ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, May 19, 2009


சிவப்பு சட்டை கனவுகளும் சிறு மதி படைத்த கயவர்களும்


இதோ புலிப்பாஸிஸம் செத்து விட்டது. டோலர்கள் எல்லாம் இப்போது பெட்டி படுக்கை கட்டி வெளிக்கிட்டு விட்டார்கள். இவர்களின் பிரசங்கங்களைக் கேட்பதற்கு சிங்களவன் செங்கம்பளம் விரித்துத் தயாராய் இருக்கின்றான். ஆத்துப்படுத்த வழியில்லாது ஏங்கி நிற்கும் தமிழ்ச்சனம் எல்லாம் இவர்களின் மகிமை பொருந்திய மாக்ஸிஸ மெஸ்மரிஸத்தில் கட்டுண்டு இன்னுமொரு புரட்சிக்கு ஒற்றைக்காலுடனும் ஒற்றைக்கையுடனும் தலையில்லாத முண்டமாகவும் அணிவகுக்கத் தயாராய் இருக்கின்றார்கள்.

இதோ தலித்தியம் பெண்ணியம் பேசியவர்களும் தொற்றிக்கொண்டு விட்டார்கள்.எப்படிப்பட்ட பூமி நமக்குக் காத்திருக்கின்றது. செஞ்சட்டைக் காவலர்கல் வடிவமைத்துத் தரும் பூமி.கிழக்கே மாஞ்சோலை வடக்கே நெற்கழனி மேற்கே பூஞ்சோலை தெற்கே கனி தரும் மரங்களுடன் சோலை.ஆஹா..எத்தனை அற்புதமான உலகம். இவர்கள் கைகளை இது வரை கட்டிப் போட்டிருந்த புலிப்பாஸிஸவாதிகள் ஒழிந்து போனதில் இதோ ..கோவணக் கட்டுடன் தோளில் மண்வெட்டியுடன் கிளம்பிவிட்டார்கள்.

கனவுகள்...எல்லாம் கனவுகள்.. நனவுகளில் வாழத்தெரியாது ஒழிந்து கொள்ளும் கயமைத்தனம். இந்த இரண்டு நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போய் விட்டார்களே யாராவது ஏதாவது செய்தீர்களா? நாங்கள் எல்லாம் சாதாரணர்கள். நீங்கள் தான் புது உலகின் சிப்பிகளாயிற்றே. நீங்கள் வாய் மூடி சும்மாயிருக்க முடியுமா?

போய் இறங்குங்கள்.விமானநிலையத்திலேயே உங்கள் அற்றைநாள் தோழன் டக்ளஸு துப்பாக்கிட்யுடன் வரவேற்பான். அன்றைய எதிரி கருணாவும் தான். அவர்கள் சொல்லித் தருவார்கள் எது பாஸிஸம் என்று.

சிங்களம் கற்றுக்கொள்ளுங்கள் போக முன்னர். தமிழுக்கு இனி வேலையிருக்காது. வலுக்கட்டாயமாக உங்களிடமிருந்து தமிழ் அடையாளங்கள் பிடுங்கி எறியப்படும். பெண்ணிய வாதிகளையும் கூட்டிப்போங்கள். இராணுவப்பசிக்குப் போதாதிருக்கின்றது. அங்கு மனிதர்களாய் தமிழர் இல்லை. ஜந்துகளாய்க் கிழித்து எறிந்திருக்கின்றது சிங்களப்பிசாசு.

போங்கள் உங்கள் பிழைப்புக்கு ஒரு வழியைக் கண்டு கொள்ள ..பாவப்பட்ட ஜனங்கள் காத்திருக்கின்றார்கள்.பிறந்ததைப் பற்றியே துக்கித்துப் போயிருக்கும் அவர்களிடம் எந்த "வாழ்க்கை"யைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கப் போகின்றீர்கள்.

புலம் பெயர்ந்த தேசங்களிலும் மனிதர்களா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தனை துயரத்தில் ஒரு இனமே துவண்டு போயிருக்க "பிறந்த நாள் வாழ்த்துச்" சொல்லுகின்றார்கள் ஒரு வானொலியில். குறைந்த பட்ச மனிதாபிமானத்தையும் கடந்து நாட்களாகி விட்டது.

என்ன ஒரு துக்கம். இனிப் பதிவுலகில் தோழர் இராயாகரனினதும் தோழர் சிறீரங்கனதும் புலிப்பாஸிஸத்திற்கெதிரான போராட்டங்களைப் பார்க்க முடியாது. புலிப்பாஸிஸமும் ஒழிந்து விட்டது. அவர்களும் இதற்குள் ஈழம் போய்ச் சேர்ந்திருப்பார்களே. புதிய மேய்ப்பர்கள் இவர்கள் அல்லவா?

தோழர் சுகனும் தோழர் அ.மார்க்ஸ்ஸையும் கூட்டிக் கொண்டு போய்ச்சேர்ந்திருப்பார். என்ன? எங்களிடையில் தான் அறிவு ஜீவிகளுக்குத் தட்டுப்பாடு வரப் போகின்றது. அதனாலென்ன.. அந்த அப்பாவி ஜனங்களுக்கு யாராவது கைகொடுப்பார்களென்றால் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

1 comment:

சவுக்கடி said...

செமத்தியாக 'பளார், பளார்' என கன்னத்தில் விழும் அறைகள்!

உணர்வோடும் அறிவோடும் வெடித்திருக்கின்றீர்கள்!

பாராட்டப்பட வேண்டிய பதிவு.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil