
"பாஜக தலைவர் அத்வானி, பிரதமர் பதவிக்கு ஒருபோதும் வரமுடியாது. அந்த பதவிக்கான தகுதி அவரிடம் இல்லை. ஒருசமயம் அவர் பிரதமராக வருவாரேயானால் அரசியலிலிருந்து நான் விலகிவிடுவேன்" என்றார் சதீஷ் சர்மா.
நடக்கப்போவது பற்றிய பிரக்ஞையுடன் அவர் சிந்தனை இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இது காங்கிரஸின் சகாப்தம் முடிவிற்கு வருவதை அவரைப் போலவே பலரும் ஏலவே புரிந்திருப்பதைக் காட்டுகின்றது.
அதையே மன்மோகன் சிங்கும் வழி மொழிந்திருக்கின்றார்.
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, பா.ம.க. மற்றும் ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த சமாஜவாதி போன்ற பல கட்சிகள் விலகிச் சென்றுள்ளன. இதனால், தேர்தல் முடிவுகளில் காங்கிரஸýக்கு பின்னடைவு வரும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேவேளையில் இடதுசாரி கட்சிகளும், 3-வது அணியும் அமைத்துள்ள கூட்டணியால் பாரதிய ஜனதா கட்சிக்கே அதிக பயன்களை தரும் என்பதையும் மறுக்கமுடியாது. " என்று வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்.
பொம்மைப் பிரதமராக இருப்பதன் ஆற்றாமையை அவர் உணர்ந்திருக்கலாம். அமெரிக்காவின் போக்கை அனுசரித்துப் போவதன் ஆபத்தை காங்கிரஸிற்கு எதிரான அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுக்க வேண்டும். இந்தியாவின் வெளிநாட்டு உள்நாட்டுக்கொள்கைகளில் மூக்கை நுழைக்கும் அமெரிக்க அரசியல்போக்கை அனுசரித்துப் போவது ஒரு இயங்கமுடியாத் தன்மைக்கு இந்தியாவைக் கொண்டு விடும்.
அவ்வாறான போக்கு இன்று கனடா பிரிட்டன் போன்ற நாடுகளில் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடுகள் சுயமான வெளிநாட்டுக்கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாத தன்மையுடன் அமெரிக்க நலன்களையே தமது வெளிநாட்டுக் கொள்கையாகப் பிரதி பலிக்கின்றன. இதுவும் ஒரு வகையில் காலனித்துவ எதேச்சாதிகாரத்தை ஒத்ததுவே.
காங்கிரஸையும் அதன் இத்தாலியத் தலைமையையும் பொறுத்த அளவில் அமெரிக்க சார்பு போக்கு விருப்பத்திற்கு உரியதே. மேலும் இயல்பாக எழும் மேற்குலக உயர்வு மனப்பான்மையும் இந்திய நலன் சார்ந்து சிந்திக்கும் பொறுப்புணர்வு அற்ற தன்மையும் தற்போதைய காங்கிரஸ் தலைமையாலும் அரசாலும் இந்தியாவிற்கு நீண்ட காலப் போக்கில் அதிக தீமையையே தரும்.
இல்லையென்று சொல்பவர்கள் இராஜீவை திருமணம் செய்ததைத் தவிர சோனியாவிற்கு இந்தியா மீது இருக்கக் கூடிய அக்கறையைப் பதிவு செய்ய வேண்டும்.
எப்பாடு பட்டாவது ஆட்சியைப்பிடித்து ராகுலை பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கு அப்பால் சோனியாவின் அஜண்டாவில் எதுவும் கிடையவே கிடையாது.எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்திய மனப்பான்மையில் அவரால் சிந்திக்கவே முடியாது. இதில் இந்தியாவின் எதிர்காலக் கனவுகள் என்பதைப் புரிந்து கொள்ளவது என்பது ... நடக்க முடியாத பகற் கனவு.
ஈழ யுத்தம் முதற்கொண்டு அனைத்து விடயங்களிலும் அமெரிக்க ஏவுதலுடன் கூடிய நகர்வுகளை மேற்கொண்டு இந்தியாவிற்கு ஏகப்பட்ட எதிரிகளைச் சம்பாதித்திருப்பது காங்கிரஸ் அரசே. இந்தியாவை சுற்றியிருக்கும் எத்தனை நாடுகள் உண்மையான நட்புடன் இருக்கின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்திய அணுப் பரிசோதனையின் கதவுகளை அமெரிக்காவின் பார்வைக்கு திறந்து வைத்ததன் மூலம் பிராந்திய வல்லரசுக்கனவைக் குழி தோண்டிப் புதைத்ததுவும் காங்கிரஸ் அரசே. எத்தனையோ தேச நலன் விரும்பும் விஞ்ஞானிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அவசர அவசரமாக அமெரிக்க நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதன் காரணத்தை இதுவரை காங்கிரஸ் அரசால் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை.
பா.ஜ.கட்சியோ வேறு கட்சியோ ஆட்சிக்கு வருவது கூட காங்கிரஸ் அளவிற்கு இந்தியாவிற்கு தீங்கு தரப்போவதில்லை. சிறந்தது கிடைப்பது வரை இருப்பதில் நல்லதைத் தெரிவு செய்வது இந்தியாவிற்கு தற்போதைக்காவது நன்மை தரும்.
No comments:
Post a Comment