ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, May 14, 2009


புலிப் பயங்கரவாதிகள்?


மீண்டும் ஒரு முறை ஐ.நாடுகளின் பாதுகாப்புச்சபை மூடிய கதவுகளுக்குள் விவாதித்து அறிக்கை விட்டிருக்கின்றது.

அந்த அறிக்கையில், "இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்ஸில் ஆழ்ந்த கவலையை வெளியிடுவதோடு. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும் இதனைக் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கி அம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும்,விடுதலைப்புலிகள் பல வருடங்களாகத் தொடர்ந்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பொதுமக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருவதையும் கண்டிக்கும் அதேவேளை பயங்கரவாத்தைத் தோற்கடிப்பத்கு இலங்கை அரசுக்கு உள்ள சட்டபூர்வ உரிமையையும் ஏற்றுக் கொள்கிறது.

அத்தோடு விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும் மோதல் பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. அதேவேளை பாதுகாப்பு வலயப் பகுதியில் அகப்பட்டுள்ள மக்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குவதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும். அத்தோடு அப்பகுதியில் அகப்பட்டுள்ள மக்கள் வெளியேற பாதுகாப்பான வழிமுறைகள் உருவாக்கப்படுவதோடு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் எனவும் கவுன்ஸில் கேட்டுக் கொண்டுள்ளது."

இவ்வாறு அதன் அறிக்கை நீண்டுகொண்டு செல்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் செத்து மடிந்தாலும் தாம் போட்டு வைத்திருக்கும் பாதையில் தான் மற்றவர்கள் பயணிக்க வேண்டும் என்று இந்த நாடுகள் நினைப்பது எப்படி நீதியும் நியாயமும் மிக்கதாக இருக்க முடியும்.

இதே இவர்களின் சர்வதேச நீதியையும் நியாயங்களையும் தமக்கேற்ற விதத்தில் வளைப்பதுவும் வரைவதுவும் இவர்களுக்கு கை வந்த கலை. இதே நீதியையும் நியாயங்களையும் இவர்கள் மீறியதற்கும் உதாசீனப்படுத்தியதற்கும் நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன.

ஐ.நாடுகள் என்ற போர்வையில் தம் இராணுவ பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பல கொடுங்கோலர்களை வளர்த்து விட்டதுவும் வேண்டாத காலங்களில் அவர்களை அழித்து விட்டதுவும் ஒன்றும் அம்மக்களின் நலன் மீது கொண்ட காதலினால் அல்ல என்பதுவும் அனைவரும் அறிந்தது தான்.

இன்று ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து மக்களைக் காத்துக் கொள்ள உடனடியாகச் செய்ய வேண்டியது போர் நிறுத்தமே. இத்தனை அமைப்புக்களையும் தம் கைப்பாவையாக ஆட்டிக்கொண்டு அறிக்கைகளையும் கண்டனங்களையும் வெளியிடும் இவர்கள் அதனையொன்றும் அறியாதவர்கள் அல்ல.

சிங்கள இராணுவப் படையெடுப்பின் முன்னால் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் இருந்த போதும் இத்தகைய ஒரு கோர அழிவு நிகழ்ந்திருக்கவில்லை. இன்றைய அளவு கணக்கில்லாத அழிவிற்குக் காரணம் சிங்கள கொடுங்கோல் படையின் ஆயுதங்களும் ஆக்கிரமிப்பு மனோபாவமுமே.

ஆகவே உண்மையிலேயே இவர்களுக்கு தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருக்குமாயின் படை நடவடிக்கைகளை நிறுத்துவதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல இனவிடுதலைப்போராளிகள் என்பதே இன்றும் பெரும்பான்மையான தமிழ் மக்களின் எண்ணமாகும். இந்நாடுகள் சொல்வதைப்போலவே பயங்கரவாதிகள் என்றே ஒத்துக்கொண்டாலும் அவர்கள் ஒன்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காதவர்கள் அல்ல.

மேற்கு நாடுகள் நோர்வே மூலம் முன்னெடுத்த பலதரப்பு பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டவர்களே. அவர்களின் நிபந்தனைகள் சுதந்திர தமிழீழம் தொடர்பானதாக இருந்ததே தவிர சிறிலங்கா உட்பட பிறநாடுகளில் தலையிடுவதாகவோ கைதிகள் பரிமாற்றமாகவோ ஏன் பணப்பட்டுவாடா தொடர்பானதாகவோ இருக்கவில்லை.

அவர்கள் தம் மண்ணில் இருந்து போராடுபவர்களாக இருக்கின்றார்களே தவிர இரட்டைக்கோபுர தகர்பு போன்றோ மும்பாய் டில்லி போன்ற நகரங்களில் ஊடுருவிய தாக்குதலையோ நடாத்தவில்லை. இத்தகைய காரியங்களைச் செய்த பயங்கரவாதிகள் சேமமாக இருக்க அவர்கள் இருக்கும் மண்ணில் யாரும் பொது மக்களைக் கொன்று கொண்டிருக்கவில்லை.

இந்திய மண்ணில் வந்து தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளின் மயிரைக்கூட இந்தியாவால் தொட முடியவில்லை. பின்லாடனின் பின்னங்காலைக் கூட அமெரிக்காவால் நெருங்க முடியவில்லை. ஆனால் ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்பதைப்போல சுதந்திர வாழ்க்கைக்காகப் போராடும் புலிகளை ஆயுதத்தை கைவிடுமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

வயதில் குறைந்த சிறுவர்களைப்படையில் சேர்த்துக்கொள்வது கூட சிறுவர்களின் எதிர்காலம் குறித்து தவிர்த்துக் கொள்ளலாமே தவிர இவ்வாறு வகைதொகையில்லாது வீணே செத்து மடிவதை விட போராடி இறப்பது மேலானது தான். இதைக்குறை கூறும் இந் நாடுகள் அப்பாவிப் பெண்கள் குழந்தைகள் சிறுவர் சிறுமியர்கள் முதியவர்கள் என்று கொன்று போடும் சிங்கள பேரினவாதிகளின் தவறுகளை சப்பைக்கட்டு கட்டி மூடி மறைக்கின்றன.

"பயங்கரவாத்தைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசுக்கு உள்ள சட்டபூர்வ உரிமையையும்.."

எது பயங்கரவாதம்? அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்ட மககள் அப்பயங்கரவாதத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது பயங்கரவாதம் என்றால் ..சிங்கள அரசு செய்வது என்ன?

இதே நாடுகள் புலிகள் பயங்கரவாதிகள் என்று எத்தனை கூவித் திரிந்தாலும் தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. நீதிக்கும் நியாயத்திற்கும் மனுதர்மத்தின் முன்னாலும் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல..வேண்டுமானால் மற்றவர்களையும் சுதந்திரமாக இயங்கவிடாத அதிகப்பிரசங்கிகளாக இருக்கலாம். அது ஒன்றும் பெரிய குற்றமல்ல. இதை விட மனித குலத்திற்கே அழிவை உண்டுபண்ணும் பயங்கரவாதிகள் நம்மிடையே உண்டு.

இன்று ஈழ மண்ணில் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக எதுவும் செய்ய முயலாத உலகம் நாளை சுதந்திர ஈழத்தில் தலையிடும் தார்மீக உரிமையையும் இழக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment:

ttpian said...

பிரிட்டன்,பிரான்சு,இங்கிலாந்து,வெளி நாட்டு அமைசர்கல் கவலை!
என்ன கவலை?
இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத வியாபாரம் அதிகமாக அக வேண்டும்!
போன்கடா,திருட்டு வெள்ளை பண்றிகலே!
இனிமேல் என்னால் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கிடையாது!
கையாலாகாத தமிழன்!
100 ரூபாய் வான்கி கொண்டு கை சின்னத்துக்கு வோட்டு போட்ட சொரனை இல்லாத முண்டங்கலை நான் அறிவேன்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil