ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, April 22, 2009


ஈழப்போர் - உண்மை முகம்


ஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அது மிகவும் தவறானது. சர்வதேசத்தின் ஆதிக்கம் சார்ந்த நகர்வுகளே இன்று ஈழத்தமிழ் மக்களின் இரத்தம் சொரியும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பதே உண்மையாகும்.

சர்வதேச சமூகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் என்றும் குறித்து நிற்பதல்ல. அது இராணுவ பொருளாதார பலம் வாய்ந்த சில பத்துக்கணக்கான நாடுகளை மட்டுமே குறிப்பதாகும். அவற்றின் இராணுவ பொருளாதார நலன்களுக்கு அமைவாகவே உலகத்தின் தலைவிதி அடித்து அழித்து எழுதப்படும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அந்த முயற்சியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்படும் நிலையில்த் தான் தமிழ்த் தேசியமும் ஈழப்போரும் இருக்கின்றன. ஆனால் இதுவே முடிவான விதியல்ல என்பதே நமக்கு நம்பிக்கை ஊட்டுவது. இன்றைய முயற்சியில் இலங்கையைக் கூறு போடுவது அல்லது வளைத்துக் கொள்வது என்ற முனைப்பில் பல சக்திகள் இலங்கையில் காலூன்றி நிற்கின்றன. அவற்றின் பலப் பரீட்சை இன்று புலிகளின் கிளர்ச்சிகளை ஒடுக்குவது அல்லது அடக்குவது என்ற சிறிலங்கா சிங்கள அரசின் எண்ணத்திற்கு முட்டுக்கொடுப்பதில் ஒருங்கிணைந்து நிற்கின்றது. அதன் மூலம் சிறிலங்காவில் காலூண்டும் தனிப்பெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு அன்னிய சக்தியும் சிறிலங்காவின் சிங்கள அரசிற்கு அளவில்லா உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் முரண் நகை என்னவென்றால் இயல்பிலேயே எதிர் நிலைகளில் இருக்கும் சக்திகளும் ஒரே விதமாகச் செயல்படுவதுதான். சிங்கள அரச ஆதரவின் மூலம் சிறிலங்காவில் காலூண்டுவது என்பது முதல் படி நிலைதான். இந்த நிலை எவ்வளவு தூரம் போகும் என்பதற்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு முடிவாக்கப்பட்டு சிங்களம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வரை. இரண்டு சிங்களத்தால் அன்னிய சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு அல்லது அவ்வாறாகப் புறக்கணிக்கப்படுவதாக ஏதாவதொரு அன்னிய சக்தி உணர்ந்து அடுத்த நிலையைப் பற்றி யோசிக்கும் வரை.

தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் முதல் நிலையை சிங்களத்தால் அடைய விடாது செய்வதும் இரண்டாவது நிலையை உருவாக்க துரிதமாகச் செயல் படுவதும் தான். முதலாவது நிலை போராளிகளாலும் இரண்டாவது நிலை புலத்திலிருக்கும் மக்களாலும் உருவாக்கப்படவேண்டும்.

சிங்கள அரசு சார்பான அதீதமான உதவிகள் எதிர் எதிர்சக்திகளால் வழங்கப்பட்டபோதும் அவற்றிற்கிடையான புகைச்சல் வெடிக்கும் கொதி நிலையிலேயே இருக்கின்றன. அது வெடிக்கும் போது இயல்பான எதிர்நிலைக்கு இலங்கை விவகாரத்திலும் போவது தவிர்க்க முடியாதது.

எதிர்நிலைக்குப் போகக்கூடிய சக்திகள் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள், ரஷ்ய சார்பு நாடுகள் , மூன்றாவது அணியாக சீனா . இதுவே இன்று உலகம் பூராவும் ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் சக்திகள். இதில் இந்தியா எங்கே என்ற கேள்வி எழுகின்றது?

இவற்றுடன் ஒப்பிடும்போதும் இலங்கை விவகாரத்திலும் இந்தியா இப்போது இரண்டாந்தர சக்திதான். அதுவும் எவ்வளவு காலத்திற்கு என்பதை இந்தியாவின் எதிர்கால அரசியல் முடிவுகள் பொருளாதார பலம் என்பவைதான் தீர்மானிக்கக் கூடியவை. இன்று இந்தியா இரண்டி நிலைகளில் இணைந்து கொள்ளலாம். ஒன்று வழமையைப்போல ரஷ்ய சார்பு நிலையை எடுப்பது. அல்லது புதிய உத்தியாக அமெரிக்க சார்பு நிலையை எடுப்பது.

அமெரிக்க சார்பு நிலை இந்தியாவைப் பொறுத்தளவில் பல சிக்கல்களை முன் வைத்திருக்கின்றது. அதை விவரிக்கப் போனால் அதுவே நீண்ட கட்டுரையாகி விடும். ஆனால் புதிய கள நிலைகள் அமெரிக்க சார்பு நிலையை எடுக்கவே இந்தியாவைத் தூண்டும். அதற்கான தேவைகள் இந்தியாவிற்கு இருப்பதைப் போலவே அமெரிக்காவிற்கும் இந்திய சார்பான தேவைகள் தற்போதைக்கு இருப்பது இந்தியாவிற்கு சாதகமானதே.

இந்த மூன்று சக்திகளிலும் சிங்கள அரசிற்கு எதிராக வெளிவரப்போகும் அன்னிய சக்தி யார்? என்ற மில்லியன் டொலர் கேள்வி எங்கள் முன்னால் இருக்கின்றது. அவ்வாறு நிகழ்வதற்கு உலக அரங்கில் பல இரசாயன பெளதீக மாற்றங்கள் இராணுவ பொருளாதார நிலைகளில் உருவாக வேண்டும். அது எவ்வாறு எப்படி நிகழும் என்பதை வல்லரசுகளின் தன் முனைப்புகளே தீர்மானிக்கும்.

இதே நேரத்தில் சிறிலங்காவில் ஈழம் என்ற அதிகார மையம் உருவாகுவதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியலை தீர்மானிக்கப்போவதும் தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது. அவ்வகையான ஒரு தேவை அன்னிய சக்திகளுக்கு என்றும் இருந்து கொண்டே இருக்கின்றது.

ஈழத்தைப் போலவே இன்றைய ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் எதிர்கால காஸ்மீரும் வடகொரியாவும் தைவானும் இப்பிராந்திய அரசியலில் மையமிடப்போகும் புயலின் மையப்புள்ளிகளாகும். இரண்டாம் உலகப்போரின் பின்னைய காலகட்டங்களில் ஐரோப்பாவில் மையம் கொண்டிருந்த வல்லாதிக்கப் போட்டி இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டது இயல்பாகவே முதலாளித்துவத்தின் நுகர்வுச் சந்தையை மையப்படுத்தியதாக இருந்த போதிலும் அது ஈழப்போரையும் வெகுவாகவே பின் தள்ளிவிட்டது.

இதுவே விதி என்னும் போது இதனூடாகவே தீர்வை அடைவதே தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தமாகும்.

விதியா? சதியா? என்ற ஆராட்சிகளைப் புறந்தள்ளி வேண்டிய இராஜதந்திர அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தமிழ் மக்களின் அவசரக் கடமையாகும். சிங்களப் பேயரசிற்கு முண்டு கொடுக்கும் இனவாதச் சக்திகளிற்கிடையே முரண்பாடுகளைக் கண்டறிதல் அதை தமிழ்த் தேசியம் சார்பாக வளைத்தெடுத்தல் என்பன தமிழ் மக்கள் முன்னாலுள்ள அதியுச்ச பணிகளாகும்.

ஐ. நாடுகள் ஊடான பாதுகாப்புச் சபை கூட்டத்தொடரில் சிறிலங்கா மனித உரிமைகள், இராணுவத்தினரின், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் என்பவை தொடர்பான சிறிலங்கா மனித உரிமை மீறல்களை சில நாடுகள் கொண்டுவர முற்பட்ட சம்பவமானது ஒரு மைல் கல்லாகும்.

இதில் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் அதியுச்ச "வீட்டோ" அதிகாரம் கொண்ட நாடுகள் களமிறங்கியிருப்பது சிறிலங்கா விவகாரத்தில் அவற்றுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலை வெளிப்படப் போவதற்கான அறிகுறியாகும். அமெரிக்கா, பிரித்தானியா,பிரான்ஸ் இவ்விவகாரத்தை ஐ.நாடுகள் சபையில் எடுத்து வருவதை ஆதரிக்கின்ற போது சீனாவும் ரஷ்யாவும் எதிர் நிலையை எடுத்திருக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது.


இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார்.இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்சே அந்தரங்க கூட்டத்தில் முதலில் கோரியுள்ளது.

இதன்போது மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கை சூழ்நிலையை ஒரு விசேட சூழ்நிலையாகக் கருதி பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புப் பேரவையின் தலைவர் குளோட் ஹெலர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் ஈழத்தமிழ் மக்களின் மேலுள்ள 100% அக்கறையினால் என்பதாக அல்லாவிட்டாலும் சிறிலங்கா மீது ஆதிக்கம் செலுத்த விளையும் சக்திகளுள் முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கி விட்டன என்பதையே காட்டுகின்றன. அல்லது தமது மேலாதிக்கத்தை சிறிலங்கா அரசின் மீது இறுக்கத்தொடங்கி விட்டன என்றவாறும் எடுத்துக் கொள்ளலாம். இதிலிருந்து சிறிலங்காவில் அக்கறைப்படும் ஒன்றோ பலவோ சக்திகள் வெளியேற்றப்படப் போகின்றன. இவ்வாறு வெளியேற்றப்படும் சக்திகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள வழி தேடுவது இயற்கையானது.

அவ்வாறான சக்திகளுக்கு சிறிலங்காவில் சிங்கள அரசிற்கு மாற்றுச் சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியத்துடன் இணங்கி வருவது தவிர்க்க முடியாதததாக அமைந்து விடும். இதன் மூலமே சரியான காய் நகர்த்தல்கள் தமிழ்த் தேசியத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத இனமாக்கப்போகின்றது. கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங் கற்றுக் கொள்ளப் போவதும் எதிர்காலத்தை விவேகத்துடன் எதிர்கொள்ளுவதும் தமிழ் மக்கள் முன்னாலுள்ள பணிகளாகும்.

இந்நிலையில் புலம் பெயர்தமிழ் மக்களின் ஆதரவுப் போராட்டங்கள் எவ்வாறு பயனளிக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது. அது நேரடியாக இல்லாதபோதும் மேற்கு நாடுகளின் அரசியல் நகர்வுக்கு தார்மீகப் பலனை அளிக்கும். அல்லது அவ்விதம் கற்பிதம் செய்து அவர்கள் தங்கள் அரசியல் நலனை முன்னெடுக்க ஊக்குவிக்கும். ஆகவே மனஞ்சலியாது எல்லாவகையான போராட்டத்தையும் முடுக்கி விடுவதே இப்போது எம்மால் செய்யக் கூடியது.

3 comments:

பதி said...

இந்த அவல நிலையிலும் அடுத்த நகர்வினைப் பற்றிய சிறு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன இது போன்ற பதிவுகள்.

//சர்வதேசத்தின் ஆதிக்கம் சார்ந்த நகர்வுகளே இன்று ஈழத்தமிழ் மக்களின் இரத்தம் சொரியும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பதே உண்மையாகும்.//

உண்மை. தமிழர்கள் பெரும் இரணுவ வெற்றி பெரும் பொழுதெல்லாம் ஓடோடி வந்த அரசபயங்கரவாத ஆதரவு நாடுகள் (இவைகளை நடுநிலமை நாடுகள் எனவும் கொள்ளலாம்)இன்று வாய்மூடி நிற்கின்றன...

//சிறிலங்காவில் ஈழம் என்ற அதிகார மையம் உருவாகுவதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியலை தீர்மானிக்கப்போவதும் தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது.//

ஆனால், தற்சமயத்தில் இது சாத்தியமாக தோன்றவில்லை...

//கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங் கற்றுக் கொள்ளப் போவதும் எதிர்காலத்தை விவேகத்துடன் எதிர்கொள்ளுவதும் தமிழ் மக்கள் முன்னாலுள்ள பணிகளாகும்.//

வெறுமனே தமிழக அரசியல்வியாதிகளை நோண்டிக் கொண்டிருக்காமல், ஆதரவு தரும் நபர்களை மட்டும் ஒன்று திரட்டி போரட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், தேவைப்படும் போது அவர்களை உபயோகித்துக் கொள்ளலாம் அவர்கள் ஈழப் பிரச்சனையை உபயோகிப்பதனைப் போல..

//புலம் பெயர்தமிழ் மக்களின் ஆதரவுப் போராட்டங்கள் எவ்வாறு பயனளிக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது.//

இது உடனடியாக கள நிலவரங்களில் எந்தவித மாறுதல்களையும் கொண்டு வரவில்லை. ஆனால், முழுக்க முழுக்க புலம்பெயர்ந்து இருக்கும் அனைத்து தரப்பினரும் (ஈழத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த 3 தலைமுறை, தமிழகத்திலிருந்து வெளி நாடுகளிலிருக்கும் பெரும்பான்மையோர், பாண்டிச்சேரியை சார்ந்தவர்கள், இனப்பிரச்சனையினால் இடம் பெயராத மற்ற தமிழர்கள்) அரசியல் மயமாக்கப்பட்டது இந்த 6 மாத காலத்திற்குள் தான். அதற்கு, இந்த கவனயீர்ப்பு போரட்டங்களே முக்கிய காரணிகள்...

இந்த ஒற்றுமையும் போராட்டமும் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டாலே போதும்... பார்க்கலாம்...

நம்பிக்கை அளிக்கும் மற்றும் ஒரு பதிவு !!
http://arivialnambi.blogspot.com/2009/04/i.html

இப்படி பதிவு படிச்சு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதா இருக்கு :'(

இட்டாலி வடை said...

//முழுக்க முழுக்க புலம்பெயர்ந்து இருக்கும் அனைத்து தரப்பினரும் (ஈழத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த 3 தலைமுறை, தமிழகத்திலிருந்து வெளி நாடுகளிலிருக்கும் பெரும்பான்மையோர், பாண்டிச்சேரியை சார்ந்தவர்கள், இனப்பிரச்சனையினால் இடம் பெயராத மற்ற தமிழர்கள்) அரசியல் மயமாக்கப்பட்டது இந்த 6 மாத காலத்திற்குள் தான். அதற்கு, இந்த கவனயீர்ப்பு போரட்டங்களே முக்கிய காரணிகள்...//

இதை ஒத்துக்கொள்கின்றேன். இதைத் தொடர்ச்சியான போராட்டமாக எடுத்துட் டெல்ல வேண்டியது மிக அவசியம். ஏனெனில் போருக்குப் பின்னான காலகட்டத்தில் ( அவ்வாறு ஒன்று உண்டானால்) சர்வதேச சமூகம் ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு ஒன்று இருக்கின்றது.

அதன் கபட முகம் வெளிப்படும் போது நாம் இன்னும் வீரியமுடன் போராட நமக்கு தார்மீக ஆதரவு வந்து சேரும்...

வெண்காட்டான் said...

வெளிநாட்டில் பலநாடுகளில் வாழ்ந்த தமிழன் என்ற வகையிலும் இந்தியாவில் பலமுறை வந்து போனமுறையிலும் நான் அவதானித்த ஒரு விடயம், தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் வெளிநாடுகளில் மற்ற இந்திய சமுதாயத்துடன் பார்க்கும் போது மிக மிககுறைவாக இருப்பதை. இதற்கு காரணம் என்ன? இந்திய ஆளும் வர்க்கத்துடன் கூட்டு வைத்துள்ள மலையாளிகள் விமானநிலையங்களிலும் வெளிநாட்டு அலுவலகங்கிளலும் அப்படியே வெளிநாடுகளிலும். விமானநிலையங்களில் அகதிகளாக ஓடும் ஈழத்தமிழர்களிடம் பணத்தை வாங்கி பின் அவர்களை காட்டிக்கொடுப்பதும் இவர்கள் தான். வெளிநாடுகளில் தமிழ்நாட்டு தமிழர்கள் நிறைய செல்லவேண்டும். அன்மையில் எனது நாட்டில் ஒரு கல்லூரியில் 46 மலையாள மாணவர்கள். 5 வட மானிலம்.வேறு இந்திய மாணவர்கள் கிடையாது. ஏன்?

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil