ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Thursday, April 30, 2009
பதிவுலகமும் தேர்தலும்
பதிவுலகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது. ஈழத்துப்பிரச்சினை முழு அளவில் இத்தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அது பற்றிய நம்பிக்கையும் பயமும் நம்பிக்கையீனமும் கொண்டதாக அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. மகிழ்ச்சியும் காழ்ப்பும் வெறுப்பும் கொண்டதான உணர்ச்சிகள் காட்டமாகவும் மிதமாகவும் வெறுப்பாகவும் வெளிக்காட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நமக்கேன் வம்பென்று ஒதுங்கிப்போபவர்களையும் காணமுடிக்கின்றது. அப்படிப்பட்டவர்கள் கும்மி கும்மாளம் அவியல் தொவையல் என்று பதிவுகளைப்போட்டு காலந் தள்ள நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்.
ஒரு காலத்தில் தேனீக்கள் போல மொய்க்கப்பட்டவர்கள் எல்லாம் ஈயடிக்கும் பரிதாபம் எலக்ஷன் வரை நீடிக்கும் என்றே தோன்றுகின்றது. அந்தளவிற்கு உணர்ச்சிகளின் குவியலாகப் பார்க்கப் படும் இந்த எலக்ஷன் காலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் இழந்த உயிர்கள் மிக அதிகம்.
அதுமட்டுமில்லாத சிறப்பு குற்றச்சாட்டு இந்தப் போரின் பின்னணியில் இந்தியா பங்கு கொண்டிருக்கின்றது என்பது. இந்தியாவின் பங்களிப்பை தேர்தலின் பொருட்டு மறைத்தும் உயர்த்தியும் வெளிப்படுத்தும் தலைவர்களால் தேர்தல் மேடைகளில் சூடு பறக்கின்றது. தமிழக மக்கள் பிரச்சினையெல்லாம் அடிபட்டுப்போகும் அளவில் ஈழப்பிரச்சினை என்ற ஒரே அச்சிலேயே இந்தத்தேர்தல்க் களம் சுற்றிக்கொண்டிருக்கின்றது.
பதிவர்களில், கட்சிகளின் நீண்ட நாள் தொண்டர்கள் நம்பிய கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்க பொதுவில் இருப்பவர்கள் கள நிலைக்கேற்ப கட்சி மாறிக்கொண்டிருக்கின்றார்கள். கட்சித் தொண்டர்களுக்கு அடித்து ஆட இடமில்லாது அரைத்தமாவை அரைக்கும் துர்ப்பாக்கியம் நேர்ந்திருக்கின்றது.
இன்றைய நிலை மட்டுமில்லாது அன்றைய "மகிழ்ச்சிக்கால" கட்சி அனுபவங்களையும் இரை மீட்ட முற்படுகின்றார்கள். அவர்களுடைய மனமும் நிறமும் ஒரே இடத்தில் ஊறியிருப்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது தான். கட்சி நிலைகளை செயற்பாடுகளை வக்காலத்து வாங்குவதற்கு முன்னால் ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்கள் நிலைப்பாடு எடுக்க வேண்டிய அதிமுக்கிய நடவடிக்ககள் பற்றிய அபிப்பிராயங்களை முன் வைத்தால் கட்சி தாண்டிய உண்மை முகத்தைப்புரிந்து கொள்ள முடியும். அப்படி யாரும் வெளிவரத் தயங்குவது அவர்களைப் பற்றிய புரிதலில் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பதிவர்களுக்குத் தீனி போடும் வகையிலேயே அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ்-தி.மு.க, அ.தி.மு.க-ம.தி.மு.க கூட்டணியே பதிவுகளில் முழுமையான தாக்கம் செலுத்துகின்றன. பா.ஜ.க, விஜய காந்த் மற்றும் உதிரிகளாக தேர்தல் களம் காண்போர் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையே இங்கு காணப்படுகின்றது.
உதிரிக்கட்சிகளின் தாக்குதலும் குற்றச்சாட்டுகளும் அவர்களைப்போலவே இடையிடையே எரியும் தீக்குச்சிகளைப்போல எரிந்து அணைந்து போகின்றன செய்திகளில்.
சுவாரஸ்யம் இரு பெரும் கூட்டணிக்கட்சிகளைச் சுற்றியே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் மேலுள்ள ஈழ யுத்தம் சார்ந்த குற்றச்சாட்டானது அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க வை சுதந்திரமாக தேர்தல் யுத்தத்தைச் சந்திக்க முடியாது முடக்கிப் போட்டிருக்கின்றது. தமிழர்களோடு எப்போதும் "தமிழால்" பேசும் கலைஞர் இப்போது தேசியத்தை அடைகாக்கும் வேலையைச் செய்யும் இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கின்றார். அப்படியில்லையாயின் கலைஞரை அடிக்க இங்கு ஆளே இருக்க மாட்டார்கள். காங்கிரஸ் என்ற மறைப்பைக் கண்ணில் கட்டிய குதிரையின் வேகம் போல நிதானமாக ஓடுவதே கலைஞருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது.
தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட "பிரபாகரன் என் நண்பர்"போன்ற சாணக்கிய ராஜதந்திர தொலை நோக்கு ஆயுதங்களைப் பறியில் போட வைத்து விட்டது காங்கிரஸ். "தனித்தமி்ழீழம் " அமைத்துக் கொடுப்பேன் என்று கர்ஜித்துக் களம் இறங்கியுள்ள ஜெயலலிதா என்ற புலியைக் களத்தில் சந்திப்பதற்கு கலைஞரிடம் ஆயுதங்கள் இல்லாது தற்காப்புச் சண்டையில் இறங்கியுள்ளார்.
ஆயுதங்கள் வேண்டுமெனின் தடைக்கல்லாய் இருக்கும் காங்கிரஸைக் கழட்டி விடவேண்டும் .அதற்கு காலமும் நேரமும் மனமுமில்லாது விதியின் வழியில் கலைஞர் செல்ல முடிவு செய்திருப்பது உடன் பிறப்புகளை கலக்கமடையச் செய்திருக்கின்றது.
அந்தக்கலக்கமே அபி அப்பா போன்ற பதிவர்களை "உடன் பிறப்புகளுக்கு உற்சாக பாடம்" போன்றவற்றை பாகம் பாகமாக எழுத வைத்திருக்கின்றது. தி.மு.க வின் கல்தோன்றாக் மண்தோன்றாக் காலத்துப் பெருமைகளை தூசு தட்ட வைத்திருக்கின்றது. வழமையாக கலஞர் தான் இவ்வகை "ஞாபகப் படுத்தும் " கடிதங்களை எழுதுவார். இப்போது தொண்டர்களும் கடிதம் எழுதப் பழகிக் கொள்கின்றார்கள். அவ்வளவிற்கு அவர்கள் "சைடு வீக்கு".
அ.தி.மு.க விற்கு அந்தமானில காத்தடிச்சா கோடியாக் கரையில மழை பெய்யிற மாதிரி தி.மு.க விற்கு எதிரான மழை போயஸ் கார்டனில் கொட்டி செழிப்பூட்டிக் கொண்டிருக்கின்றது. அதற்கு சசி ,ரோசாவசந் , நிலவுப் பாட்டு போன்றோரின் பதிவுகளே சாட்சி. ஏன் அ.தி.மு.க விற்கு வாக்குப் போட வேண்டுமென்ற கேள்வியை முன் வைத்து இவர்களில் யாரும் வாக்கு கேட்கவில்லை. ஆனால் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டிய காரணங்களை அடுக்கி வைத்திருக்கின்றார்கள். கழுதையோடு சேர்ந்த வாலாக தி.மு.க விற்கும் இது எதிராகப் போய் விடுகின்றது.
அதே நேரம் ஈழத்தமிழ் பதிவர்களான பருத்தியன், கவிஷன் போன்றோரின் தம் மக்கள் கொல்லப்படும் நேரத்திலும் "கண்டு கொள்ளாது" இருந்த கலைஞர் மீது ஏற்பட்ட மனக்குறை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகப் பதிவுக் களத்தை அதிரடித்துக் கொண்டிருக்கின்றது.
பதிவுலகமும் இன்று பிரச்சாரத்தில் நடுத்தர மேல்தட்டு மக்களால் கண்டு கொள்ளப்படும் பிரச்சார ஊடகம் என்ற அளவில் இதன் தாக்கமும் பெரிதாக இருக்கும். எழுதுபவர்களை விட பதிவுலக பதிவுகளை வாசிக்கும் மக்கள் தொகை மிக அதிகம் என்பதால் இதன் தாக்கமும் பெரிய அளவில் இருக்கும். பெரும் பத்திரிகை ஊடகங்களும் பெரும் எழுத்தாளர்களும் பதிவுலகில் கால் வைத்து இந்த ஜோதியில் கலந்திருப்பதே இதை உறுதி செய்கின்றது.
உலகத்தின் எந்தப்பகுதியில் இருப்பவரும் இன்று தமிழகத் தேர்தலில் கருத்தும் அபிப்பிராயமும் சொல்லமுடிந்ததே பதிவு்லகின் ஆளுமைக்கும் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்திற்கும் சான்றாகும்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் பதிவர்களின் பெயர்கள் நட்பு அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. விருப்பமற்றவர்கள் தெரிவித்தால் மன்னிப்புடன் பெயர்கள் அகற்றப்படும். பலரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லையென்பதால் அவர்கள் பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடப்படுவதாக கொள்ளல் ஆகாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment