ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 2, 2009


வரட்டு வாதங்களை முன்வைத்து


ஈழத்தமிழர்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பிரஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதே அளவில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அலசல்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு வெளியிடப்படும் அலசல்களில் தங்கள் ஆசைகளை நோக்கங்களைக் கூட உட்புகுத்தி சிலர் கருத்துகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். சிங்கள அரசின் மக்களை மீட்கும் போராட்டம் என்ற பரப்புரை எத்தனை பொய்மையானதோ அதனிலும் பன்மடங்கு தீங்கை விளைவிக்கக் கூடியவை இத்தகைய பரப்புரைகள்.

இத்தகைய எண்ணங்களை வெளியிடுபவர்கள் முதலில் ஈழப்போராட்டத்தின் நோக்கத்தை நன்கு புரிந்து கொள்ளப்படவேண்டும். ஈழப்போராட்டமானது ஒரு கொள்ளைக்கூட்டத்தின் பொழுது போக்கோ ஒரு மாபியாக்கூட்டத்தின் அடக்கு முறை தொடர்பானதோ அல்ல.

ஈழப்போராட்டமானது ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டமாகும். புலிகள் இயக்கம் என்பது அண்ட வெளியில் இருந்து வந்து அந்த மக்களை அடக்கியாளும் கூட்டமல்ல. அந்த மக்களிடையே இருந்து ஒன்று பத்து நூறாக இணைந்து மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கம். அந்த அளவில் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்தை தன் முதல் நோக்கமாகக் கொண்டது. போராட்ட நடை முறையில் சில பல அதிருப்திகளைச் சந்தித்திருந்தாலும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை அன்றும் இன்றும் கொண்டிருக்கும் இயக்கமே.

இதை விளங்கிக் கொள்வதும் ஒன்றும் கடினமில்லை. புலிகள் இயக்கம் இத்தனை ஆளணி வளங்களுடன் ஆரம்பத்திலிருந்தே இயங்கியதல்ல. மக்களுக்கு எதிரான இயக்கம் என்றால் ஆரம்பக்காலங்களிலிருந்தே மக்களின் துணையுடன் வளர்ந்திருக்க முடியாது. ஆரம்ப காலத்தில் இருந்த பல இயக்கங்களில் ஒன்றாகத் தான் இருந்தது. மக்களின் ஆதரவில்த் தான் பாரிய வளர்ச்சியைக் கண்டது.

புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழ் மக்களின் உதவியுடன் நிதி வளங்களைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது. இவர்கள் முன் வைக்கும் புரட்டுக் கருத்தைப்போல பிற்பட்ட காலங்களில் புலிகளின் பிரதேசத்தில் இருந்த மக்கள் பயங்காரணமாக உதவினார்கள் என்று ஒரு பேச்சுக்குக் கொண்டாலும் புலம்பெயர்தேசத்து மக்களை அவ்விதம் அடக்கி வைத்து உதவிகளைப் பெறமுடிந்திருக்காது.

மற்றது சிங்கள அரசாங்கம் கூறுவதைப்போல புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல. பெரும்பான்மை ஈழத்தமிழ் மக்களின் பார்வையில் அவர்கள் விடுதலைப் போராளிகளே. ஒரு சில நாடுகள் புலிகளைத் தடை செய்து பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்திருப்பது அவர்களின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பானதேயன்றி ஈழம் தொடர்பானதல்ல.

இந்தியாவின் தவறான ஈழம் தொடர்பான அணுகு முறையே இராஜீவின் மரணத்திற்குப் பொறுப்பு ஏற்க வேண்டுமே தவிர புலிகளோ ஈழத்தமிழ் மக்களோ அல்ல. அவர்களே பொறுப்பேற்க வேண்டுமென்று நீங்கள் வாதாடுவீர்களானால் தமிழ் மண்ணில் அராஜகம் செய்த இந்திய இராணுவ வீரர்கள் அதிகாரிகள் இராஜாங்கப் பிரதிநிதிகள் அனைவரையும் சர்வதேச நீதி மன்றின் முன் நிறுத்த நீங்கள் தயாராக வேண்டும். அத்தனை கொலைகளையும் அராஜகங்களையும் இந்திய இராணுவம் செய்திருந்தது.

இதில் எவ்விதம் அணுக வேண்டுமென்ற முடிவிற்கு நீங்கள் வரவேண்டும். இன்னும் இராஜீவின் கொலையை முன்வைத்து இந்தியா ஆழமான தவறுகளைச் செய்து கொண்டிருக்கின்றது. இரஜீவைக் கொலைசெய்ய வேண்டுமென்ற மனநிலையை அன்று உருவாக்கியது போன்ற கொதிநிலையை இன்றும் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தீராத பகையையே இந்தியாவின் பால் ஈழத்தமிழ் மக்களிடம் விதைத்துக் கொண்டிருக்கின்றது. என்ன செய்யமுடியும் ஈழத்தமிழர்களால் என்பது ஒரு புறம் இருக்க இன்னுமொரு எதிரி உருவாவதைத் தான் இத்தகைய யுத்தமுன்னெடுப்புகள் ஏற்படுத்தும்.

சிங்கள இராணுவம் பசப்பிப் பரப்பும் கருத்துகளை ஆதரிக்கும் ஒரு மனப்போக்குடன் புலிகளிடமிருந்து மக்கள் விடுவிக்கப் படவேண்டுமென்று மேதாவித்தனமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காஸ்மீரில் இந்திய இராணுவம் புகுந்து கொண்டிருப்பதைப்போல புலிகள் தமிழ் மக்களின் இடங்களில் புகுந்து கொண்டிருக்கவில்லை. அதனால் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்ற வாதமும் அடிபட்டுப்போகின்றது.

சிங்கள இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகவே அங்கு பார்க்கப்படுகின்றது. இத்தனை மக்களும் கொலை செய்யப்பட்டது சிங்கள இராணுவத்தின் ஆயுதங்களாலேயே. புலிகளின் பிடியிலிருந்து மீட்பு என்பதைப் பிரபலப்படுத்த விழையும் இவர்கள் ஏன் சிங்கள இராணுவத்தை குண்டுகள் பொழிவதை நிறுத்தும்படி கோர மறுக்கின்றார்கள்? இந்தக் கேள்வியின் பின்னாலேயே நாம் முன்பே சுட்டிக்காட்டியதைப் போல் இவர்களின் ஆசைகளும் நோக்கங்களும் இருக்கின்றன.

இந்திய மேலாதிக்க மனோபாவத்தை விரும்புபவர்களாக இருக்கக் கூடும். அல்லது இராஜீவின் கொலைக்குப் பழிவாங்கும் நடு நிலை தவறியவர்களாக இருக்க வேண்டும். அல்லது சிங்கள அரசின் பொய்ப்பிரசாரத்தை நம்புபவர்களாக அல்லது உண்மையை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும்.

உண்மையை அறியாதவர்களாயின் தேடி உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் போராடும் ஈழ மக்களுக்கும் நன்மையைத் தரும். அல்லது வேறு காரணங்களைக் கொண்டவர்களாயின் அவர்களை மறுதலிக்கவும் புறந்தள்ளவும் ஈழ மக்களுக்கு உரிமை உண்டு. சேவல் கூவி பொழுது விடிவதில்லை என்பதைப்போல நீங்கள் கூவி ஈழத்தின் விடுதலையைத் தடுக்க முடியாது.

அது இன்றோ நாளையோ அன்றி என்றோ ஒரு நாள் அடையப்பட்டே தீரும். ஈழவிடுதலையில் நாட்டம் கொண்டவர்களும் ஈழ நலன் விரும்பிகளும் இத்தகைய வரட்டு வாதங்களை முன் வைப்பவர்களை இனங் கண்டு புறந்தள்ள வேண்டும். அது எம் மன உறுதியை வளர்த்துக் கொள்ள உதவும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil