ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Sunday, May 17, 2009
2 ஆயிரம் போராளிகளுடன் பிரபாகரன்
"படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே 2 ஆயிரம் போராளிகளுடன் பிரபாகரன் இருக்கின்றார்": செ.பத்மநாதன் தகவல்
திங்கட்கிழமை, 18 மே 2009, 05:45 மு.ப
"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பகுதியிலேயே இப்போது இருக்கின்றார். அவருடன் 2 ஆயிரம் போராளிகளும் இருக்கின்றார்கள்" எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருக்கத் தயாராகவிருக்கின்றார்கள் என்ற அறிவித்தல் கூட பிரபாகரனின் உத்தரவின் பேரிலேயே வெளியிடப்பட்டது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது சரணடைவதோ ஆயுதங்களைக் கையளிப்பதோ அல்ல. அப்பகுதியில் படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சிச் சேவையான 'சனல் - 4' தொலைக்காட்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அளித்த பிரத்தியேகப் பேட்டியின்போது பத்தமநாதன் தெரிவித்தார்.
அவரது பேட்டியின் விபரம்:
விடுதலைப் புலிகளின் பிந்திய நிலைப்பாடு என்ன?
எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.
எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?
2 ஆயிரத்துக்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக்கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித்தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.
அவர்கள் பொதுமக்களா?
ஆம்.
சிறிலங்கா அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கின்றீர்கள்?
போரை நிறுத்துவது தொடர்பாகவும், உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாம் நேற்று தொடக்கம் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
இந்த போர்கள் எல்லாவற்றுக்கும் பின்னர் போர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதா?
ஆம். நாம் இந்த போரை நிறுத்திக்கொள்வதற்கே விரும்புகின்றோம்.
நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்... விடுதலைப் புலிகள் கெரில்லா போர் போன்ற முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?
நான் நினைக்கின்றேன், கடந்த 38 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்திவருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்... நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக்காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.
புலிகள் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எவ்வாறான உத்தரவுகள் வந்திருக்கின்றன?
பிரபாகரன்தான் உண்மையில் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். நான்கு மணித்தியாலங்களாக நான் அவருடன் பேசினேன். அவர்தான் இந்தச் செய்தியை சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் தந்திருக்கின்றார். அதற்கான பதிலுக்காக நாம் காத்திருக்கின்றோம். இதுவரையில் இதற்கான பதிலை யாரும் தரவும் இல்லை. யாரும் போரை நிறுத்தவும் இல்லை.
பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியிலா இருக்கின்றார்?
ஆம்.
நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?
சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப்போவதில்லை.
ஏன் கையளிக்க மாட்டடீர்கள்?
உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் விடுதலைப் போராட்டத்துக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் கையளிக்க வேண்டும்?
விடுதலைப் புலிகள். ஏன் இவ்வளவு மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது? அவர்களை வெளியே செல்ல ஏன் அனுமதிக்கவில்லை?
நாம் பொதுமக்களை ஒருபோதும் எம்மிடம் வைத்திருக்கவில்லை. அந்தப் பொதுமக்கள் எங்களுடைய உறவினர்கள் அல்லது குடும்பத்தவர்கள். அல்லது சிறிலங்கா இராணுவம் தமக்குப் பாதுகாப்பை ஒருபோதும் தராது என நம்புபவர்களாக அவர்கள் இருக்கலாம். முகாம்களுக்குச் செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் சிறிலங்கா படைகளிடம் செல்வதற்கு விரும்பவில்லை. அரசாங்கம் அவர்களுக்கான மருந்துகளையும் உணவுப் பொருட்களையும் நிறுத்தியது. அவை இல்லாமல் மக்கள் மரணமடைந்தார்கள். நாம் மனிதர்களை ஒருபோதும் கேடயங்களாகப் பயன்படுத்துவதில்லை. அது தவறான தகவல். தவறான பிரச்சாரம்.
பொதுமக்கள் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மையில்லையா?
உண்மையில் நாம் அவர்களைச் சுடவில்லை. துப்பாக்கிச் சண்டையின் இடையில் அவர்கள் அகப்பட்டிருக்கலாம். எமது மக்களை எதற்காக நாம் கொல்ல வேண்டும்?
வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டிகளைக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு மருத்துவர்கள் காணாமல் போய்விட்டனரா?
கடந்த இரவு ஒரு மருந்துவர் காயமடைந்தார். நாம் அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பிவைத்தோம். இப்போது நாம் அறியும் தகவலின்படி மருத்துவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். மற்றவர் இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?
பதில்: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணிநேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாம் சொல்கின்றோம். ஆயுதங்களைக் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக்காண விரும்புகின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment