ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Friday, May 15, 2009
இன மானமா? துவேஷமா?
ஈழ விடுதலையின் உக்கிரத்திலிருந்து ஏதாவது ஆறுதலை அம்மக்களுக்கு கிடைக்கச்செய்யும் நோக்கில் உலகெங்கும் இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். பல இன மொழி கலாச்சாரம் பேசும் மக்கள் வாழும் தேசங்களில் இது பல வித விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
எதற்காக தமிழ் மக்கள் போராடுகின்றார்களோ அது குறித்தான அந்நாடுகளின் அரசாங்கங்கள் அசைந்து கொடுக்காது இருக்கின்றபோதும் வேற்று மக்கள் மனதில் வெறுப்பலையொன்று மெள்ளப்பரவி வருகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சட்டத்தை மீறாத போராட்டங்களை மாதக்கணக்காக நடாத்தியிருந்த போதும் வேற்று மொழி பேசும் மக்களும் மாஸ் மீடியாக்களான வானொலி தொலைக்காட்சி தினசரி போன்றவையும் அதிக அளவில் கண்டு கொள்ளாதிருந்தன. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வேகப்பெரு வீதி ஒன்றை தடை செய்த போராட்டத்தின் பின்னர் நிலமை தலைகீழாக மாறிவிட்டது.
தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் பல அளவுகளிலும் பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு பற்றியும் சராசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் கருத்துகள் வைக்கப்படுகின்றன. வெள்ளையர் மற்றும் வந்தேறு குடிகளின் மனிதாபிமானம் பற்றிய பார்வை வெகுவாக மாறுபட்டிருக்கின்றது என்பது ஆச்சரியப்படுத்துகின்றது.
தன் குடும்பத்திற்கான நாளாந்த உணவுத் தேடலின் பின்னால் இவை எவற்றைப் பற்றியும் கவலைப்படாத மனநிலையில் விட்டேற்றிகளாக வாழ்வதை அடிக்கடி தெளிபு படுத்துகின்றார்கள். குறைந்த பட்சம் மனிதாபிமான அளவீட்டைக் கூட காட்ட மறுக்கின்றார்கள். உலகத்தைப் பற்றியோ சக மனிதர்களைப் பற்றியோ கவலைப்படாத தன்மையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகவும் ஆச்சரியமானது. உங்கள் குப்பைகளை (இத்தனை மனிதர்கள் இறந்து படுவது அவர்கள் பார்வையில் குப்பைதான்) உங்கள் நாடுகளில் வைத்திருங்கள் என்று நிர்த்தாட்சண்யமாக ஒதுக்கி விடுக்கின்றார்கள்.
ஓரளவு காது கொடுத்துக் கேட்க முற்படுபவர்களும் சட்டம் ஒழுங்கைக் குலைக்க முற்படாதீர்கள் என்றும் இயலாத பட்சத்தில் உங்கள் நாடுகளுக்கே பெட்டி படுக்கையுடன் சென்று சேருங்கள் என்ற விதமாகவே கருத்துக் கூறுகின்றார்கள்.இப்படியானவர்களை உடனடியாகவே கைது செய்து சிறையில் போடவேண்டும் என்றும் காட்டமாக பதில் கூறுகின்றார்கள்.
இவர்களுடன் ஒப்பிடும் போது தமிழக நிலமைகளை ஒப்பிட்டுப்பார்க்கின்றேன். எத்தனை அரசியல் கட்சிகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பாதிக்கும் வகையில் நடாத்தும் ஊர்வலங்கள் பந்த் கள் பற்றியெல்லாம் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கின்றேன். மூன்றாம் உலகத்தின் குப்பைக்குழிகளை அங்கேயே விட்டு விடுங்கள் என்பதே இவர்களின் வாதமாக இருக்கின்றது.எல்லாவற்றையும் மறந்து வாழ முடிந்தால் வாழுங்கள் அல்லது உங்கள் இடங்களுக்கே போய் விடுங்கள். இதுவே அவர்களின் வாதம்.
இதற்காக இவர்களால் சொல்லப்பட்ட சில விவாதங்கள் அவர்களின் மனநிலையை உங்களுக்கு தெளிபு படுத்த உதவக்கூடும்.
"இவர்களின் போராட்டத்தால் எனது பிள்ளைகளை வசந்தகால விசேட பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை..."
"இவர்களால் எப்படி தொடர்ந்து போராட்டம் என்று இருக்க முடிகின்றது. இவர்கள் வாழ்வதற்கு வேலையே செய்வதில்லையா? அரசாங்க உதவிப்பணத்திலா வாழ்கின்றார்கள்..எனது வரிப்பணத்தை இவர்களுக்காக செலவு செய்யும் அரசாங்கத்தை கண்டிக்கின்றேன்.."
"இன்னும் ஒரு முறை இவர்கள் இப்படி நடந்து கொண்டால்...அக்கூட்டத்தை உழுது செல்லும் கார் ஒன்றைக் காண்பீர்கள்.."
இப்படிப் பலபல உதாரணங்கள். இதில் துரதிர்ஷ்டமானது என்னவென்றால் எமது மக்கள் இத்தகைய விவாதங்களில் கலந்து கொள்ளவோ கருத்துக் கூறவோ முற்படுவதில்லை. கலந்து கொள்ளும் ஒரு சிலரும் "வயிட் ராஸிஸம் "என்பதற்கப்பால் செல்வதில்லை... இன்னும் கோபப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.
கருத்துக்கூறும் "தமிழ்" பெயர்களில் வருபவர்கள் உண்மையான தமிழர்கள் இல்லையோ என்றே எண்ண வேண்டியிருக்கின்றது. அத்தனை தூரம் இவ்வகைப் போராட்டத்திற்கு எதிரான தீச்சுவாலையைத் தூண்டி விடும் வகையிலேயே இவர்கள் நட்ந்து கொள்கின்றார்கள்.
பொது மக்களிடம் இருந்து வரும் இத்தகைய மோசமான கருத்து அரசாங்கங்கள் எடுக்கக் கூடிய சாதகமான நடவடிக்கைகளையும் தடை செய்து விடும் அபாயம் இருக்கின்றது.அப்படியொன்று நடக்குமானால் இப்போராட்டங்கள் பலன் ஒன்றையும் தரப்போவதில்லை.
இங்குள்ள தமிழ் மக்கள் இவ்வகையான விவாதங்களில் கலந்து கொண்டு மற்றைய இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்துக்களைக் கூற வேண்டும்.
இவ்விவாதமொன்றில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி கூறிய கருத்து பெருந்தாக்கத்தை என் மனதில் ஏற்படுத்தியது.
"தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் கொடிகளை இவர்கள் பயன் படுத்துவதால் தெரிவு செய்யப் பட்ட அரச அலுவலர்கள் இப்போராட்டங்களில் கலந்து கொள்ள முடிவதில்லை"
இது எத்தனை தூரம் முக்கியமானது என்பது எங்கள் மனநிலையில் இருந்து அல்லாது அவர்கள் மனநிலையில் இருந்து பார்க்கப்பட வேண்டியது. சட்டத்தால் தடை செய்யப்பட்ட விடயங்களை அவர்கள் மறந்தும் ஆதரிக்க மாட்டார்கள்.
அது சரியானதோ பிழையானதோ சட்டத்தால் தடை செய்யப்பட்டதென்றால் அவ்வளவு தான். தடை நீக்கம் வரை அவர்களை அவ்விடயத்தைச் செய்யும் படி தூண்ட முடியாது.
எங்களுடைய தற்போதைய உடனடித்தேவை போர் நிறுத்தம். அதனால் மடிந்து கொண்டிருக்கும் மக்களைக்காத்தல். புலிகள் பயங்கர வாதிகள் அல்ல என்பது நிரூபிக்கப்பட வேண்டியது பின்னர். அதற்கு கால நேரம் இருக்கின்றது.
இப்போராட்டத்திற்கு எதிராக இயங்கும் வேற்றின மக்கள் எடுத்து வைக்கும் முக்கிய காரணம் புலிகள் "டெடரிஸ்ட்" அவர்களுக்கு ஆதரவாக எப்படி இப்படியொரு போராட்டத்தை அவர்களைத் தடை செய்த நாடுகளில் அனுமதிக்கலாம்.முள்ளந்தண்டு இல்லாத அரசியல் வாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்... இதுவே அவர்களின் முக்கிய வாதம்.
இதிலிருந்து வெளிவரவும் வேற்று இன மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்கவும் நாம் ஏன் தமிழ் தேசியத்திற்கான நந்திக்கொடி போன்ற பொதுவான கொடியின் கீழ் ஒன்று திரளக் கூடாது.
எமது போராட்டம் உடனடியாகக் கண்டு கொள்ளப்படவேண்டுமாயின் இதைத் தவிர வேறு வழி இருப்பதாக எனக்குப் படவில்லை. இது இனமானமா? துவேஷமா? ..என்று நிறையக் கருத்துகள் வரலாம். ஆனால் இறந்து பட தமிழ் மக்களை இனியும் அனுமதிக்க முடியாது..என்பது மட்டும் நிச்சயம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment