ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, April 6, 2009


தமிழக மக்களே தீர்ப்பாளர்கள் - புலிகள்


ஈழத்தமிழர் பிரச்சினையே இன்று தமிழக உறவுகளின் மனதை ஆட்டிப்படத்துக்கொண்டிருக்கின்றது. அதையே இன்று தமிழக அரசியல் தலைவர்களின் கட்சிபேதமற்ற உரத்த குரல்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.


இலங்கை தனியான இறைமையுள்ள நாடு . அதன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று பழைய வரலாற்றை மறந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் கட்சி முதல் திராவிடக்கட்சிகள் வரை உண்ணாவிரதப்போராட்டம் மனித சங்கிலி யுத்த நிறுத்த வேண்டுகோள் என்று பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

இதில் யார் உண்மையுடன் பங்கேற்கின்றார்கள் யார் தேர்தல் வெற்றியை மனதில்க்கொண்டு போலி முகம் காட்டுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஏனெனில் இது தமிழக மக்களின் உணர்வுகளால் ஏற்பட்ட அரசியல் எழுச்சியாகும். எந்தச்சந்தர்ப்பத்திலும் மக்களை நினைவு கொள்ளாது தங்கள் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டவர்களின் கவனத்தை தம்பால் இழுத்துக்கொண்டது தமிழக மக்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

எதிர்வரும் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் தம் எதிர்ப்பைப் பதிவு செய்வது மக்களின் வெற்றியை முழுமையாக பூரணப்படுத்தும். மக்களை மந்தைகளாக நினைத்துச் செயற்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை மாற்றிப்போடும். அதுவே தொடர்ந்து தமிழகத்தில் வேண்டிய மாறுதல்களைக்கொண்டு வர அரசியல்வாதிகளைக் கடிவாளம் இடும் சக்தியாக வெளிப்படும்.

மக்களின் வெறுப்பிற்கும் எதிர்ப்புக்கும் உட்படும் அரசியல்வாதிகளால் பிழைத்துக்கொள்ள முடியாது என்பதை பாடமாகப் புகட்டும். என்ன செய்வது? தாய்த்தமிழகம் தன் கிளைத் தமிழர்களுக்கு (ஈழ,மலேசிய, சிங்கப்பூர் மற்றும் உலகு வாழ்) காட்ட வேண்டிய வழிகாட்டல் ஈழத்தின் இழப்புகளில் இருந்து ஏற்பட்டிருக்கின்றது.

இத்தகைய தமிழக மக்களின் வீறு கொண்ட எழுச்சியே ஈழ மக்களுக்கும் அளப்பரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. இது ஒன்றிலிருந்து ஒன்றாக வாழ்வின் மீதான நம்பிக்கையைச் சுற்று வட்டத்தில் அனுப்பிக்கொண்டிருக்கும்.

இதுவே ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஜனசக்தி' நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசனை, "எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவிக்க வைத்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த 'ஜனசக்தி' நாளேட்டுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில்,

போர் நிறுத்தத்திற்காக ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு குரல் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லையே?... 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் ஈழ ம‌ண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தும் யாராலும் தடுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?...

பல காரணங்கள் உள்ளன.

தடுக்கும் வல்லமை படைத்தவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு உடையவர்களாகவும் இருப்போர் அதனை உரிய முறையில் தடுக்கத் தவறியது ஒரு காரணம். நியாயமான அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை, இந்த உலகம் "பயங்கரவாதம்" எனச் சித்திரித்தது அடுத்த காரணம். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு இந்த உலகமே திரண்டு உதவிகள் செய்வது இன்னொரு காரணம். தனது தென் கோடியில் தனக்குப் பலமான பாதுகாப்பாய் - உண்மையான நண்பர்களாய் - எப்போதும் இருக்கின்ற தமிழீழத் தமிழர்களை இந்தியா அவ்வாறு கருதத் தவறியது இவற்றுள் முக்கிய காரணம்.

இப்போது ந‌டந்து வரும் போரில் இதுவரையில் மொத்தம் எத்த‌னை த‌மிழ‌ர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்?... வீடு இழ‌ந்த‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர்?... காய‌ம் அடைந்த‌வ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு பேர்?...

நாங்கள் சொல்லுகின்ற தகவல்களை இப்போதைக்கு ஒரு பக்கத்தில் வைத்து விடுவோம். பக்க சார்பற்ற விதத்தில் ஐ.நா. சபையினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் - இப்போது அவர்களுக்குத் தெரியாமலேயே வெளியாகிவிட்டன. இந்த தகவல்களின் அடிப்படையில் - கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் வன்னிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 2,683 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7,241 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் - ஜனவரி முதல் நாளிலிருந்து மார்ச் 31 ஆம் நாள் வரை வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,001. மூன்றரை இலட்சம் வரையான மக்கள் - தமது வாழ்விடங்களை, வீடுகளை, தொழில்களை, கல்வியை, வாழ்க்கையை, எல்லாவற்றையுமே இழந்துவிட்டு - வெறும் கடற்கரை மணலில், வெறும் கூடாரங்களுக்குள் வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதன் வாழுவதற்கு மிக மிக அடிப்படையான விடயங்களான உணவு, உடை, உறக்கம், சுகாதார வசதி, மருத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பும் நிம்மதியும் - எதுவுமே இந்த மக்களுக்கு இல்லை.... - இது புலிகளின் ஈழத்தமிழ் மக்களின் ஆதங்கம்+நம்பிக்கை.


குறிப்பு: தமிழக மக்கள் வழிகாட்டிகளாக தாய்த் தமிழகம் என்ற பாசத்துடனும் நேசத்துடனும் முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. உலகத்தமிழ் மக்களின் எழுச்சி நேரம் இது. தமிழக மக்கள் குத்தப்போகும் முத்திரை தமிழ் அன்னையின் வாழ்விற்கு விதைக்கப்படும் காணிக்கை. தமிழக மக்கள் செய்வார்களா?

குறிப்பு 2) : எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை அறிஞர் பெருமக்களும் அப்பழுக்கில்லா அரசியல் ஆர்வலரும் சேர்ந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
49-0 பற்றியும் பேச்சு அடிபடுகின்றது.

3 comments:

ttpian said...

நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது

இட்டாலி வடை said...

இன்னும் பல சிந்தனைகள் உள்ள பதிவுலக நண்பர்கள் இருக்கின்றார்கள். அடிப்படையில் தமிழகத்தில் ஒரு "மாற்றம்" தேவை என்ற உணர்வு நம் மக்கள் எல்லோரின் மனங்களிலும் உண்டு.
கண்ணுக்கு தெரியும் தூரம் வரை சென்றால் தான் செல்லவேண்டிய இடம் தெரியும் என்பார்கள். இப்போது நமக்கு வேண்டியது.ஆரம்பம் அதாவது செயலைத் தொடங்கும் ஆரம்பம். அது இத்தேர்தலில் இருந்து ஆரம்பிக்கட்டும்.
இதனையும் படித்துப்பாருங்கள்.

http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_8596.html

பிளாட்டினம் said...

http://paruththiyan.blogspot.com/2009/04/blog-post_06.html

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil