவது பின்னர் தொடர்வது என்ற முடிவிற்கு வந்திருக்கலாம். பின் வாங்குவது ஒன்றும் போராட்டத்தில் புதிதல்ல. என்ன இந்த முறை ஈழ மண்ணில் பின்வாங்க முடியாது வேறு மண்ணிற்கு பின்வாங்கியிருக்கலாம்.

மக்களைக்காப்பதற்கு அல்லது இறுதி வரை போராடுவதற்கு பல அணிகள் விரும்பி்யிருக்கலாம். போராட்டம் தொடர்ந்ததற்கு அதுவும் ஒரு காரணம். சரணடைவதை விட செத்து மடிவது மேலாகப்பட்டிருக்கலாம். கடல் கடந்து அனைவரும் தப்பிப் போவதில் உள்ள சாத்தியக்குறைவையும் நோக்க வேண்டும்.

தலைமையும் நெருங்கியவர்களும் தப்பிச்சென்றிருக்கவே சாத்தியங்கள் உண்டு. கள முனைப்போராளிகளின் இழப்புக்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றது. சர்வதேசக் கட்டமைப்பு அப்படியே இருக்கின்றது. சில காலங்களின் பின் மீண்டும் இணைந்து செயற்படலாம். இவ்வளவும் சாத்தியமானதே.

தலைமையைத் தேடும் பொறுப்பை ராஜபக்ஸேயிடமே விட்டு விடுவோம். அதுவரை சர்வதேசத்தின் நிலை என்னவென்று பார்ப்போம்.

புலிகளால் பிடித்து வைத்திருப்பவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென்று கூவி நின்றது. இதோ கடைசி அங்குல நிலத்தில் நின்ற மக்களையும் விடுவித்தாகி விட்டது என்று சிங்களத் தரப்பு கூறுகின்றது. இதோ மக்களுக்காக ஆயுதங்களைக் கீழே வைக்கின்றோம் என்று புலிகளும் சர்வதேச தொடர்பாளர் மூலம் அறிக்கை வெளியிட்டாகி விட்டது.

ஏன் இன்னும் சர்வதேசம் காத்து நிற்கின்றது. பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் என்ன தடை. இப்போது தான் புலிகளே இல்லையே பின் ஏன் இந்த மெளனம்.

புலிகளை அழிப்பதுதான் சர்வதேசத்தின் நோக்கமாக இருந்ததா? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவி செய்வது உங்கள் நோக்கமில்லையா? புலம் பெயர்ந்து வாழும் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரம் இது.நீங்கள் வாழும் நாடுகளின் அரசுகளை முடுக்கி விடவேண்டிய நேரம்.

உயிரோடு இருக்கும் மக்களை முழுதாகக் காக்கும் நேரம். இந்தியா கள்ள மெளனம் காக்கின்றது. அமெரிக்கா ஆயுதங்களை கீழே வைக்கச் சொல்லியது. வைப்பதாகவும் சொல்லியாகிவிட்டது. இப்போது ஏன் அமெரிக்காவின் குரலைக் காணவில்லை. ஆயுதங்களைக் கீழே வைப்பது.. எஞ்சியிருக்கும் புலிகள் சரணடைவது வரை ஒத்துக்கொண்டாகிவிட்டதே.. அடுத்து என்ன?

எஞ்சியிருக்கும் மக்களையாவது காத்துக் கொள்ள மனது துடிக்கின்றது. ஏன் ஒருவரும் முன் வருகின்றார்கள் இல்லை. ஒவ்வொருவரும் பிரபாகரனைத் தேடும் ஆர்வத்தை ஏன் மக்களின் மீது காட்டவில்லை. தமிழ் மக்களே! எம் மக்களைக் காக்கும் நேரம் இது. தேவைப்படும் மருத்துவ உதவி முதல் உணவு வரை செல்வதைத் துரிதப்படுத்த வேண்டிய நேரம் இது.

சிங்களவனுக்கு பட்டாசு கொழுத்தவே நேரம் போதாது. சகல வழிகளிலும் துடிப்புடன் செயற்படும் நேரம் இது. தமிழகத்தமிழர்கள் உம் தலைவன் கலைஞரை செயல்பட கேட்கும் நேரம். கலைஞருக்கு புலிகளைத்தானே பிடிக்காது.இதோ புலிகள் இல்லை ..தமிழ் மக்கள் உதவி வேண்டி நிற்கின்றார்கள். இன்னுமா..உம் மனம் இரங்கவில்லை.. ஈழத்தமிழனே செத்தொழிந்து போவதுதானா கலைஞரின் அரசியல் ராஜதந்திரம் ..சாணக்கியம்.. உரிமையுள்ளவர்கள் கேளுங்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் உங்கள் பிரதிநிதிகளிடம் அரசுகளிடம் கேளுங்கள் இன்னும் ஐ.நாடுகள் வரை சென்று கேட்கலாம்.

புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்பட்டவர்கள் இன்னும் தீவிரமாக செயற்படும் நேரம் இது. உலகத்தில் இருக்கும் சகல மக்களையும் போல் நமக்கும் அனைத்து உரிமைகளும் இருக்கின்றது.

கீதை கூறியதைப்போல "கடமையைச் செய்வோம்"

2 comments:

ஒன்றும் தெரியாதவன் said...

நண்பா......நீ புத்திசாலி.
சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய நேரத்தில் , சொல்லக்கூடிய விதத்தில் சொல்லியிருக்கிறாய், புரிந்து கொள்ளக்கூடியவர்களும், நம்பிக்கையுடைவர்களுக்கும், மட்டுமே புரியும். நல்லதே நடக்கு.

BEST FUNDS ARUN said...

வதந்திகலாஇ நம்ப வெண்டாம்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil