ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 10, 2009


ஈழத் தமிழர்களுக்காக நாடே அழுகிறது


ஈழத் தமிழர்களுக்காக நாடே அழுகிறது..

இலங்கையில் தமிழ் சகோதரர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. இலங்கை தமிழர்கள் ரத்தமும், நம் ரத்தமும் ஒன்றுதான். இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமையுடன் வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க, ஆட்சி அமைய வேண்டும்.

இது நரேந்திரமோடி கன்னியாகுமரியில் வைத்து இன்று சொன்னது. வடக்கைத்தாண்டி தெற்குப்பக்கம் வரும் போது எல்லாத் தலைவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் ஞாபகம் வந்து விடுக்கின்றது. பா.ஜ.க வின் அத்வானியில் இருந்து பகுஜன் சமாஜ் மாயாவதி வரை ஈழத்தமிழர்களின் துன்பங்களைத் தீர்க்க துடிப்பதாக பாவ்லா காட்டுகின்றனர்.

ஈழத்தமிழர்களின் துயரத்திற்கெல்லாம் காங்கிரஸ் அரசை நோக்கி இவர்கள் கையை நீட்டினாலும் ஈழத்தமிழர்களுக்காக ஒரு துரும்பைத்தன்னும் தூக்கி இவர்கள் போட்டதில்லை.
சிங்கள அரசிற்கான இராணுவ உபகரண உதவிகளை இந்தியாவே வழங்குகின்றது என்பது உலகத்திற்கே தெரிந்திருந்தபோதும் அதைப்பற்றி இந்த எந்த அரசியல்வாதியும் இந்தியாவின் தலையீட்டையோ உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கோ குரல் கொடுத்திருக்கவில்லை.

ஆனால் இன்று தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக மக்களின் வாக்குகளை நயவஞ்சகமாக அபகரிக்க திட்டம் போட்டுக் கருணையாளர்களாக வேஷம் போடுகின்றனர்.கண்ணீர் விட்டு அழுதால் மட்டும் போதுமா? உடனடி யுத்த நிறுத்தத்தை ஏன் இவர்கள் கோரவில்லை.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்தும் மத்திய அரசின் கூட்டிச் சதிக்கு துணை போகும் இவர்கள் மக்களின் கண்ணீரையே பேரம் பேசுகின்றனர்.

இன்று ஈழத்தமிழருக்கு ஓரளவேனும் ஆறுதலைத் தருவது ஜெயலலிதாவின் பேச்சுக்களே. அதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ.

ஈழத்தமிழர் தேசத்தின் விடுதலை என்பது ஈழத்தமிழ் மக்களின் கைகளிலேயே என்பதை இறுதி வரை மறக்காது இருக்கவேண்டும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil