ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 3, 2009


விடாக் கண்டன்


"விடாக் கண்டன் கொடாக் கண்டன் ' என்று ஒரு சொல்வழக்கு தமிழில் இருக்கின்றது. அது இன்று சிறிலங்காவின் சிங்கள அரசிற்குத் தான் பொருந்தும். அத்தனை தூரம் ஒரு கடுமையான நிலைப்பாட்டில் அது இருக்கின்றது.

எவ்வளவு தூரம் என்றால் 'மேற்கு நாடுகள்" எங்களுக்குப் பாடஞ் சொல்லித்தர வேண்டியதில்லை" என்று நேரிடையாகவே மோதிக்கொள்ளும் வரையில் அது துணிவு பெற்று விட்டது. இவ்வளவிற்கும் காரணம் அதன் பின்னால் சீனா பலமாக இருப்பது தான்.

அதனாலேயே இந்தியாவின் போக்கில் இந்தப்பிரச்சினையை விட்டு விட்டு இதுவரை வாளாவிருந்த மேற்குநாடுகள் முடியாத கட்டத்தில் இப்போது நேரடியாகவே களம் இறங்கியுள்ளன.

ஆனால் சிங்கள அரசு சீனாவைத் தவிர யாருடைய பேச்சிற்கும் செவி கொடுக்கும் நிலையில் இல்லை. அண்மையில் ஐ.நாடுகள் தலையீடும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஞ்ச்னர் ஆகியோரின் இலங்கைக்கான பயணம் எதுவித பயனையும் தரவில்லை. அதே பொழுதில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ல் பில்ற்டிற்கான விசா அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.

இப்போது செய்மதி ஒளிப்படங்கள் வெளியிடப்பட்ட விவகாரத்தில் கொழும்புக்கான ஐ.நாடுகள் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் பூனேயை வெளியேற்றுவது பற்றி இலங்கை ஆலோசிக்கின்றது.

இது எப்படியென்றால் சர்வதேச சமூகத்தை அலட்சியம் செய்து தமிழர் மீதான பயங்கரவாதத்தை முன்நடாத்தவே இலங்கை முயற்சிப்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

சுருக்கமாகச் சொன்னால் ஸ்டேட் டெடறிஸ்ட் ஆக அதாவது அரசே பயங்கரவாதச் செயல்களை முன்னெடுக்க விரும்புகின்றது.

இதனால் அரண்டு போன மேற்கு நாடுகள் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்தைச் சேர்த்து ஆராய முடிவெடுத்திருக்கின்றன. இதுவரை அவ்வாறு செய்யாமல் கவனமாகத் தவிர்த்தே வந்திருக்கின்றன என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.

இந்திய முன்னாள் இராஜதந்திரி இராஜீவ் டோக்ரா சொல்வதைப் போல் இலங்கை மீதான பிடியை சீனாவிடம் இந்தியா தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றது. இந்தியாவின் பிழையான செயல்முறைகள் மேற்கு நாடுகளையும் சிக்கலில் மாட்டியுள்ளன.

சீனாவின் உதவி சிறிலங்காவை ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையிலும் பாதுகாத்துக் கொடுக்கும். அந்த நன்றி விசுவாசம் காரணமாக சீனா இலங்கையில் இலகுவாக உள்நுழைந்து விடும்.

சீனாவின் பிடியில் இருந்து சிறிலங்காவை விடுவிக்க இப்போதிருக்கும் சிங்கள அரசிற்கு நெருக்கடி கொடுப்பது,அதற்கும் உடன்படாதபட்சத்தில் அரசை மாற்றுவது போன்ற படிமுறைகளில் மேற்குலகம் செயல் படும். சிங்கள அரசை மாற்ற வேண்டிவரின் இப்போது நடை பெறும் போரில் ராஜபக்ஸே அரசு தோற்கடிக்கப்படவேண்டும். அதற்கான செயற்பாடுகளில் மேற்கு இறங்கும் போது தமிழர் கை மீண்டும் ஓங்கும்.

சிறிலங்கா மீது மேற்கு நாடுகள் சுதந்திரமாகச் செயற்பட இந்தியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் -காங்கிரசைத் தவிர்ந்த எந்த ஒரு ஆட்சியும் - அவசியம்.

இல்லாவிடில் காங்கிரஸ் சொல்வதைப்போல தெற்கிலிருந்தும் எதிரிகள் இந்தியாவிற்குள் நுழைவர். அவ்வாறு சொல்லிக்கொண்டே அதற்கான கதவுகளைத் திறந்துவிடுவதும் காங்கிரஸே என்பதை அறியாத முட்டாள்களின் கையில்த் தான் ஆட்சி இருக்கின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil