
உலகத்தின் மிகத் துயரப்பட்ட இனமாக ஈழத்தமிழினம் இப்போது மாறியிருக்கின்றது. நடந்து முடிந்த யுத்தத்தின் அத்தனை சுமைகளையும் முதுகினில் சுமந்து அழுது கரையும் அவலத்தில் மூழ்கியிருக்கின்றது. இழப்புகளையும் இயலாமையையும் சேர்ந்து சுமப்பதென்பது வாழ்க்கையின் மிகத் துன்பமான கணங்கள்.
அதுவே இன்று புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழினத்திற்கு வாய்க்கப் பெற்றிருக்கின்றது. சேர்ந்து அழும் துர்ப்பாக்கியத்தை தமிழக மலேசிய சிங்கப்பூர் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓடி உதவி செய்ய இயலாத கையாலாகாத் தனத்தில் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஏதாவது அதிசயம் நடக்காதா? துன்பப்படும் நம் சகோதரர்களைக் காக்க மாட்டார்களா என்ற அங்கலாய்ப்புடன் உலக நாடுகளையும் மனிதாபிமான அமைப்புகளையும் எதிர்பார்ப்பதுடன் ஆண்டவனின் கருணையையும் வேண்டிக் கையேந்தும் பிரார்த்தனைகளுடன் காலம் நகர்கின்றது.
உதவி நிறுவனங்களின் கணக்குப்படி 2 இலட்சத்தில் இருந்து 3 இலட்சம் வரை இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியிற்கு இடம் பெயர்ந்து முகாம்களில் அடை பட்டிருக்கின்றார்கள் என்று நிறுவப்பட்டிருக்கின்றது. இதில் 25000 இலிருந்து 30 ஆயிரம் வரை ஆனவர்கள் செயற்கைக்கால்களோ நகரும் நாற்காலிகளோ இன்றி நகர முடியாத பெருங்காயம் பட்டவர்கள் அல்லது அங்கவீனர்கள் என்று சர்வதேச அங்கவீனர் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சதீஸ் மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார்.
உடனடி வைத்திய பராமரிப்பு மற்றும் செயற்கை உறுப்புகள் பொருத்தப்படும் தேவையுள்ள இவர்கள் சுகாதார வசதிகள் அற்ற முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி விசனம் தெரிவித்துள்ளார்.
இப்போது எங்கள் முன்னால் ஒரு கேள்வி இருக்கின்றது. சர்வதேச நாடுகளை அல்லது யாரோ ஒரு இரக்கவானின் கருணையை எதிர் பார்த்து நாம் காத்திருக்கப் போகின்றோமா? அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் வழிவகைகளைப் பற்றி யோசிக்கப் போகின்றோமா?
No comments:
Post a Comment