கலைஞரின் உண்ணாவிரதம் சாதித்தது என்ன?
பலரும் அதன் சாதக பாதக அனியாயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை கருணாநிதியும் ராஜபக்சவுமே அறிவர். சோனியா சூத்திரதாரி என்றால் இவர்கள் ஏவல் கம்புகள்.
கலைஞரின் பேச்சை மதிக்காத  (இருக்காதா பின்னே? எத்தனை அவமானம். ஆனானப்பட்ட கலைஞரே மூக்குடைபட்டார் என்று தானே உடன் பிறப்புகள் எல்லாம் வெறுத்துப் போய் இருக்கின்றார்கள்)
காங்கிரஸுடன் கூட்டணியில் இன்னும் தன்மானத்தலைவன் கலைஞர் கருணாநிதி இருக்கின்றார் என்பதே ஒம்பதாவது உலக அதிசயமாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பேசப்படுகின்றது.
முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழ்ப் பெண்ணின் பரம்பரையில் பால் குடித்து வளர்ந்த கலைஞர் இன்னும் கூட்டணியில் இருக்கின்றார் என்பதில் அரசியல் சாணக்கியம் ஒழிந்திருபதாக வாதிடும் உடன் பிறப்புகள்  அந்த மர்மத்தை அறிந்திட ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உரிக்க உரிக்க ஒன்றுமில்லாது போகும் வெங்காயம் கலைஞரின் தந்திரங்கள்  என்றறியாது அவர்கள் ஆயுளுக்கும் உரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.... பாவம் .
உழைத்த களைப்பில் உறங்கி விடாது கடுமையாக உழைத்திட வேண்டுமென்ற கலைஞரின் வேண்டுகோலை (இது எழுத்துப் பிழையல்ல) பிடித்து  கழகப் பெருமைகள்  பழைய  பீற்றல்கள் பற்றி மொக்கைப் பதிவு போடுவது , கலைஞருக்கும் கழகத்திற்கும் எதிராக எழுதுபவர்களின் பதிவில் எதிர்ப் புள்ளடி குத்துவது, வயது போன பதிவர்கள் அந்த நாள் கலைஞரால் மண்டைக்குள் அடித்து அனுப்பிய மூளைச் சலவை சோப்பில் உதிர்ந்த மயிர்களை ஒவ்வொன்றாக வெளியெடுத்து பாலபாடம் நடத்திக் கொண்டிரு்ப்பது போன்ற இன்னோரன்ன காரியங்களில்   மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் யாருமே இதுவரை இறந்து கொண்டிருக்கும் எம் ஈழத்துச் சகோதரர்களுக்கு கலைஞர் இவ்வாறு துரோகம் செய்வது சரியில்லை என்று கூறவில்லை. அவர்களின் பகுத்துணரும் தன்மையைத் தானே உணர்ச்சி ஏற்றி  ஏற்றி கலைஞரும் மற்றவரும் வற்றக் காய்ச்சி விட்டார்களே. இப்போது இருப்பது உடன் பிறப்புகள் என்ற பெயரில் வெற்றுப் பித்தளைப் பாத்திரம் தானே.
வெற்றுப் பாத்திரத்தில் எதைப்போட்டாலும் ஏற்றுக்கொள்ளும். அதனுள் போடப்படும் பொருளின்  கார அமிலத்தன்மைகளை அது எப்படி அறியும். அது உணர்வற்ற வெற்றுப் பித்தளைப்  பாத்திரம் தானே. சமயத்தில் குப்பைகளையும் சுமந்து வந்து அவை கொட்டும்.  அதைப்பற்றியும் அவற்றிற்கு ஏது கவலை.
எல்லாப்பொழுதிலும் ஒன்றை நாம் சிந்திக்க மறந்து விடுகின்றோம். தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்த் தெரியும் என்று தமிழில் வழக்கு ஒன்று உண்டு.  ஈழத்தின் துயரங்கள் எதிரிக்கும் வேண்டாம் விட்டுவிடுவோம். மும்பையில் நடந்தது போலவோ டில்லியில் நடந்தது போலவோ ஒன்று தமிழகத்தில் நடந்தால் அப்போது எமக்கெல்லாம் உணர்வு வரும்.
இரத்தம் சிவப்பு என்பதுவும் இழப்பு பெருந்துயரம் என்பதுவும் அப்போது உறைக்கும். கண்டு கொள்ளாத அரசு பற்றியும் ஆட்சி பற்றியும் கோபம் வரும். மனிதச் சங்கிலி நடத்துவதும் ,தந்தி அடிப்பதுவும் , மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருப்பது பற்றியும்  கிலாகித்துப் பதிவு எழுதவா முடியும்?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடனே நடவடிக்கை எடுங்கள் என்று கேட்கத் தோன்றாது? வீதியில் இறங்கிப்போராடத் தோன்றாது?  ஏன் இப்போது மட்டும்  அவ்விதம் தோன்றவில்லை. அவர்கள் வேறு நாங்கள் வேறா? தொப்பூள் கொடி உறவு ,சகோதரர்கள் என்பதெல்லாம் எங்களை மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்பற்காகவா?
கிழச்சிங்கம் உறுமியதா இந்த உண்ணாவிரதம்? அது ஈழத்துச் சகோதரர்களை வயிறு முட்டத் தின்றுவிட்டு ஏப்பம் விட்டது போலல்லவா எனக்குப் பட்டது. இன்னும் இன்னும் இரத்தத்தின் சுவை தேடி ஊளையிட்டது போலல்லவா தோன்றியது.
எப்படி உங்களால் இப்படியெல்லாம் காரியமே இல்லாத ஒன்றிற்கான காரணத்தைக் கற்பிதம் செய்ய முடிகின்றது. தலை கிழிந்து கிடந்ததும் இரத்தம் இறைந்து இறந்ததும் எம் சொந்தமில்லதவிடத்து இது தானா நமது பிரதி பலிப்பு.
இது தானா நாம் வாய் கிழயப் பேசும் மனிதாபி மானம். இது தானா? வேதங்களும் ஆகமங்களும் தோன்றிய மண்ணின் செயற்பாடு. அஹிம்சையைப் போதித்த  நிலம் தானா இது?
கலைஞரோடு ஏனிந்தக் கோபம்? நிறையக் காரணங்கள் இருக்கின்றது. இன்றைய தமிழகத்தின் அதிகாரம் அவரிடம் இருக்கின்றது. மத்தியில் இருக்கும் காங்கிரஸின் கடிவாளம் அவரிடம் இருக்கின்றது. ஏதாவது செய்து  கலைஞர் எங்களைக்காப்பார் என்ற நம்பிக்கை ஈழத் தமிழ் மக்களிடம் இருக்கின்றது. இத்தனை இருந்தும் கலைஞர் ஒரு துரும்பைத்தன்னும் தூக்கிப் போடவில்லை.
உடன்பிறப்புகளோடு ஏன் இந்தக் காய்ப்பு? அதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. மறுதலையாக குடிகள் எவ்வழி அரசன் அவ்வழி. உடன் பிறப்புகள் கலைஞரின் வாக்கு வங்கிகள். அவர் எப்போதும் மக்களை நம்புவதில்லை. உடன்பிறப்புகளிற்கு காயடித்து கடைசிச் சொட்டு இரத்தம் காயும் வரை வேலை வாங்கும் தந்திரம் தெரிந்தவர் கலைஞர். அடுத்த ஐந்தாண்டுகள் அவர்களை மறந்திருக்கவும் பின் நினைத்துக் கொள்ளவும் தெரிந்தவர்.
அதனாலேயே அவர் தலைவராய் இருக்கின்றார். உடன்பிறப்புகள் கைத்தடிகளாக இருக்கின்றார்கள்.
ஆனால் இன்றுள்ள பிரச்சினை உங்களைப்போல இரத்தமும் சதையும் உள்ள சகமனிதனின் சாவு. இது கட்சிப்பிரச்சினை அல்ல. தேர்தல் விடயமும் அல்ல. மனிதாபிமானப் பிரச்சினை.
தேவை உடனடி யுத்த நிறுத்தம். அனியாய உயிர் இழப்பின் நிறுத்தம். கலைஞரால் இதைச் செய்ய முடியும் . அதுவும் உடனடியாகவே. கலைஞர் நிர்ப்பந்தம் செய்தால் காங்கிரஸ் மீற முடியாது. வடக்கில் கூட்டணிக்கட்சிகளும் காங்கிரஸைப் பெருமளவில் கை விட்ட நிலையில் தெற்கு மாநிலங்களின் ஆதரவின்றி  காங்கிரஸ் ஆட்சியில் இருக்க முடியாது என்ற நிலையில் இது இன்னும் சாதகமானது.
கலைஞருக்கு கருணை இருக்கவில்லை. அதைத்தட்டிக்கேட்க உடன் பிறப்புகளுக்கு மனமிருக்கவில்லை.
இது இன்றும் இறந்து கொண்டிருப்பவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வு. அதை பார்க்கத்தான் அதிகம் பேர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களும் இங்கு உணர்வுடன் இல்லை.
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment