ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, May 11, 2009
காணாமல் போகப்போகும் காங்-தி.மு.க கூட்டணி
இறுதிக்கட்ட தேர்த்லுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. தேர்தலின் முடிவுகள் அரசல் புரசலாகத் தெரியத் தொடங்கி விட்டன. களநிலபரம் சார்ந்த ஊகங்களில் காங்கிரஸ் கூட்டணியின் கால் பல இடங்களில் வாரிவிடப்பட இருக்கின்றது. தமிழகத்தில் அதன் நிலை அதலபாதாளத்தை நோக்கிச் செல்லும். வன்னியில் அழிவுகள் பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும் காங்-தி.மு.க கூட்டணியின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் ஆணியாக மாறி இறங்கிக்கொண்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவுத்திடலில் "தூக்கி" நிமிர்த்த இறுதி நேரத்தில் காங்கிரஸ் தலைமையாலும் தி.மு.க தலைமையாலும் காய்ச்சல் கழிசல் எல்லாவற்றையும் ஒத்தி வைத்து எடுக்கப்பட்ட முயற்சி புஷ்வாணமாகிப்போய் விட்டது. வடித்தெடுக்கப்பட்ட தி.மு.க காங்கிரஸ் தொண்டர்களே திடலை நிறைத்திருந்தமையினால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் ஒன்றும் உருவாகப்போவதில்லை.
காங்கிரஸிற்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களின் எதிர்ப்பின் தீவிரத்தைப் பார்த்து சோனியாவைக் கொண்டு "வீதியில் வெள்ளோட்டம்"விடும் முயற்சி கனவாகிப் போய்விட்டது.
அந்தளவிற்கு ஈழநெருப்பு சுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்ததை கண்டு வீதியில் கால் வைக்கவும் பயந்து ஆகாய மார்க்கமாகவே அள்ளி அனுப்பிவிட்டார்கள்.கடைசியில் இது தோல்வி ஜீரத்தில் துவண்டு போய் இருக்கும் காங்.தி.மு.க தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் நோக்கத்திலும் வெற்றி பெறவில்லை. தி.மு.க தலைமை 50, 60 ஆம் ஆண்டுகால அரசியல் ஸ்டண்ட் வேலைகள் மக்களிடம் எடுபடாது போனதில் மிகவும் அப்செட்டாக இருக்கின்றது.
புதிய யுத்திகளைச் சொல்லிக் கொடுக்கும் "அறிவாளி"களையும் அயலில் அண்ட விடாத "குடும்ப" அரசியல் வியூகம் இத் தேர்தலில் பெரும் தோல்வியைப் பெற்றுக்கொடுக்கப்போவதை ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனும் பெருமூச்சுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.தசாப்தங்களைக் கண்ட கலைஞ்ரின் அரசியல் வாழ்வு நாயும் சீண்டாத பண்டமாகப் போவதில் அவனின் உள்ளக் கவலை உண்மையானது.
காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.க வும் மீண்டெழ முடியாத ஒரு வீழ்ச்சியைச் சந்திக்க இருக்கின்றது.
காங்கிரஸின் நிலையோ அறுந்த பல்லி வால் போல துடித்துக் கொண்டிருக்கின்றது. பல கடந்தகால கூட்டணிக்கட்சிகள் இத்தேர்தலில் பிரிந்து எதிரெதிராக களத்தில் நிற்பது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைப் பிரித்து நிற்கின்றன.அதே நேரம் உ.பியில் மாயாவதியின் விசுபரூபம் மற்றும் ஆந்திராவில் சஞ்சீவி போன்றோரின் புதிய வரவுகள் பிரிக்கப்போகும் வாக்குகள் மற்றைய கட்சிகள் போலவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை நலிவடையச் செய்யப்போகின்றன.
காங்கிரஸைப் போலவே பா.ஜ.க வும் சொல்லிக்கொள்ளும் விதத்தில் வாக்குகளை அள்ள முடியாது போனாலும் காங்கிரஸின் நிலமை மிகவும் நலிவடைந்து போகும். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் வேறு கங்கிரஸின் மீதான வெறுப்பாகப் படர்ந்திருக்கின்றன. டில்லி ,மும்பாய் போன்ற பகுதிகளில் இடம் பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய கட்சியை மக்கள் தேடுவதும் பா.ஜ.க விற்கு வாய்ப்பாக இருக்கின்றன. குஜராத் ,மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பா.ஜ. க சொல்லிக் கொள்ளும் விதத்தில் வெற்றி பெறக்கூடும்.
அந்த நம்பிக்கையிலேயே அ.தி.மு.க வுடன் தேர்தலுக்குப் பின்னரான கூட்டணிக்கு இப்போதே அறை கூவல் விடுக்கப்படுகின்றது. பா.ஜ.க வின் வியூகத்தில் அ.தி.மு.க போலவே பகுஜன் சமாஜ் மாயாவதி மற்றும் பீகார் லல்லு பிரசாத் யாதவ் போன்றோர் இருக்கின்றனர். இவர்களை இணைத்து பா.ஜ.க வின் ஆட்சியை அமைக்கும் மும்முரத்தில் பா.ஜ.க வின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தீவிர நாட்டம் காட்டுகின்றனர்.
ஆட்சியிலிருந்து அகலப் போகும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதென்பது இப்போதைக்கு நடக்கப்போவதில்லை. அதற்கு காங்கிரஸில் இப்போதைக்கு மக்கள் ஆதரவைக் கவர்ந்திழுக்கக் கூடிய தலைவர்கள் இல்லாதது பெரிய பின்னடைவு. சோனியாவை சுதேசியாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் மக்கள் இல்லாததும் ராகுல் கவர்ச்சி மக்களிடம் எடுபடாமல் போனதும் பெரிய காரணங்களாகும்.ராகுலின் கவர்ச்சி காற்றுப்போன பலூனைப் போல போனதற்கு அவர் சொந்தத் தொகுதியிலேயே 45%இற்குக் குறைவான வாக்குப்பதிவே சாட்சியம்.
ஒரு வேளை பிரியங்காவை முன்னிறுத்தினால் இழந்து போன செல்வாக்கை மீட்டு வரக் கூடுமாயினும் அதற்காக காங்கிரஸும் நேரு குடும்பமும் பல விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். அது பின்னர் வதேரா குடும்பத்தின் கையில் காங்கிரஸையும் இந்தியாவையும் ஒப்படைக்கும் துயரத்தையும் ஏற்படுத்தலாம்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் தி.மு.க வின் வீழ்ச்சி மற்றுமொரு எம்.ஜி.ஆர் சகாப்தத்தை நினைவூட்டும் வண்ணம் நடந்தேறும். இன்னும் இரண்டு வருடங்கள் தி.மு.க வின் ஆட்சிக்காலம் இருந்த போதும் அவ்வளவிற்கு நீடிக்க விடும் பொறுமை ஜெயலலிதாவிடம் இருக்கப் போவதில்லை. இன்னும் ஒரு வருடத்திற்குள் இடம் பெறவைக்கப்படப் போகும் மாநில தேர்தலில் இதே ஈழ ஆதரவு அலையாலும் இதே கூட்டணிப்பலத்தாலும் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றும்.
எதிர்வரும் தேர்தல்களில் கலைஞர் இல்லாது சந்திக்கப்போகும் தேர்தல்கள் தி.மு.க விற்கு கடினமானதாகவே இருக்கும். ஈழத்தில் அமைதி நிலை திரும்பும் வரை தி.மு.க மீதான மக்கள் கோபம் தொடர்ந்திருக்கப் போவதும் ஸ்டாலினது அல்லது அழகிரியின் தலைமையை ஏற்க மக்கள் பழக்கப்பட வேண்டியதற்கும் எடுக்கும் காலம் தி.மு.க விற்கு ஆட்சி வாய்ப்பை விரைவில் கொடுக்கப்போவதில்லை.
இடையில் ஏற்படக் கூடியதான அரசியல் அதிரடி மாற்றங்கள் - ரஜனியின் திடீர் அரசியல் பிரவேசம் போன்றன - தி.மு.க வின் வாங்கு வங்கியை மேலும் சிதறடிக்கப் போவதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அ.தி.மு.க வைப் பொறுத்தளவில் ரஜனி ஒரு எதிரியாகவே பார்க்கப்படுவது அன்றும் இன்றும் நடப்பது தான். அதனை அ.தி.மு.க வின் தொண்டர்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றார்கள். ஆனால் தி.மு.க வைப் பொறுத்தவரை ரஜனி ஒரு ஆதரவு சக்தியாகவே தி.மு.க வில் பார்க்கப்பட்டு வருவது - ஜெயலலிதாவிற்கு வாக்களித்தால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது போன்ற வசனங்கள்- தி.மு.க விற்கு வெற்றி வாய்ப்பை கடந்த காலத்தில் பெற்றுக் கொடுத்திருப்பது, இரண்டு கட்சிகளாலும் மறக்க முடியாததாகவே இருக்கின்றது.
ரஜனியின் அரசியல் பிவேசம் நிகழ்ந்தால் தி.மு.க -ரஜனி இணைப்பு அ.தி.மு.க வை ஈடு செய்யப் போதுமாயிருக்கும். அதனை தி.மு.க புதிய தலைமை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அதனால் ஏற்படும் இழப்புகளிற்கும் குடும்ப ஆட்சியின் பிடியை நழுவ விடுவதற்கும் அது ஒத்துக் கோள்ளப் போவதில்லை.
காங்கிரஸும் தி.மு.க வும் இருப்பை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க வின் காட்டில் மழை அடியோ அடியென்று அடித்து ஊற்றப்போகின்றது. அதை தமிழர்களுக்கு ஆதரவாக திருப்பி விடுவது கூட்டணியில் இருக்கும் வைகோ,ராமதாஸ் போன்றோரின் கைகளில் தான் இருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அரசியல் எழுதும்போது உங்கள் விருப்பங்களை சேர்த்து எழுதகூடாது. யதார்த்தம் வெளிப்படாது. நீங்கள் கண்ட கனவு எல்லாமே குருடன் கண்ட கனவு. தமிழனுக்கு சூடு சொரணை இல்லை. காசு வாங்கிகொண்டு திமுக காங்கிரசுக்கு வாக்களிக்க போகிறான். நம் முகத்தில் கரி பூசபோகிறான்.
வரவிற்கு நன்றி அனானிமஸ் !
களநிலவரங்கலின் அடிப்படையில் நடக்கப் போவதைத் தான் எழுதியிருக்கின்றேன்.
எனது விருப்பமும் இது சார்பாக இருந்தாலும(தமிழனென்ற உணர்வில்)
.. மக்களைக் குறைத்து எடை போடாதீர்கள்..அவர்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றார்கள்.
கேள்விகளை சந்தேகங்களைப் பொத்தாம் பொதுவில் வைக்காது நேரடியாகக் கேளுங்கள்..
இந்த முடிவிற்கு வரத்தூண்டிய காரண காரியங்களை என்னால் வைக்க முடியும்...
மாறுபடும் அரசியல் களத்தை நிர்ணயிப்பது மக்கள் மனோநிலையே தவிர பணபலமல்ல..
I disagree with you that the UPA will disappear in TN . they may get atleast 10 - 15 seats.
the neutral votes can shift to ADMK due to EELAM issue,but the traditional votes due to party loyalty remains intact
Post a Comment