ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 16, 2009


காசுக்கு சோரம் போனவர்களே?


இந்தியன் வென்றான் தமிழன் தோற்றான். இந்திய தேர்தல் முடிவுகள் இதைத்தான் காட்டி நிற்கின்றன. பல இலட்சம் ஈழத்தமிழரின் குருதி மேல் ஓடிய தி. மு.க படகு சோனியா காங்கிரஸின் கடலில் கலந்திருக்கின்றது. வாழ்த்துக்கள். தமிழினத் தலைவன் என்று பெயரெடுத்தவரே தமிழினத் துரோகியாகவும் மாறிய சாகசம் இங்கு நடந்திருக்கின்றது.

இனி உண்மையிலேயே கலைஞர் துன்பப்படும் ஈழத்தமிழனுக்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போடமுடியாது. அதுவுமல்லாது அங்கு அரங்கேறும் கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சி சொல்லும் சங்கடமும் வந்து சேரும். எங்கோ ஒரு மூலையில் மனச்சாட்சியின் ஒரு துளி துடித்துக்கொண்டிருந்தாலும் அதை அடக்கி ஆமைப்பூட்டு பூட்டி விட வேண்டும் கலைஞர்.

சோனியாவின் கள்ளத்திற்கும் கபடத்திற்கும் தன்னை மட்டுமல்லாது ஆறு கோடி தமிழகத் தமிழரையும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார். இன்றைய தமிழனை மட்டுமல்ல இனி வரும் தலை முறையையும் தான். சுயமானம் தன் மானம் என்பதையெல்லாம் இழந்த ஒரு இனத்தை அடிமைகளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து இந்திய மேலாதிக்கத்திடம் (நிச்சயமாக அதில் தமிழினம் இல்லை) கொடுத்தாகிவிட்டது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தோல்விகண்டிருந்தால் தமிழன் உணர்வுக்கு சிறிதளவேனும் ஹிந்திக் காரன் பயப்பட்டிருப்பான். இனி தமிழனை எதுவும் செய்யலாம் என்ற தைரியத்தில் ஆடப்போகின்றான். இன்று ஈழத்தமிழன் நாளை தமிழகத் தமிழன். இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்.

அன்று மொழித்திணிப்பில் இதைத்தான் செய்ய முற்பட்டான். அன்று தமிழகத்தில் எழுந்த எழுச்சியில் தயங்கி நிற்கின்றானேயொழிய மறந்து போகவில்லை. அன்று பார்ப்பனர்கள் வளர்க்க விரும்பிய இந்திய மாயையை அன்று எதிர்த்த தி.மு.க வே இன்று வளர்க்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் தோல்வியாளர் தான். தோற்றவர்கள் என்றோ ஒரு நாள் எழுந்து விடலாம். நம்பிக்கெட்டவர்களின் இதய வலி என்றும் ஆற முடியாது. இன்று நம்பிக்கைத் துரோகம் அவர்கள் நெஞ்சில் குத்தியிருக்கின்றது.

கலைஞரின் சாணக்கியத்தை நீங்கள் கொண்டாடலாம். ஆனால் கருணை பற்றி நீங்கள் பேச முடியாது.ஒரு இனத்திற்கு சமாதி கட்டி மண்போட்டுத் தூவிய பெருமையை நீங்கள் கொண்டாடி மகிழலாம். தலைவன் மீது கொண்ட பற்றுதலால் என்ன செய்கின்றோம் என்று அறியாது தவறை நீங்களும் செய்கின்றீர்கள்.

பிரபல கண்மணிகள் எல்லாம் எழுதித்தள்ளலாம். சிரித்து மகிழலாம்.உங்கள் கால்களின் கீழ் உங்கள் சகோதரரின் இரத்தம் கிடக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் நிலத்தைப் பார்ப்பதில்லை. நிலத்தைப் பார்க்கும் போது ஈழத்தமிழினம் தொலைந்து போய் இருக்கும்.

எதிரிகளை விட எங்களவனால் தான் எங்களுக்கு எப்போதும் துயரம், இழப்பு.
அன்று ஒரு எட்டப்பன் இன்று ஒரு "எந்தலைவன்".

ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல இது உலகத்தமிழனுக்கும் பொதுவான விதி போலும்.நடத்துங்கள் உங்கள் எகத்தாளங்களை.உயிர் இருக்கும் வரைதான் சிரிக்க முடியும்.

எம் கவலையெல்லாம் நாளை இந்த ஈனத்தமிழினத்துக்கு நடக்கும் இழி நிலையைப் பார்க்க உங்கள் "எந்தலைவன்" இருக்க மாட்டான் என்பது தான். அப்போதாவது அவன் செய்த தவறைப் புரிந்து கொள்வானா என்று பார்த்துக்கொள்ளத்தான்.

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் "எந்தலைவனுக்கும்"

9 comments:

ரங்குடு said...

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க ஜெயித்திருந்தாலும் (மற்றவர்கள் தேற மாட்டார்கள்) பெரிசாக ஒண்ணும் நடக்கப் போவதில்லை.

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உதவிக்கு அழைப்பதை விட, உலக நாடுகளை உதவி கோருவது நல்லது.

இருமேனிமுபாரக் said...

நொந்து கெட்டவன் அழுகிறான். கவலைப் படாதே சகோதரா.. ஜெயலலிதாவும்,வைகோவும்,ராமதாசும் வந்தாலும் நீங்கள் நினைத்து மகிழும் படி எதுவும் சாதித்து விட முடியாது என்பது தான் உண்மையிலும் உண்மை. ஜெயாவை இப்பொழுது ஈழத்திற்கு ஆதரவாக பேசச் சொல்லுங்கள். பேச மாட்டார். அல்லது தான் தோற்றதை ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கள். மாட்டார்.

இட்டாலி வடை said...

வாருங்கள் இருமேனிமுபாரக் !

நாங்கள் எதிர்பார்த்தது காங்கிரஸ் அகற்றப்படவேண்டும் என்பதே..

பலராலும் சொல்லப்படுவதைப் போல இந்திய மேலாதிக்கத்தையும் விட ஒரு காரணம் கூட இருக்கின்றது சோனியா காந்தியின் காங்கிரஸ்ஸிற்கு. அது தனிப்பட்ட காரணம் தன் கணவனைக் கொன்ற புலிகளை அழிப்பது. வலி மிகுந்ததும் வைராக்கியம் மிக்கதும். ஆனால் இழப்பு என்னவோ அப்பாவி மக்களுக்குத் தான்.. அதை யாரும் கருணையோடு பார்க்கவில்லை.

ஜெயலலிதா வெற்றி கொள்ள விரும்பியது தமிழீழம் கிடைக்குமென்பதால் அல்ல.. அரசியல் குளறுபடியில் மத்திய அரசின் கவனம் உள்நாட்டிலேயே இருக்கும்.

புலிகள் அதற்குள் சிங்கள அரசுடன் போராடி முடித்திருப்பார்கள்.

இரண்டும் நடக்கவில்லை. தமிழக மக்கள் என்ன கல்நெஞ்சம் படைத்தவர்களா?

உப்புச்சப்பில்லாக் காரணத்திற்கெல்லாம் ஆட்சி மாற்றம் கொடுப்பவர்கள்.. தன் மக்களின் உயிர் வதையை நீக்குவதற்கு விரும்பவில்லை..

இட்டாலி வடை said...

வாருங்கள் ரங்குடு !

மேலுள்ள காரணங்கள் தான் ..உங்களுக்கும் விடையாகும்..

இந்தியாவின் உதவியை அல்ல உபத்திரவத்தை ..விலக்கவே ..

காங்-தி.மு.க கூட்டணி தோற்க வேண்டுமென்று விரும்பியது.

வடக்கு மாநிலங்களில் காங்கிரஸின் வெற்றி ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கத்தை விரும்பும் ஹிந்திக்காரனின் விருப்பமும் தான்.. அதற்கு நம் தமிழனும் கூட்டு.

இதயம் நிறையவே வலிக்கின்றது..

பகுத்தறிவு முழக்கம் said...

அட எல்லாருக்கும் நன்றிங்க!

சீமான் சிறை போவான்
வைகோ வாழ்விழப்பான்
நெடுமாறன் நொண்டியடிப்பான்
பாரதி ராஜா பயந்து போவான்

இப்படி நீங்கள் நினைத்தால்
நீங்கள் முட்டாள்

இட்டாலி வடை said...

வாங்க பகுத்தறிவு !

//இப்படி நீங்கள் நினைத்தால்
நீங்கள் முட்டாள்//

அதுதான் உங்களை எங்களையெல்லாம் முட்டாளாக்கி விட்டார்களே மக்கள்..

இனி சிறை போயென்ன போகாமல் என்ன?

தேர்தல் மறுமொழியும் புலிகளின் ஆயுத கைவிடல் அறிவிப்பும் ..உங்களுக்கு என்ன சொல்கின்றது...

தமிழன் இனி அடிமை சாதி தான்.. சாதிச்ச கலைஞரும் அவர் கண்மணிகளும் மட்டும் மகிழ்வார்கள்.... மற்றெல்லோரும் அழுவார்கள்.

iskcon said...

மகிந்தா நெஞ்சில் குத்த தமிழக மக்களோ முதுகில் குத்தி விட்டனர்

Anonymous said...

மகிந்தா நெஞ்சில் குத்த தமிழக மக்களோ முதுகில் குத்தி விட்டனர்

தமிழ்நதி said...

பணத்தால் மக்களை வாங்க முடிந்திருக்கிறது. இப்போது ஈழத்தமிழர்களுக்காக மட்டுமல்லாது, தமிழகத் தமிழர்களுக்காகவும் அழவேண்டிய நேரம். புதைகுழி என்று அறியாமல் புதைந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil