ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Sunday, May 24, 2009
இந்திய அரசியலில் "துக்ளக்" ஆகும் ஆனந்தவிகடன்
மனிதாபிமானம் காருண்யம் எல்லாவற்றையும் மறந்த மரத்துப்போன இந்திய அரசியல்வாதிகளிடம் புத்தனின் அவதாரமாகப் போதிக்கப் புறப்பட்டிருக்கின்றது ஆனந்த விகடன். எல்லா அத்து மீறல்களையும் இந்தியாவின் "இறைமையின்" பேரால் மூடி மறைத்து குழி தோண்டிப்புதைக்கும் அரசியல் வாதிகளிடம் என்ன மாற்றத்தைக் கொண்டுவர ஆனந்த விகடன் முயல்கின்றது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
எத்தனையோ ஈழத்தமிழர்களின் பிணத்தின் மீது அமைச்சுப்பதவிகளைக் கனவு கண்டு பேரம் பேசிக்கொண்டிருக்கும் கலைஞர் முதல் யாருக்கும் வெட்கம் கிடையாது.
மக்களுக்குப் பயந்த மனச்சாட்சியுடன் அரசியல் செய்யும் நேர்மையாளர்கள் இல்லாத இந்தியாவில் இது வெறும் உபதேசமாகத்தான் சென்றடையப்போகின்றது. விழலுக்கு இறைத்த நீராகப் போவதற்கு ஒரு பலம் வாய்ந்த நீண்ட அனுபவங்களைக் கொண்ட ஆனந்தவிகடன் நிறுவனம் தேவையில்லை.
அரசியல்வாதிகளிடம் கொண்டுவரவேண்டிய மாற்றங்களை மக்களிடம் செல்வதால் மட்டுமே சாத்தியமாக்கலாம் என்ற உண்மையை மக்கள் செல்வாக்கு மிக்க ஆனந்த விகடன் மறந்து போனது துர்ப்பாக்கியமே.அல்லது மற்றவர்களைப் போலவே தன் கடமையையும் பட்டும்படாமல் "சொல்லி" விட்டு ஒதுங்கும் பொறுப்பற்ற தனத்துடன் நடந்து கொள்கின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
அண்மைக்காலங்களில் மக்கள் மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயகப் பண்புகளைக் கட்டிக்காக்க ஆனந்தவிகடன் எடுத்து வரும் முயற்சிகளையும் ஒதுக்கி விட முடியாது.
முதுகெலும்பற்ற இந்திய அரசியலின் மீது பொறுப்பைச் சுமத்தி விட்டு ஆனந்த விகடன் ஒதுங்கிக்கொள்வது என்பது இந்திய அரசியலில் ஒரு"துக்ளக் கோமாளியின்" இடத்தைத்தான் ஆனந்த விகடனுக்கு பெற்றுக் கொடுக்கும். அல்லது குறைந்த பட்சம் ஒரு "புனிதரின்" இடத்தை அதற்கு ஒதுக்கி விடுவார்கள்.
அப்படியில்லாது பத்திரிகா தர்மத்தை மதித்து ஜனநாயகப் பண்புகளைக் கட்டிக்காக்க முன்வருவதாயின் மக்கள் மத்தியில் நிறைந்த செல்வாக்குடன் உள்நுழையலாம். மரத்துப்போன முட்டாள் அரசியல்வாதிகளின் இழிவான அரசியலைப் பார்த்து சோர்ந்து போன மக்கள் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
அது பாரம்பரியம் மிக்க ஆனந்தவிகடன் மூலம் தொடக்கமாவது வரவேற்கக் கூடியதே.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//
அரசியல்வாதிகளிடம் கொண்டுவரவேண்டிய மாற்றங்களை மக்களிடம் செல்வதால் மட்டுமே சாத்தியமாக்கலாம் என்ற உண்மையை மக்கள் செல்வாக்கு மிக்க ஆனந்த விகடன் மறந்து போனது துர்ப்பாக்கியமே.அல்லது மற்றவர்களைப் போலவே தன் கடமையையும் பட்டும்படாமல் "சொல்லி" விட்டு ஒதுங்கும் பொறுப்பற்ற தனத்துடன் நடந்து கொள்கின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
//
விகடன்???
நமீதா, சில்க் ஸ்மிதா போல் விகடனும் ஒரு கவர்ச்சி நடிகையே...துட்டுக்கு ஏத்த கவர்ச்சி, மார்க்கெட் போகும் போல் இருந்தால் இன்னும் அதீத கவர்ச்சி....
இப்பொழுதெல்லாம் விகடனை யாரும் பெரிதாக மதிப்பதில்லை...
வாருங்கள் "அதுசரி" !
ஆனந்த விகடனின் தலையங்கத்தைப் பார்த்தால் நீங்கள் கூறும் "பொறுப்பற்ற"தனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
//"இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது": 'ஆனந்த விகடன்'
"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது.
இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம்.
'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என்று வெறியோடு சிங்கள பீரங்கிகள் வெடித்து, கரும் புகையால் விண்ணை நிரப்பின.
'விரும்பிய இலாகாவைக் கேட்டுப் பெறுவோம்' என்ற மகிழ்ச்சியில் இங்கே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிய அதே சமயம், 'பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்' என்று இனிப்பு ஊட்டிக்கொண்டார்கள் சிங்கள மக்கள்!
'விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களைப் பிணைக் கைதிகளாக முன்னிறுத்தி யுத்த களத்தில் பலி கொடுக்கிறார்கள்' என்று இனிமேலும் இலங்கை அரசு சொல்ல முடியாது.
இனி ஒரே ஒரு தமிழன் அங்கே துப்பாக்கியாலோ, பசியாலோ உயிர் நீத்தாலும், அதற்கான முழுப் பொறுப்பும் ராஜபக்சவைத்தான் சாரும் என்று உறுதியான குரலில் இந்தியா உடனே எச்சரிக்க வேண்டும். 'அது அடுத்த நாட்டு விவகாரம்' என்று சொல்லி, இனியும் நம் நாடு பதுங்கு குழிக்குள் முடங்கியிருக்கக் கூடாது!
குண்டு மழையால் விளைந்த காயங்களாலும், குடலைச் சுருட்டும் பசியாலும், வாட்டி வதைக்கும் நோயாலும் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களுக்கான புனரமைப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
விரைவில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்றுத் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.
உலக நாட்டுப் பிரதிநிதிகளும், பத்திரிகையாளர்களும், தொண்டு நிறுவனங்களும் அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றுவதும்கூட இந்திய அரசின் பொறுப்புதான்!
இதற்கெல்லாம் இலங்கை அரசை உடன்பட வைக்க முடியாது என்றால், இலங்கையோடு சேர்ந்துகொண்டு இத்தனை நாளும் 'இறையாண்மை' என்கிற பெயரால் இந்திய அரசு இரக்கமற்ற நாடகம்தான் ஆடிக்கொண்டு இருந்தது என்கிற பழிச்சொல் உறுதிப்பட்டுவிடும்!"
இட்டாலி வடை,
விகடனுக்கு பொறுப்பு வந்திருந்தால் வரவேற்கத் தக்கதே....ஆனால் இந்த தலையங்கத்தை படித்தால் இது வரை நடந்ததற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை...இனி நல்லது நடக்க இந்தியா துணை புரியவேண்டும் என்பது போல் இருக்கிறது....
ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்க துணை நின்றது மட்டுமல்ல, இன்று இனப்படுகொலைகளை ஐ.நா.வில் விவாதிக்க கூட தடையாக நிற்பது இந்தியா(வும்) தானே?? விஜய் நம்பியார் என்ற இந்தியாவின் கைக்கூலி இனப்படுகொலைகளை மறைத்தது இந்தியாவின் ஆலோசனையின் பேரில் தானே??
இந்தியா உதவவேண்டும் என்று கேட்பது, முடிந்த அளவு யூதர்களை கொன்று விட்டார், இனி யூதர்களை வாழ வைப்பார் என்று ஹிட்லரை நம்புவது போல் தான்....
நீங்கள் இலங்கைத் தமிழரா இல்லை இந்திய தமிழரா என்று எனக்கு தெரியாது...யாராக இருப்பினும்...ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்... இந்தியாவையோ, இந்திய ஊடகங்களையோ நம்பாமல் இருப்பது நல்லது...
வாருங்கள் அதுசரி!
.//ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்... இந்தியாவையோ, இந்திய ஊடகங்களையோ நம்பாமல் இருப்பது நல்லது...//
இந்தியாவில் முற்போக்குச் சக்திகல் இல்லையென்று யார் சொல்வது?
ஆனந்த விகடனின் முயற்சி தமிழக மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.. அதைத்தான் நான் எதிர்பார்ப்பது..
தமிழக மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்ச்சி "செல்லாக்காசு" அரசியல்வாதிகளை ஓரங்கட்டி விடும்... அப்படியாகத் தான் ஈழத்தமிழ் கக்களுக்கு நன்மைகள் விழையும்...
தமிழக மக்கள் என்ன சொர்க்கத்திலா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..?
//
இந்தியாவில் முற்போக்குச் சக்திகல் இல்லையென்று யார் சொல்வது?
ஆனந்த விகடனின் முயற்சி தமிழக மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.. அதைத்தான் நான் எதிர்பார்ப்பது..
தமிழக மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்ச்சி "செல்லாக்காசு" அரசியல்வாதிகளை ஓரங்கட்டி விடும்... அப்படியாகத் தான் ஈழத்தமிழ் கக்களுக்கு நன்மைகள் விழையும்...
தமிழக மக்கள் என்ன சொர்க்கத்திலா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..?
May 24, 2009 12:37 PM
//
இந்தியாவில் முற்போக்கு சக்திகள் இல்லை என்று நான் சொல்லவில்லை...மிக நிச்சயமாக இருக்கிறார்கள்... ஆனால் அவர்களின் குரல் அழுத்தப்பட்டே இருக்கிறது....இதற்கு ஊடகங்களும் முக்கிய காரணம்...
விகடன் நினைத்திருந்தால் இந்த பிரச்சினையில் இதற்கு முன்னரே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம்...ஆனால் முயலவில்லை என்பது தான் உண்மை...
இன்றைக்கு அவர்கள் எழுதியிருக்கும் தலையங்கம்....மன்னிக்க, விகடன் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை....அதே சமயம், அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் பட்சத்தில் அதை பெரிதும் வரவேற்கிறேன்!
Post a Comment