ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, May 11, 2009


காணாமல் போகப்போகும் காங்-தி.மு.க கூட்டணி


இறுதிக்கட்ட தேர்த்லுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. தேர்தலின் முடிவுகள் அரசல் புரசலாகத் தெரியத் தொடங்கி விட்டன. களநிலபரம் சார்ந்த ஊகங்களில் காங்கிரஸ் கூட்டணியின் கால் பல இடங்களில் வாரிவிடப்பட இருக்கின்றது. தமிழகத்தில் அதன் நிலை அதலபாதாளத்தை நோக்கிச் செல்லும். வன்னியில் அழிவுகள் பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும் காங்-தி.மு.க கூட்டணியின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் ஆணியாக மாறி இறங்கிக்கொண்டிருக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவுத்திடலில் "தூக்கி" நிமிர்த்த இறுதி நேரத்தில் காங்கிரஸ் தலைமையாலும் தி.மு.க தலைமையாலும் காய்ச்சல் கழிசல் எல்லாவற்றையும் ஒத்தி வைத்து எடுக்கப்பட்ட முயற்சி புஷ்வாணமாகிப்போய் விட்டது. வடித்தெடுக்கப்பட்ட தி.மு.க காங்கிரஸ் தொண்டர்களே திடலை நிறைத்திருந்தமையினால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் ஒன்றும் உருவாகப்போவதில்லை.

காங்கிரஸிற்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களின் எதிர்ப்பின் தீவிரத்தைப் பார்த்து சோனியாவைக் கொண்டு "வீதியில் வெள்ளோட்டம்"விடும் முயற்சி கனவாகிப் போய்விட்டது.

அந்தளவிற்கு ஈழநெருப்பு சுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்ததை கண்டு வீதியில் கால் வைக்கவும் பயந்து ஆகாய மார்க்கமாகவே அள்ளி அனுப்பிவிட்டார்கள்.கடைசியில் இது தோல்வி ஜீரத்தில் துவண்டு போய் இருக்கும் காங்.தி.மு.க தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் நோக்கத்திலும் வெற்றி பெறவில்லை. தி.மு.க தலைமை 50, 60 ஆம் ஆண்டுகால அரசியல் ஸ்டண்ட் வேலைகள் மக்களிடம் எடுபடாது போனதில் மிகவும் அப்செட்டாக இருக்கின்றது.

புதிய யுத்திகளைச் சொல்லிக் கொடுக்கும் "அறிவாளி"களையும் அயலில் அண்ட விடாத "குடும்ப" அரசியல் வியூகம் இத் தேர்தலில் பெரும் தோல்வியைப் பெற்றுக்கொடுக்கப்போவதை ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனும் பெருமூச்சுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.தசாப்தங்களைக் கண்ட கலைஞ்ரின் அரசியல் வாழ்வு நாயும் சீண்டாத பண்டமாகப் போவதில் அவனின் உள்ளக் கவலை உண்மையானது.

காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.க வும் மீண்டெழ முடியாத ஒரு வீழ்ச்சியைச் சந்திக்க இருக்கின்றது.

காங்கிரஸின் நிலையோ அறுந்த பல்லி வால் போல துடித்துக் கொண்டிருக்கின்றது. பல கடந்தகால கூட்டணிக்கட்சிகள் இத்தேர்தலில் பிரிந்து எதிரெதிராக களத்தில் நிற்பது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைப் பிரித்து நிற்கின்றன.அதே நேரம் உ.பியில் மாயாவதியின் விசுபரூபம் மற்றும் ஆந்திராவில் சஞ்சீவி போன்றோரின் புதிய வரவுகள் பிரிக்கப்போகும் வாக்குகள் மற்றைய கட்சிகள் போலவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை நலிவடையச் செய்யப்போகின்றன.

காங்கிரஸைப் போலவே பா.ஜ.க வும் சொல்லிக்கொள்ளும் விதத்தில் வாக்குகளை அள்ள முடியாது போனாலும் காங்கிரஸின் நிலமை மிகவும் நலிவடைந்து போகும். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் வேறு கங்கிரஸின் மீதான வெறுப்பாகப் படர்ந்திருக்கின்றன. டில்லி ,மும்பாய் போன்ற பகுதிகளில் இடம் பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய கட்சியை மக்கள் தேடுவதும் பா.ஜ.க விற்கு வாய்ப்பாக இருக்கின்றன. குஜராத் ,மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பா.ஜ. க சொல்லிக் கொள்ளும் விதத்தில் வெற்றி பெறக்கூடும்.

அந்த நம்பிக்கையிலேயே அ.தி.மு.க வுடன் தேர்தலுக்குப் பின்னரான கூட்டணிக்கு இப்போதே அறை கூவல் விடுக்கப்படுகின்றது. பா.ஜ.க வின் வியூகத்தில் அ.தி.மு.க போலவே பகுஜன் சமாஜ் மாயாவதி மற்றும் பீகார் லல்லு பிரசாத் யாதவ் போன்றோர் இருக்கின்றனர். இவர்களை இணைத்து பா.ஜ.க வின் ஆட்சியை அமைக்கும் மும்முரத்தில் பா.ஜ.க வின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தீவிர நாட்டம் காட்டுகின்றனர்.

ஆட்சியிலிருந்து அகலப் போகும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதென்பது இப்போதைக்கு நடக்கப்போவதில்லை. அதற்கு காங்கிரஸில் இப்போதைக்கு மக்கள் ஆதரவைக் கவர்ந்திழுக்கக் கூடிய தலைவர்கள் இல்லாதது பெரிய பின்னடைவு. சோனியாவை சுதேசியாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் மக்கள் இல்லாததும் ராகுல் கவர்ச்சி மக்களிடம் எடுபடாமல் போனதும் பெரிய காரணங்களாகும்.ராகுலின் கவர்ச்சி காற்றுப்போன பலூனைப் போல போனதற்கு அவர் சொந்தத் தொகுதியிலேயே 45%இற்குக் குறைவான வாக்குப்பதிவே சாட்சியம்.

ஒரு வேளை பிரியங்காவை முன்னிறுத்தினால் இழந்து போன செல்வாக்கை மீட்டு வரக் கூடுமாயினும் அதற்காக காங்கிரஸும் நேரு குடும்பமும் பல விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். அது பின்னர் வதேரா குடும்பத்தின் கையில் காங்கிரஸையும் இந்தியாவையும் ஒப்படைக்கும் துயரத்தையும் ஏற்படுத்தலாம்.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் தி.மு.க வின் வீழ்ச்சி மற்றுமொரு எம்.ஜி.ஆர் சகாப்தத்தை நினைவூட்டும் வண்ணம் நடந்தேறும். இன்னும் இரண்டு வருடங்கள் தி.மு.க வின் ஆட்சிக்காலம் இருந்த போதும் அவ்வளவிற்கு நீடிக்க விடும் பொறுமை ஜெயலலிதாவிடம் இருக்கப் போவதில்லை. இன்னும் ஒரு வருடத்திற்குள் இடம் பெறவைக்கப்படப் போகும் மாநில தேர்தலில் இதே ஈழ ஆதரவு அலையாலும் இதே கூட்டணிப்பலத்தாலும் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றும்.

எதிர்வரும் தேர்தல்களில் கலைஞர் இல்லாது சந்திக்கப்போகும் தேர்தல்கள் தி.மு.க விற்கு கடினமானதாகவே இருக்கும். ஈழத்தில் அமைதி நிலை திரும்பும் வரை தி.மு.க மீதான மக்கள் கோபம் தொடர்ந்திருக்கப் போவதும் ஸ்டாலினது அல்லது அழகிரியின் தலைமையை ஏற்க மக்கள் பழக்கப்பட வேண்டியதற்கும் எடுக்கும் காலம் தி.மு.க விற்கு ஆட்சி வாய்ப்பை விரைவில் கொடுக்கப்போவதில்லை.

இடையில் ஏற்படக் கூடியதான அரசியல் அதிரடி மாற்றங்கள் - ரஜனியின் திடீர் அரசியல் பிரவேசம் போன்றன - தி.மு.க வின் வாங்கு வங்கியை மேலும் சிதறடிக்கப் போவதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அ.தி.மு.க வைப் பொறுத்தளவில் ரஜனி ஒரு எதிரியாகவே பார்க்கப்படுவது அன்றும் இன்றும் நடப்பது தான். அதனை அ.தி.மு.க வின் தொண்டர்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றார்கள். ஆனால் தி.மு.க வைப் பொறுத்தவரை ரஜனி ஒரு ஆதரவு சக்தியாகவே தி.மு.க வில் பார்க்கப்பட்டு வருவது - ஜெயலலிதாவிற்கு வாக்களித்தால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது போன்ற வசனங்கள்- தி.மு.க விற்கு வெற்றி வாய்ப்பை கடந்த காலத்தில் பெற்றுக் கொடுத்திருப்பது, இரண்டு கட்சிகளாலும் மறக்க முடியாததாகவே இருக்கின்றது.

ரஜனியின் அரசியல் பிவேசம் நிகழ்ந்தால் தி.மு.க -ரஜனி இணைப்பு அ.தி.மு.க வை ஈடு செய்யப் போதுமாயிருக்கும். அதனை தி.மு.க புதிய தலைமை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அதனால் ஏற்படும் இழப்புகளிற்கும் குடும்ப ஆட்சியின் பிடியை நழுவ விடுவதற்கும் அது ஒத்துக் கோள்ளப் போவதில்லை.

காங்கிரஸும் தி.மு.க வும் இருப்பை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க வின் காட்டில் மழை அடியோ அடியென்று அடித்து ஊற்றப்போகின்றது. அதை தமிழர்களுக்கு ஆதரவாக திருப்பி விடுவது கூட்டணியில் இருக்கும் வைகோ,ராமதாஸ் போன்றோரின் கைகளில் தான் இருக்கின்றது.

Monday, May 4, 2009


தமிழீழமும் தமிழகப் பங்களிப்பும்


முந்தைய பதிவு கொஞ்சம் உணர்ச்சி வசமாகிப்போய் விட்டது. விளக்கமில்லாத ஒரு சில தமிழக உறவுகளால் மனம் கசந்து போய் விட்டது.

தமிழ் ஈழத்தை இந்தியா பெற்றுத்தரும் என்ற கனவுகள் கலைந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. தமிழ் ஈழ மக்களே போராடி வென்றால்தான் உண்டு என்ற அரிச்சுவடியை நாம் படித்தாகிவிட்டது. அதற்காக சிந்திய குருதியும் விட்ட உயிர்களும் வகை தொகையில்லாது பெருகிக் கொண்டிருக்கின்றது. இருந்த போதும் தமிழீழம் என்ற கனவு மட்டும் கருகிப்போகவில்லை. அதை அடையும் வரை நம் போராட்டமும் ஓய்ந்து விடப்போவதில்லை.

தலைமைகள் மாறலாம் நிலைமைகள் வேறுபடலாம்...ஆனால் முடிவு எது என்பதில் நாம் திடமாகவே இருக்கின்றோம். சர்வதேசமும் எம் நோக்கத்தில் குறை காணலாம் ..குற்றம் சாட்டலாம்..அது அவர்களின் கருத்து.. ஆனால் எமக்கான வாழ்வுக்கு நாங்கள் போராடுவதை நிறுத்தப்போவதில்லை. எமது நோக்கம் சரியானது என்ற தெளிவு மிகச்சிறப்பாகவே நம்மிடம் இருக்கின்றது. இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவே எதிர்த்து வந்தாலும் ஈழத்தில் போராட்டம் ஓய்ந்து விடாது.

நாம் எமது கருத்தில் மிகத் தெளிவாகவே இருக்கின்றோம். அதற்கான போரட்டத்தில் அங்குலம் அங்குலமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றோம். போராட்டத்தில் பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் வரும் என்பதை அறியாதவர்கள் அல்ல. அதை மேவும் வழி வகையும் புரியாதவர்களும் அல்ல. இது மக்கள் போராட்டம்.

இதில் தமிழகத்தின் பங்கு எது என்பதைப் புரிந்து கொண்டால் இந்த அதிகப்பிரசங்கிகளுக்கு வார்த்தைகள் கிடைக்காது போய் விடும். இவர்களின் சிலு சிலுப்புகள் காணாது போய் விடும்.

உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதும் உங்களால் எங்களுக்குத் தரப்படக் கூடியதும் அதிக பட்சம் உங்கள் மாரல் சப்போட் தான். அதற்கு மேலாக உங்களால் ஒரு மண்ணைக்கூட செய்ய முடியாது. பாக்கு நீரிணையின் மீது பாலம் கட்டிப் படையனுப்பவும் முடியாது... ஆயுதம் அம்புகள் என்று அள்ளித்தரவும் முடியாது.

குறைந்த பட்சம் இந்தியாவின் நரித்தனங்களையாவது தட்டிக்கேட்பீர்கள் தடை செய்வீர்கள் என்று எதிர்பார்த்தோம். அதைக்கூட உங்களால் செய்ய முடியாது என்பதை இன்றைய அவலகாலம் உங்களுக்கும் எங்களுக்கும் தெளிவாகவே உணர்த்தி விட்டது. உங்கள் பேச்சை மத்திய அரசு கேட்கும் நிலையிலும் அவர்கள் இல்லை ..கேட்க வைக்கும் வலிமையும் உங்களுக்கு் இல்லை.

இன்று புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டமே ஐ.நாடுகள் முதற்கொண்டு பிரித்தானியா பிரான்ஸ் ஈறாக காத்திரமான பங்களிப்பைச் செய்யத் தூண்டியிருக்கின்றது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொச்சைப் படுத்தாதீர்கள். உங்களால் முடியவில்லை என்பதால் எங்களுக்கு கோபம் இல்லை. உங்கள் நாட்டின் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு உங்களால் இதைத்தான் செய்யமுடியும் என்பதை எம்மால் மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும்.

சட்டத்தை மீறிச் செயற்பட்டு உங்களுக்கும் எமது நிலை வரவேண்டாம். அப்படி நாங்கள் உங்களை வற்புறுத்தவும் போவதில்லை. அதற்காக எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் தமிழனாக இருங்கள் இல்லை இந்தியனாக இருங்கள். அது உங்கள் உரிமை. அதே போல தமிழீழம் குறித்து போராடுவது எங்கள் உரிமை அதனையும் புரிந்து கொள்ளுங்கள். இந்தியா எங்களுக்கு எதிராகவே இருக்கின்றது என்பதை நாம் சந்தேகமின்றி அறிவோம்.

இந்தியாவின் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய முடிந்தால் செய்யுங்கள். அதைதான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது. பல எதிரிகளுடன் போராடுவது சிரமமாக இருக்கின்றது. அதற்கு நாங்கள் இன்னும் வளரவேண்டியது நிறையவே இருக்கின்றது. யாராவது ஆதரவு தெரிவித்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். பாராட்டுவோம். அதை உங்கள் உள்ளூர் அரசியலுக்குள் முங்க வைக்காதீர்கள்.

Sunday, May 3, 2009


கதறுகின்றார் கலைஞர்


மே 13 ஆந்திகதிக்குப் பின்னர் இப்படியொரு செய்தி வரலாம். காங்கிரஸுடன் கூட்டு வைத்து ஆட்சியேறியபோதே ஜெயலலிதாவைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாது அவரை வெளியே விட்டு வைத்ததே தான் செய்த மிகப்பெரிய ராஜதந்திரச்சறுக்கல் என்பதை அவர் உணராலம்.

அதையே சொல்லிச் சொல்லி அவர் கலங்கி தன்னிரக்கம் கொள்ளலாம். கலைஞரின் கடைசிக்கால மலரும் நினைவுகள் இன்பமானதாக இருக்கப் போவதில்லை. காதல் மனைவியின் கல்லறையைக் கூட அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிட்டப்போவதில்லை.

"ஐயோ கொல்லுராங்களே.." போன்ற கெட்ட கனவுகள் இன்னும் பாக்கியிருக்கின்றன.

மீதம் இருக்கும் இரண்டு வருடங்களும் ஆட்சியில் இருக்கும் பாக்கியமும் கிட்டப்போவதில்லை. காங்கிரஸ் அடையப் போகும் படுதோல்வி பற்றி இப்போதே அரசல் புரசலாகக் கதை பரவத்தொடங்கி விட்டது. அதே தோல்வி தி.மு.க வையும் அதல பாதாளத்திற்குக் கொண்டு செல்லப்போகின்றது.

அமையப்போகும் பா.ஜ.க ஆட்சியுடனோ மூன்றாவது அணி அரசுடனோ கூட்டுச்சேரும் அல்லது சேர்ந்தே ஆட்சி செய்யும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கே கிடைக்க இருக்கின்றது. தமிழ் நாட்டில் ஜெயலலிதாவிற்குப் பெருகி இருக்கும் திடீர் ஆதரவை மிகவும் இலாவகமாகக் கையாளும் திறன் அவரிடம் இருக்கின்றது.

அதையே மூலதனமாக வைத்து அமையப்போகும் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசின் ஆதரவுடன் தி.மு.க வைக் குறை ஆட்சியுடன் வீட்டுக்கு அனுப்புவார்.
மத்தியிலும் வை .கோ உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டணிக்கட்சி ஆதரவில் மத்தியில் இடம் பெற அனுப்பி வைக்கப்படுவர்.

இதுவே கருணாநிதி தலைமையில் தி.மு.க எதிர் கொள்ளும் இறுதித் தேர்தலாக இருக்கும். கலைஞரின் இறுதிக்காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தும் சறுக்கலாகவே இருக்கின்றன.

கலைஞர் இல்லாத தி.மு.க உள்வீட்டுப்பிரச்சினைகளாலும் தலைமைப் போட்டியாலும் பலத்த பின்னடைவுகளை அடையும். கிடைக்கும் இந்த இடைவெளியை நிரப்ப விஜய காந்தின் கட்சி முயற்சியெடுக்கலாம். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதைக் காலம்தான் தெளிபு படுத்தும். அதே நேரம் இன்னுமொரு முக்கிய விடயமும் நடைபெறலாம். அது "ஆண்டவன் சொல்லுறான், அருணாசலம் செய்யுறான்" ரஜனியின் அரசியல் பிரவேசமாயிருக்கலாம்.

ரஜனியின் அரசியல் குரு சோவின் ஆலோசனை அவ்வாறே இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தையும் ரஜனி விடுவாரேயானால் அவரையும் அவர் ரசிகர்களையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ரஜனியின் பிரவேசம் நடக்குமேயானால் உதிரிக்கட்சிகளை இணைத்துக்கொண்டு அ.தி.மு.க விற்கு பலமான எதிர்க்கட்சியாக களம் காணலாம். பா.ஜ.க வுடன் கூட்டுச் சேருவதன் மூலம் மத்தியிலும் அரசியல் பண்ணலாம்.

அப்படி நடக்குமா என்று எண்ணுபவர்கள் இவற்றையெல்லாம் கண்களால் காண்பதற்கு அதிக காலம் தேவைப்படாது.

அத்தனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தேர்தல் இருக்கப் போகின்றது. காங்கிரஸ்,பாஜ.க, மூன்றாவது அணிகளுக்குள் சிதறப்போகும் வாக்குகள் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கை மத்தியில் அதிகரிக்கும்.

இந்தத் தேர்தலில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரவிருக்கும் ஈழப்பிரச்சினை தொடர்ந்தும் அரசியல் விளையாட்டிற்காகவே தமிழகக் கட்சிகளால் உபயோகிக்கப்படும்.

"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்.."

பல நடக்காதென்பதெல்லாம் நடந்து விடப்போகின்றது.

விடாக் கண்டன்


"விடாக் கண்டன் கொடாக் கண்டன் ' என்று ஒரு சொல்வழக்கு தமிழில் இருக்கின்றது. அது இன்று சிறிலங்காவின் சிங்கள அரசிற்குத் தான் பொருந்தும். அத்தனை தூரம் ஒரு கடுமையான நிலைப்பாட்டில் அது இருக்கின்றது.

எவ்வளவு தூரம் என்றால் 'மேற்கு நாடுகள்" எங்களுக்குப் பாடஞ் சொல்லித்தர வேண்டியதில்லை" என்று நேரிடையாகவே மோதிக்கொள்ளும் வரையில் அது துணிவு பெற்று விட்டது. இவ்வளவிற்கும் காரணம் அதன் பின்னால் சீனா பலமாக இருப்பது தான்.

அதனாலேயே இந்தியாவின் போக்கில் இந்தப்பிரச்சினையை விட்டு விட்டு இதுவரை வாளாவிருந்த மேற்குநாடுகள் முடியாத கட்டத்தில் இப்போது நேரடியாகவே களம் இறங்கியுள்ளன.

ஆனால் சிங்கள அரசு சீனாவைத் தவிர யாருடைய பேச்சிற்கும் செவி கொடுக்கும் நிலையில் இல்லை. அண்மையில் ஐ.நாடுகள் தலையீடும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஞ்ச்னர் ஆகியோரின் இலங்கைக்கான பயணம் எதுவித பயனையும் தரவில்லை. அதே பொழுதில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ல் பில்ற்டிற்கான விசா அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.

இப்போது செய்மதி ஒளிப்படங்கள் வெளியிடப்பட்ட விவகாரத்தில் கொழும்புக்கான ஐ.நாடுகள் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் பூனேயை வெளியேற்றுவது பற்றி இலங்கை ஆலோசிக்கின்றது.

இது எப்படியென்றால் சர்வதேச சமூகத்தை அலட்சியம் செய்து தமிழர் மீதான பயங்கரவாதத்தை முன்நடாத்தவே இலங்கை முயற்சிப்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

சுருக்கமாகச் சொன்னால் ஸ்டேட் டெடறிஸ்ட் ஆக அதாவது அரசே பயங்கரவாதச் செயல்களை முன்னெடுக்க விரும்புகின்றது.

இதனால் அரண்டு போன மேற்கு நாடுகள் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்தைச் சேர்த்து ஆராய முடிவெடுத்திருக்கின்றன. இதுவரை அவ்வாறு செய்யாமல் கவனமாகத் தவிர்த்தே வந்திருக்கின்றன என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.

இந்திய முன்னாள் இராஜதந்திரி இராஜீவ் டோக்ரா சொல்வதைப் போல் இலங்கை மீதான பிடியை சீனாவிடம் இந்தியா தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றது. இந்தியாவின் பிழையான செயல்முறைகள் மேற்கு நாடுகளையும் சிக்கலில் மாட்டியுள்ளன.

சீனாவின் உதவி சிறிலங்காவை ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையிலும் பாதுகாத்துக் கொடுக்கும். அந்த நன்றி விசுவாசம் காரணமாக சீனா இலங்கையில் இலகுவாக உள்நுழைந்து விடும்.

சீனாவின் பிடியில் இருந்து சிறிலங்காவை விடுவிக்க இப்போதிருக்கும் சிங்கள அரசிற்கு நெருக்கடி கொடுப்பது,அதற்கும் உடன்படாதபட்சத்தில் அரசை மாற்றுவது போன்ற படிமுறைகளில் மேற்குலகம் செயல் படும். சிங்கள அரசை மாற்ற வேண்டிவரின் இப்போது நடை பெறும் போரில் ராஜபக்ஸே அரசு தோற்கடிக்கப்படவேண்டும். அதற்கான செயற்பாடுகளில் மேற்கு இறங்கும் போது தமிழர் கை மீண்டும் ஓங்கும்.

சிறிலங்கா மீது மேற்கு நாடுகள் சுதந்திரமாகச் செயற்பட இந்தியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் -காங்கிரசைத் தவிர்ந்த எந்த ஒரு ஆட்சியும் - அவசியம்.

இல்லாவிடில் காங்கிரஸ் சொல்வதைப்போல தெற்கிலிருந்தும் எதிரிகள் இந்தியாவிற்குள் நுழைவர். அவ்வாறு சொல்லிக்கொண்டே அதற்கான கதவுகளைத் திறந்துவிடுவதும் காங்கிரஸே என்பதை அறியாத முட்டாள்களின் கையில்த் தான் ஆட்சி இருக்கின்றது.

Saturday, May 2, 2009


சிதறும் நம்பிக்கை - கலைஞர்



கலைஞரின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கின்றது. சிங்கம் போன்று சிலிர்த்துக் கொண்ட கலைஞர் கனவாக காணாமல் போய் விட்டார். பயந்து நடுங்கி ஒடுங்கிப்போய் விட்ட கலைஞரைத்தான் பார்க்க முடிகின்றது. முதுமையும் அவரைத் தள்ளாட வைத்துவிட்டது. மனதிலும் உடலிலும் அந்தத் தள்ளாட்டம் தான்.

அவர் செய்த காரியங்களே செய்தியாயிருந்தது போய் அதை ஏன் செய்தோம் என்ற விளக்கம் கொடுத்து செய்தியாக்க வேண்டியிருக்கின்றது.

அண்மையில் இருந்த உண்ணாவிரதம் பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டியே உண்ணாவிரதம் இருந்தேன் என்று விளக்கியிருந்தார். அதை யாரும் நம்பவில்லை என்ற நிச்சயத்துடன். கூடவே சுய பச்சாதாபம் வேண்டிய ஓரிரு வரிகள் . நேசத்துடன் பழகிய நண்பர்கள் இன்று தூற்றுகின்றனர். அது ஓராயிரம் உளி கொண்டு தாக்குகின்றது என்னை என்று.

இப்படித்தான் அண்மையில் இன்னுமொரு கடிதம் உடன்பிறப்புகளுக்கு. உங்கள் மனதில் நானிருக்க ஏன் கவலைப்படவேண்டும் என்று கேட்டெழுதியிருந்தார். அவர் கவலைப்படத் தொடங்கி விட்டார். அவர் கைப்பிடி கட்சியிலும் மக்கள் செல்வாக்கிலும் சரிவதை நன்கு உணர்ந்ததனால் வந்த தன்னிரக்கம்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் எடுத்த முடிவு அவரைத் துரத்தத் தொடஙங்கிவிட்டது என்பது புரிகின்றது. மன்னனாக வாழ்ந்தவர் மண்கட்டியாக வீழ்வது பெரும் துர்ப்பாக்கியம். அந்தத் தவிப்பு அவர் பேச்செங்கும் விரவிக்கிடக்கின்றது.

அதே தவிப்பு ஈழத்தமிழ் மக்களிடமும். மலையாக நம்பியவர் கைவிட்ட தவிப்பு.

அது பிரமிள் கவிதை வரி ஒன்றை நினைவூட்டுகிறது

"தவிப்பு , நம்பிக்கையின் இனிய துகள்களாய்

சிதறி விழுகிறது "


வரட்டு வாதங்களை முன்வைத்து


ஈழத்தமிழர்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பிரஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதே அளவில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அலசல்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு வெளியிடப்படும் அலசல்களில் தங்கள் ஆசைகளை நோக்கங்களைக் கூட உட்புகுத்தி சிலர் கருத்துகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். சிங்கள அரசின் மக்களை மீட்கும் போராட்டம் என்ற பரப்புரை எத்தனை பொய்மையானதோ அதனிலும் பன்மடங்கு தீங்கை விளைவிக்கக் கூடியவை இத்தகைய பரப்புரைகள்.

இத்தகைய எண்ணங்களை வெளியிடுபவர்கள் முதலில் ஈழப்போராட்டத்தின் நோக்கத்தை நன்கு புரிந்து கொள்ளப்படவேண்டும். ஈழப்போராட்டமானது ஒரு கொள்ளைக்கூட்டத்தின் பொழுது போக்கோ ஒரு மாபியாக்கூட்டத்தின் அடக்கு முறை தொடர்பானதோ அல்ல.

ஈழப்போராட்டமானது ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டமாகும். புலிகள் இயக்கம் என்பது அண்ட வெளியில் இருந்து வந்து அந்த மக்களை அடக்கியாளும் கூட்டமல்ல. அந்த மக்களிடையே இருந்து ஒன்று பத்து நூறாக இணைந்து மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கம். அந்த அளவில் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்தை தன் முதல் நோக்கமாகக் கொண்டது. போராட்ட நடை முறையில் சில பல அதிருப்திகளைச் சந்தித்திருந்தாலும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை அன்றும் இன்றும் கொண்டிருக்கும் இயக்கமே.

இதை விளங்கிக் கொள்வதும் ஒன்றும் கடினமில்லை. புலிகள் இயக்கம் இத்தனை ஆளணி வளங்களுடன் ஆரம்பத்திலிருந்தே இயங்கியதல்ல. மக்களுக்கு எதிரான இயக்கம் என்றால் ஆரம்பக்காலங்களிலிருந்தே மக்களின் துணையுடன் வளர்ந்திருக்க முடியாது. ஆரம்ப காலத்தில் இருந்த பல இயக்கங்களில் ஒன்றாகத் தான் இருந்தது. மக்களின் ஆதரவில்த் தான் பாரிய வளர்ச்சியைக் கண்டது.

புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழ் மக்களின் உதவியுடன் நிதி வளங்களைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது. இவர்கள் முன் வைக்கும் புரட்டுக் கருத்தைப்போல பிற்பட்ட காலங்களில் புலிகளின் பிரதேசத்தில் இருந்த மக்கள் பயங்காரணமாக உதவினார்கள் என்று ஒரு பேச்சுக்குக் கொண்டாலும் புலம்பெயர்தேசத்து மக்களை அவ்விதம் அடக்கி வைத்து உதவிகளைப் பெறமுடிந்திருக்காது.

மற்றது சிங்கள அரசாங்கம் கூறுவதைப்போல புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல. பெரும்பான்மை ஈழத்தமிழ் மக்களின் பார்வையில் அவர்கள் விடுதலைப் போராளிகளே. ஒரு சில நாடுகள் புலிகளைத் தடை செய்து பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்திருப்பது அவர்களின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பானதேயன்றி ஈழம் தொடர்பானதல்ல.

இந்தியாவின் தவறான ஈழம் தொடர்பான அணுகு முறையே இராஜீவின் மரணத்திற்குப் பொறுப்பு ஏற்க வேண்டுமே தவிர புலிகளோ ஈழத்தமிழ் மக்களோ அல்ல. அவர்களே பொறுப்பேற்க வேண்டுமென்று நீங்கள் வாதாடுவீர்களானால் தமிழ் மண்ணில் அராஜகம் செய்த இந்திய இராணுவ வீரர்கள் அதிகாரிகள் இராஜாங்கப் பிரதிநிதிகள் அனைவரையும் சர்வதேச நீதி மன்றின் முன் நிறுத்த நீங்கள் தயாராக வேண்டும். அத்தனை கொலைகளையும் அராஜகங்களையும் இந்திய இராணுவம் செய்திருந்தது.

இதில் எவ்விதம் அணுக வேண்டுமென்ற முடிவிற்கு நீங்கள் வரவேண்டும். இன்னும் இராஜீவின் கொலையை முன்வைத்து இந்தியா ஆழமான தவறுகளைச் செய்து கொண்டிருக்கின்றது. இரஜீவைக் கொலைசெய்ய வேண்டுமென்ற மனநிலையை அன்று உருவாக்கியது போன்ற கொதிநிலையை இன்றும் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தீராத பகையையே இந்தியாவின் பால் ஈழத்தமிழ் மக்களிடம் விதைத்துக் கொண்டிருக்கின்றது. என்ன செய்யமுடியும் ஈழத்தமிழர்களால் என்பது ஒரு புறம் இருக்க இன்னுமொரு எதிரி உருவாவதைத் தான் இத்தகைய யுத்தமுன்னெடுப்புகள் ஏற்படுத்தும்.

சிங்கள இராணுவம் பசப்பிப் பரப்பும் கருத்துகளை ஆதரிக்கும் ஒரு மனப்போக்குடன் புலிகளிடமிருந்து மக்கள் விடுவிக்கப் படவேண்டுமென்று மேதாவித்தனமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காஸ்மீரில் இந்திய இராணுவம் புகுந்து கொண்டிருப்பதைப்போல புலிகள் தமிழ் மக்களின் இடங்களில் புகுந்து கொண்டிருக்கவில்லை. அதனால் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்ற வாதமும் அடிபட்டுப்போகின்றது.

சிங்கள இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகவே அங்கு பார்க்கப்படுகின்றது. இத்தனை மக்களும் கொலை செய்யப்பட்டது சிங்கள இராணுவத்தின் ஆயுதங்களாலேயே. புலிகளின் பிடியிலிருந்து மீட்பு என்பதைப் பிரபலப்படுத்த விழையும் இவர்கள் ஏன் சிங்கள இராணுவத்தை குண்டுகள் பொழிவதை நிறுத்தும்படி கோர மறுக்கின்றார்கள்? இந்தக் கேள்வியின் பின்னாலேயே நாம் முன்பே சுட்டிக்காட்டியதைப் போல் இவர்களின் ஆசைகளும் நோக்கங்களும் இருக்கின்றன.

இந்திய மேலாதிக்க மனோபாவத்தை விரும்புபவர்களாக இருக்கக் கூடும். அல்லது இராஜீவின் கொலைக்குப் பழிவாங்கும் நடு நிலை தவறியவர்களாக இருக்க வேண்டும். அல்லது சிங்கள அரசின் பொய்ப்பிரசாரத்தை நம்புபவர்களாக அல்லது உண்மையை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும்.

உண்மையை அறியாதவர்களாயின் தேடி உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் போராடும் ஈழ மக்களுக்கும் நன்மையைத் தரும். அல்லது வேறு காரணங்களைக் கொண்டவர்களாயின் அவர்களை மறுதலிக்கவும் புறந்தள்ளவும் ஈழ மக்களுக்கு உரிமை உண்டு. சேவல் கூவி பொழுது விடிவதில்லை என்பதைப்போல நீங்கள் கூவி ஈழத்தின் விடுதலையைத் தடுக்க முடியாது.

அது இன்றோ நாளையோ அன்றி என்றோ ஒரு நாள் அடையப்பட்டே தீரும். ஈழவிடுதலையில் நாட்டம் கொண்டவர்களும் ஈழ நலன் விரும்பிகளும் இத்தகைய வரட்டு வாதங்களை முன் வைப்பவர்களை இனங் கண்டு புறந்தள்ள வேண்டும். அது எம் மன உறுதியை வளர்த்துக் கொள்ள உதவும்.

Saturday, April 25, 2009


அப்பன் எட்டடி புள்ளை...

கெளபோயின் நடிப்பைப்பாருங்கள் கல்லிலும் முள்ளிலும் நடக்கும் கூலித் தொழிலாளியின் காலில் செருப்புக் கூட இல்லை போஸ் கொடுக்கும் கெளபோயின் காலில் அடிடாஸ் ஸூவு .. அழக்கில்லாத வெள்ளை ஆடை

பொட்டைக்கண்ணினாய் வா..வா
ஊழல் நிறைந்த பாரதத்தினாய் வா..வா








இலங்கையில் போரின் அகோரமும் புலம்பெயர் தமிழரின் எழுச்சிப் போராட்டமும் தமிழக மக்களின் உள்ளக் குமுறல்களும் கல்லுப்போல அசையாது இருந்த உலக நாடுகளின் மனங்களையும் அசைய வைத்திருக்கின்றது. போரினால் இடம் பெயர்ந்த மக்களின் அவசரத்தேவைகளை நிறைவேற்ற ஐ.நாடுகள் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது.

துபாயிலிருந்து கூடாரங்களையும் அவசரத்தேவைப்பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. கூடவே ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு செல்கின்றார்.

போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாகவே கொழும்புப் பயணத்தின் போது அவர் முக்கிய கவனத்தைச் செலுத்துவார் என ஐ.நா.வின் பேச்சாளர் மரி ஒக்காபே தெரிவித்தார்.

"போர்ப் பகுதிக்கு மனிதாபிமானக் குழு ஒன்றை அனுப்பிவைப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுதல், இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிடுவதற்கான அனுமதி மற்றும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்களின் விடுதலை உட்பட முக்கியமான பல விடயங்களையிட்டும் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்கா அரசுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்துவார்.

அதேவேளை பிரான்ஸ் பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறித்தியுள்ளன.
அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அதைத் தெளிபு படுத்தியுள்ளது.


"பாதுகாப்பு வலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், அனைத்துலக உதவி நிறுவனங்களைத் தடுப்பதையும், ஊடகங்கள் அங்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் தம்மைப் பதிவுசெய்து வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அனைத்துலக உதவி நிறுனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறான மக்களுக்கு உதவும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்கின்றது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு உட்பட்ட கடமைப்பாடுகளின்படி நடந்துகொள்ளுமாறு இரண்டு தரப்பையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். இவை மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைந்திருக்கின்றோம்.

இவ்வாறு சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு இருக்கின்றது. இது அத்தனையும் கொழுந்து விட்டெரியும் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்களின் போராட்டத்தினால் உருவானது என்பதை பிரித்தானியப் பிரதிநிதி மில்லிபாண்ட் அண்மையில் ஒத்துக்கொண்டிருந்தார்.

அதிகளவில் ஈழத்தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இதுவொரு கவனிக்கப்படவேண்டிய பிரச்சினை என்பதை இந்நாடுகள் உணர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் 70 இலங்கை தமிழர்கள் படுகொலை ஆவதாக ஐ.நா.,வின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.கடந்த மூன்று மாதங்களுக்குள் 6,432 பேர் பலியாகியிருக்கின்றனர். 13 ஆயிரத்து 946 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வாரத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா., தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், அங்கு பணியாற்றும் டாக்டர்கள் அளித்த தகவல்களின் படி ஐ.நா., இந்த புள்ளிவிபரத்தை தொகுத்துள்ளது.

இப்பிரச்சினைக்கான சர்வதேசத்தின் உதவியையும் அனுதாபத்தையும் அத்தியாவசிய உதவிகளுடன் மட்டும் மட்டுறுத்தி விட்டு விடாமல் தொடரும் இன்வொடுக்குமுறைக்கு நீதியான நேர்மையான தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொள்ள சர்வதேசத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் அத்தியாவசியக் கடமையாகும்.

எம்மக்களின் போராட்டத்தில் தலையிட்டு பின் தள்ளிய சர்வதேசநாடுகள் காத்திரமான தீர்வைப்பெற்றுத் தராது பின்வாங்கி விடமுடியாது. சர்வதேசத்தின் பெயரால் சட்டங்களின் பெயரால் எம் போராட்டத்தை முறியடித்த இந்நாடுகள் எமக்கான நேர்மையான தீர்வை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பில் உள்ளன.

எமதுபோராட்டத்தை பலவழிகளிலும் தடை செய்து முறியடித்த இவர்கள் மீண்டும் எம்மை "கற்காலத்தில்" விட்டு விட முடியாது. இதனைக்கருத்தில் கொண்டு புலம்பெயர் நாடுகளில் எமது போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டவகையில் ஒரு இனம் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சகல தகுதிகளையும் தமிழர் நாம் கொண்டுள்ளோம். ந்ம்பிரச்சினையில் தலையிட்டுள்ள ஐ.நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அந்தப் பொறுப்புள்ளதை எடுத்துக்காட்டி நாம் தீவிரமாகத் தொடர்ந்தும் போராட வேண்டும்.

இதே வேளை டால் ஹால்ஸா அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கன்வர் பால் சிங் இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.

"ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அனைத்துலக சமூகம் ஈடுபடாத அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கம் இந்தப் படுகொலைகளைச் செய்துவருகின்றது" எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இது ஐ.நா.வின் கோட்பாடுககளையும், மனித உரிமைகள் தொடர்பான பிரகடனங்களையும் மீறும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்த சிங், சிறிலங்கா இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பது பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் கொண்டுவருவதற்கு பாதகமானதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சர்வதேசசிறுபான்மை பெரும்பான்மை இனங்களைப் பிரதிபலிக்கும் அமைப்புக்களின் ஆதரவை எம்போராட்டத்தின் பால் திருப்ப வேண்டியதும் எம் முன்னால் உள்ள தேவையாகும். இன்று எம்போராட்டம் முறியடிக்கப்பட்டதற்கு இத்தகைய இன சமூக விடுதலைக்கான அமைப்புகள் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளத் தவறியதும் முக்கிய காரணமாகும்.

இத்தகைய பேரழிவை நாம் சந்தித்திருக்கின்றபோதும் எமக்கான ஆதரவுக்குரல் சர்வதேச அளவில் நலிந்தே ஒலிக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடரும் எதிர்காலப் போராட்டத்தில் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள நாம் முயலவேண்டும்.

இவ்வளவும் நடந்து இன்றுசர்வதேசப் பிரச்சினையாகக் கவனம் பெற்றுள்ள ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி இண்டோ இட்டாலியன் கெளபோய்,

"இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். "

‘’விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும். அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தீவிரவாத இயக்கமாகும். "

என்று கருத்துக் கூறியிருக்கின்றார். "அப்பாக்களை கொல்லும் இயக்கம் "என்று அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிப்போன ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்த அறிவுமில்லாது மூக்கை நுழைத்த அப்பன் எட்டடி பாய்ந்தால் ....

எப்படி இவர்களால் எல்லாம் இப்படி கூமுட்டைகளாக இருக்க முடிகின்றது. இவர்கள் கையில் தான் எதிர்கால ஒளிரும் இந்தியாவின் தலைவிதி..


பிந்திக்கிடைத்த அமெரிக்க அறிக்கை: இலங்கையில் இருதரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரச்னைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முயன்றால் அது இலங்கையின் ஒற்றுமைக்கும், மறுசீரமைப்புப் பணிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைப் பிரச்னை குறித்து அமெரிக்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், தற்போதைய சூழல் இரு தரப்பினரிடையேயும் பகைமையை வளர்க்கவே உதவும் என்றும், இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

தற்போது சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும் சந்திக்க அனுமதிக்குமாறும், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

Thursday, April 16, 2009


ஜெ இன் வாண வேடிக்கை


இன்று அ।திமு।க கூட்டணியின் தேர்தல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது। தி।மு।க வின் குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரவும் கச்சதீவை மீட்டெடுக்கவும் மணல் கடத்தலைத் தடுக்கவும் மின்சாரம் தடையின்றிக்கிடைக்கவும் அ।தி।மு।க வை ஆட்சிக்குக் கொண்டுவரும் படி வேண்டு கோள் விடுக்கப்பட்டிருக்கின்றது।

என்னடா இது। இது தானா ? தமிழகத்தின் பிரச்சினை। தமிழக மக்களின் கஷ்டங்கள் ...கச்சதீவு இல்லையென்பதனாலோ மணல் கடத்துவதாலோ மின்சாரம் விட்டுவிட்டு தருவதனாலோ ஏற்பட்டதல்ல என்று யாராவது அம்மணிக்கு எடுத்துச் சொல்லுங்களேன்।

நடைமுறை தெரியாத மக்களின் துயரங்கள் பற்றிய தெளிவில்லாத அக்கறையில்லாத அசமந்தமான கிணற்றுப் தவளைகள் போன்ற அறிவற்ற....இத்தகைய அரசியல்வாதிகளைப் பெற்றுக் கொள்ள நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?

கிணற்றுத் தவளைகள் போல கீச்சுக் கீச்சென்று கத்தும் இந்த அறிவற்றவர்களை நாடுகடத்தும் பொது நல சட்டம் ஒன்றிருந்தால் எவ்வளவு நல்லது।

குடும்ப ஆட்சியால் கோடி கோடியாகச் சுருட்டும் கும்பல் தி।மு।க என்று குற்றஞ் சாட்டும் இவரும் ஒன்றும் அப்பழுக்கில்லாதவர் அல்லவே। ஊழலில் திளைத்தவர் அல்லவா?

பாண்டியனை வென்ற கண்ணகி போல 40 வெல்லுவோம் என்பது அ।தி।மு।க வின் கூட்டுக்களவாணி தா.பாண்டியன்।

40 உம் வெல்லுவதற்கு உங்களுக்கு வோட்டுப்போட மக்களுக்கு என்ன செய்து கிழிக்கப்போகின்றீர்கள் என்று ஒரு முறை சொன்னால் நல்லது। அதை கேட்டாலாவது குற்ற உணர்வில்லாது ஜனநாயகக் கடமையைச் செய்ய் மக்களுக்கு ஏதுவாயிருக்கும்।

ஒன்றுமே செய்யாத உங்களுக்கு 40 ஒரு கேடா?

2 ரூபாய்க்கு அரிசி -ஆடம்பரப்பொருள்
இலவச கலர் டி வி -அத்தியாவசியப் பொருள்

இது தான் இந்தக் கேணையர்களின் பொருளாதார கணக்கு।

இலவசங்களே எங்களுக்குத் தேவையில்லை ஐயா। அடிப்படைக்கல்வி। வேலைவாய்ப்பு நீதியான சமூக ஆட்சி தந்து விடுங்கள் ... 40 என்ன? 400 ஏ தருவோமே?

உங்கள் ஊழல் பற்றிப்பேசிப்பேசியே ஆட்சிக்காலத்தை முடிக்கின்றீர்களே? மக்கள் என்ன மந்தைகளா?

திருட்டுக் கழகங்களுக்கு மாற்று என்ன? சிந்திப்போம்.

குறிப்பு: தென் சென்னையில் ஒரு சரத்பாபுவைப் போல படித்த இளைஞர்கள் முன் வரவேண்டும்। மாற்றம் இவ்வாறுதான் வரமுடியும்।

Monday, April 13, 2009


காதல் வலியைக் கண்டதுண்டோ ..சூடாமணி

ஜூஸ் கொடுத்து வளர்த்த கிளி



இந்தத் தேர்தல் தலைவர்கள் எல்லோருக்குள்ளும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. சிலர் மனதுள் குழப்பத்தையும் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையையும் விதைத்து விட்டிருக்கின்றது.

அ.தி.மு.க வின் இரட்டை இலையில் சின்ன இலையாக இருந்த கலிங்கப்பட்டி வீரனை தேர்தல் சூறாவளி சருகாக உதிர்த்து விட்டிருக்கின்றது. தனது அரசியல் எதிர்காலம் பற்றி நிறையவே யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர் இருக்கின்றார்.

ஒரே உறையில் வைத்துக்கொள்ள முடியாத இரண்டாவது கத்தியாக வீசியெறியப்பட்டதில் இருந்து அரசியல் ஸ்திரம் பறிக்கப்பட்ட நிலையிலேயே காலம் துரத்திக்கொண்டிருக்கின்றது.

பெரும் தொண்டர்கள் ஆதரவோடு பிரிந்து ம.தி.மு.க உருவான போது தி.மு.க அ.தி.மு.க விற்கான மாற்றாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மக்களின் தீர்ப்பில் ம.தி.மு.க வை உள்வாங்க மக்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது உணர்த்தப்பட்டது. எல்லோரும் எம் ஜி ஆர் ஆவது முடியாதது தானே. சிலருக்கு மட்டும் தான் அந்த மச்சம் உண்டு. அது வை கோ விற்கு இல்லை.

அதற்குள் பொறுமையின்றி கூட்டணி ஜோதியில் வை.கோ வும் கலந்து விட மக்களுக்கும் அந்த அவகாசம் தேவைப்படாமலேயே அவரை மறந்து விட்டிருந்தனர். இருந்த போதும் வை கோவின் ஈழத் தமிழர்களின் பால் இருந்த பற்றுதலும் அப்பழுக்கற்ற தலைவர் என்ற நல் மதிப்பும் ஓரத்தில் அவர் மேலான இரக்கத்தைச் சுரந்து கொண்டே இருந்தது.

4இற்கும் 3இற்கும் அவர் இடம் மாறிக்கொண்டிருந்தது ஒரு சலிப்பையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. போடாவில் போட்ட பொண்ணின் பின்னால் சென்றது அவர் ஆண்மை பற்றிய கேள்வியையும் உயர்த்தியிருந்தது. தொண்டர்களின் தளராத உழைப்பிருந்தும் பிரபல்யமான இரண்டாம் மட்டத் தலைவர்களை உருவாக்காது விட்டது பெரும் பின்னடைவைக் கொடுத்தது. இருந்த ஒன்றிரண்டு பெருச்சாளிகளும் பசையுள்ள இடம் நோக்கி நகர அரசியல் தனிமை வை கோ வைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த தேர்தலைப் போல இந்தத் தேர்தலில் நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது சங்கரன் கோவிலுக்கு அருகேயுள்ள கலிங்கத்துப் பட்டிக்கு ஜெயலலிதாவின் விஜயம் இருக்கப்போவதில்லை. அவரை மேளதாளத்துடன் வரவேற்கும் மனநிலையில் வை கோ வும் இல்லை. அந்தத் தேனிலவுக் காலம் எப்போதோ முடிந்து விட்டது. ஜூஸ் குடித்து வளர்ந்த கிளி இன்று கொத்தத் தொடங்கி விட்டது. தொடர்ந்தும் ஒட்டுண்ணிக் கட்சியாக ம.தி.மு.க இருப்பது வை கோ வை அரசியல் நட்டாற்றில் விட்டு விடும்.

அப்போது என்ன தான் செய்வது? வை கோ முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர் வரும் சில ஆண்டுகள் கொண்டுவரும் சமிக்ஞை இப்போதே தெரிகின்றது. மு.க என்ற பழுத்த புலி இல்லாத அரசியலுக்குப் பழக்கப்பட வேண்டியது வரலாம்.

இதுவரை ரெளடி ராஜ்யத்தை நடாத்திக் கொண்டிருந்த தி.மு.க வின் தென்மண்டலம் அரசியலுக்குள் நுழைந்திருக்கின்றது. ரெளடி தோரணை மட்டுமல்ல அரசியல் முகமூடியும் நீண்ட காலப் பாது காப்பு என்பதை உணர்ந்திருக்கலாம். தந்தையின் பின்னால் அரசியல் அநாதை யாக யாருக்கு சம்மதம் இருக்கும்.

தி.மு.க வின் வடக்கும் இதை நன்கு உணர்ந்தே இருக்கின்றது. வடக்கும் தெற்கும் போட்ட பலப்பரீட்சையில் கு.ப.கிருஷ்ணன் பலிக்கடா ஆனது தான் கண்டமிச்சம். ஒற்றுமையின் அவசியம் பற்றி போதிக்கப் பட்டிருக்கின்றது . அது எவ்வளவு தூரம் வேலை செய்யும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் அங்கு குறுநில மன்னர்களும் காரிய வாதிகளும் நிறைந்திருக்கின்றார்கள். முதிய புலிக்கு இருக்கும் மரியாதை பிற்காலங்களில் காணாது போய்விடும். அப்போது எம்.ஜி.ஆரின் பின்னால் அ.தி.மு.க ஜெ அணி ஜானகி அணி என்று இரண்டாகப் பிரிந்தது போலவோ அல்லது உச்சிப் பிள்ளையாருக்கு அடித்த சில்லுத் தேங்காய் போலவோ எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருவரும் காரிய வாதிகள் என்றால் பெவிக்கால் போட்டு ஒட்டியாவது முறிந்துவிடாது வைத்திருக்கக் கூடும். அது அவர்களின் அரசியல் முதிர்மை ஆளுமையைப் பொறுத்தது.

அ.தி.மு.க விலும் இரண்டாந் தரத் தலைவர்களுக்கிடையே குத்துப்பாடும் வெட்டுப்பாடும் நிறையவே இருக்கின்றது. அதே நேரம் மன்னார்க்குடி குடும்பத்தின் இடுக்கிப் பிடியும் கூடவே இருக்கின்றது. சின்னம்மாவும் அரசியல் கோதாவில் இறங்க இருப்பதாக அரசல் புரசலாக செய்தி கசிகின்றது.

இரண்டு கட்சியிலும் உருவாக இருக்கும் பட்டத்து வாரிசு அறிவிப்பில் பெரும் சுனாமியே எழுந்து வீசக் கூடும்.

இந்தச் சந்தர்ப்பத்தை வை கோ தனது அரசியல் மீள் எழுச்சிக்கான காலமாகப் பயன்படுத்தலாம்.

என்ன செய்யலாம் என்று சிறு ஆலோசன.

1) 2இற்கும் 3 இற்கும் கெஞ்சும் கூட்டணியில் இருந்து வெளிவரவேண்டும். (கூட்டணி விவகாரமே அரைவாசிக்கும் மேல் வை கோவிற்கான ஆதரவை இழக்க காரணமாயிற்று.)

2) அதே 2ஐயும் 3ஐயும் தனித்து நின்றே போட்டியிட்டு அடையலாம். அடைய முயற்சி செய்ய வேண்டும்.

3) வாய்ஸ் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவர்களாக அறிமுகப் படுத்த வேண்டும்.

4) அப்பழுக்கில்லாத அரசியல்வாதி இமேஜ் விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும். அ.தி.மு.க, தி.மு.க வில் ஏற்படக் கூடிய சுனாமி பல அதிருப்தியாளர்களை இங்கு கொண்டு சேர்க்கும் என்று நம்பலாம்.

இவையெல்லாவற்றையும் நடை முறைப் படுத்தி மக்கள் மனங்களை வெல்லலாம். மாற்றத்தை எதிர் பார்த்திருக்கும் தமிழக மக்களுக்கு இதை விட சந்தோஷம் வேறு இல்லை.

குறிப்பு: வை கோ வேறு என்ன செய்யலாம். சொல்லுங்கள்.

குருதி கொப்பளிக்கும் புது வருடம்



காலையில் இருந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் யாரும் வாயைத் திறக்கக் காணோம். அனைத்து மனித நேயக்க்காவலர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்க வேண்டும். அல்லது மிட்டாய் கொடுத்து சமாதானப் படுத்திய குழந்தை மீண்டும் அடம்பிடிக்கத் தொடங்கியதாக சமாதானப் பட்டிருக்கலாம்.

சிறிலங்கா தானே அறிவித்த யுத்த நிறுத்தத்தை மீறிக் குண்டுகளைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது எங்களால் தான் என்று மார்தட்டியவர்கள் வாயைத்திறக்கக் காணோம்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஐக்கிய நாடுகள் என்று எல்லோரும் கூட்டாக உரிமை கோரிக்கொண்டார்கள். புலிகளின் பகுதியில் ஒதுங்கியிருப்பதாக எண்ணப்படும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கேற்றாற்போல நார்வே மக்களைக் காபந்து செய்ய களமிறங்குவதாக அறிவித்துக் கொண்டது.

அட..உலகத்தின் கருணை ஈழத்தமிழ் மக்களைக்காக்கப் புறப்பட்டது என்று நிம்மதி ஏற்பட்டது. தி. மு.க வின் பேரணியைப் பார்த்து ராஜபக்ஸ பயந்து விட்டார் என்று தமிழ் நாட்டில் இருந்து மெகா காமடியும் கிளம்பியது.

தேர்தலில் காங்கிரஸை காப்பாற்றிக் கொள்ள கடிதம் எழுதும் கபடமும் நடந்தேறியது. ஏமாந்த தமிழனை மொட்டையடிக்கும் அத்தனை கோமாளிக்கூத்துகளும் நடந்தேறின. அத்தனையையும் பார்த்தும் கருமமே கண்ணாக தமிழன் இருந்தான் தேர்தலில் பதில் சொல்ல.

இப்பொழுது என்ன நடந்தது? நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வர வேண்டிய குண்டு வீச்சு நிற்பாட்டுதல் இன்றி காலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பட்டாசு வெடிக்க வேண்டிய இடத்தில் குண்டுகள் வெடித்து 37 உயிர்களைக் குடித்து விட்டிருக்கின்றது. 112 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். இருந்த
போதும் போர் அரக்கனின் பசி அடங்கவில்லை . தொடர்ந்தும் குண்டுகளுடன் உலா வந்து கொண்டிருக்கின்றான்.

இப்போது சர்வதேசத்தின் வேண்டுகோள்களை மீறிய சிங்கள அரசைக் கண்டனம் செய்வது தானே முறை. ராஜபக்சேயை நிர்ப்பந்தித்து போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டாமா? சிறிலங்கா அரசு மீது தடைகளைப் போட வேண்டாமா?

அப்படித்தான் நானும் நீங்களும் நினைத்துக்கொள்வோம். ஆனால் அரசியல் காமடியர்கள் அதற்கு ஏதாவது காரணம் சொல்லக்கூடும். அட துன்பங்கள் நிறைந்த உலகில் சிரிக்க வைப்பதற்கு யாராவது இருக்க வேண்டாமா?

அது தான் நிறைந்திருக்கின்றார்களே? கரை வேட்டிக்காமடியர்கள்.

"இடுக்கண் வருங்கால் நகுக"-வள்ளுவர்.

அப்போ.. நகுங்கள்.

http://www.maalaimalar.com/2009/04/13144053/CNI0510130409.html

Sunday, April 12, 2009


கிணத்துத் தவளைகளா ? நம் அரசியல் வாதிகள்


தேர்தல் களம் சூடு கண்டிருக்கின்றது. இன்னும் இன்னும் நம் அரசியல்வாதிகள் முத்துக்கள் உதிர்க்கப் போகின்றார்கள். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டைக் கட்டி ஆளப்போகும் இவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது. இவர்களின் கருத்துக்கள் எல்லாம் தனி மனிதத் தாக்குதல்களை மீறி எதுவும் இல்லாது வெற்றுக் காகித அம்புகளாக விழுந்து தொலைக்கின்றன.

ஒளிரும் இந்தியக் கனவு ஒவ்வொரு இந்தியன் மனதுள்ளும் இருந்து தொலைக்கின்றது. அது தான் பிரச்சினையே. இவர்களின் அரை வேக்காட்டுத்தனமான பேச்சுக்களை ஜீரணிக்க முடியாது இருக்கின்றது. பா.ஜ.க வின் ஆயுதம் முஸ்லீம்களையே குறி வைத்துத் தாக்குகின்றது. இந்திய முஸ்லீம்கள் என்ன அன்னிய தேசத்தவரா? அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையென்று இவர்களிடம் யார் சொன்னது?

மிக வெளிப்படையாகவே முஸ்லீம்களின் மீதான வெறுப்பைக் கக்குகின்றார்கள். இந்தியாவின் ஒளிரும் எதிர்காலம் பர்றி யாருக்கும் கவலையில்லை. வார்த்தை ஜாலங்களினால் எதிரிகளை உருவாக்குகின்றார்கள். காஸ்மீர் மக்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களின் பிரச்சினையை நாம் தீர்க்காமல் வேறு யாரால் தீர்க்க முடியும்?

பாகிஸ்தானியர்களை இப்பிரச்சினையில் முடிச்சுப்போட்டது எம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? பிரச்சினைகளைத் தீர்க்க வழி தெரியாத அரசியல்வாதிகள் புதுப் பிரச்சினையை உருவாக்குகின்றார்கள். பிரச்சினைகளின் ஊடே தங்கள் காலத்தைக் கடத்துகின்றார்கள். எதிர்கட்சிகளின் கருத்துக்களை ஆரோக்கியமான அரசியலில் பயன் படுத்தாது தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டி கொச்சைப் படுத்து கின்றார்கள். ஒரு கலைஞரும் ஜெயலலிதாவும் தானா தமிழ் நாட்டின் பிரச்சினை.

இந்தியாவின் வல்லரசுக்கனவை வழிப்படுத்தும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் அடிமைப்பட்டுக்கிடப்பது பெரும் கொடுமை.

தன் குடும்பம் தன் தொண்டன் தன் கட்சி என்பதை மேவி உலகத்தை பார்க்கும் பக்குவம் இவர்களுக்கு வாராது போனதேன்?

முன்னைநாள் இந்தியப் பாது காப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸை அமெரிக்க விமான நிலையத்தில் நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்தது பற்றி இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை. தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று இலங்கை இராணுவ தளபதி கூறியது பற்றி யாருக்கும் துக்கமில்லை.

சொந்த தமிழ் மக்களைக் கொண்டு போடும் சிங்கள கொடுங்கோலருக்கு வக்காலத்து வாங்க நான் நீ என்று போட்டி போடுகின்றார்கள். இவர்களைப் பற்றி வெளியுலகத்தில் என்ன பேசிக்கொள்கின்றார்கள் என்னும் ஞானமோ அக்கறையோ இல்லாது இருக்கின்றார்களே? குறைந்த பட்ச உலக அறிவு கூட இல்லாது எப்படி இவர்களால் அரசியல் வாதிகளாக இருக்க முடிகின்றது.

இவர்களைத் தெரிவு செய்ய ஒரு தேர்தல் ,அவர்களை நம்பி நம் தலைவிதியை ஒப்படைக்க ஒரு தேசம்.

குறிப்பு: கரை வேட்டிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். வேட்டியை அவிழ்த்து சோதனை செய்யும் போது ஏதாவது புரிகின்றதா என்று பார்க்க வேண்டும்.

எத்தனை காலத்திற்குத் தான் மக்களே அவமானப்படுவது?
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil