ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 12, 2009


அடிமைகள் ராஜ்ஜம் - இந்தியா


இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஆம். என்று பேச்சளவில் தான் கூறிக்கொள்கின்றோம் என்று படுகின்றது. இந்தத் தேர்தல் அலையில் குடும்ப வாரிசுகளை முன்னிறுத்தும் போக்கு பெருமளவில் காணப்படுகின்றது. அது மாநிலம் மத்தியென்றில்லாது எங்கும் பரவி இருக்கின்றது.

வட மாநிலம் தென் மாநிலம் என்ற வேற்றுமை இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது. மகாராஜாக்களையும் நவாப்புகளையும் போற்றி வந்த அந்த அடிமை இரத்தம் இன்னும் எத்தனை தலைமுறைகள் எங்கள் உடலில் ஓடப்போகின்றதோ? என்ற கேள்வி எழுகின்றது.

காங்கிரஸ் கட்சியின் ஆஸ்தான நாயகர் நேருவால் அறிமுகப்படுத்தப் பட்ட வாரிசு அரசியல் - அப்போது இந்திராவிற்கு 38 வயது - பின்னர் சஞ்சீவ் ,ராஜீவ், சோனியா ,பிரியங்கா,ராகுல் என்று தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது.

ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய அடிமைப் போக்கை நினைத்து நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும். இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றியே குறுநில பாளைய மன்னர்களாகத் தம்மை வரித்துக்கொண்டிருக்கும் மத்திய மாநிலக் கட்சிகளின் வாரிசுகள் முடி சூடும் கனவுடன் வளைய வருகின்றார்கள்.

இதனாலேயே தகுதியுள்ள திறமையுள்ள ஆட்சியாளர்கள் அமைவது தடுக்கப்படுகின்றது. திறமையற்றவர் கையில் ஆட்சி தொடர்ந்திருக்கும் பொழுது இயல்பாகவே உருவாகும் மெத்தனம் ஊழல் என்பவற்றால் அரசும் அரசியலும் கறை பட்டுப் போகின்றது.

இதனாலேயெ வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட தலைமுறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. மக்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் பயப்படும் நிலை இந்தியாவில் காணப்படுகின்றது.

நாம் என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள அடிமை மனப்பான்மையிலிருக்கும் எம்மால் முடியவில்லை. இதே போக்கை நாம் மறுதலிக்காது தொடர்வதன் மூலம் எமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று வருங்காலச் சந்ததியையே நீக்க முடியாத இருட்டுக்குள் தள்ளும் குற்றத்தைச் செய்கின்றோம்.

மாற்றம் ஏதோ ஒரு புள்ளியில் தான் தொடங்கும். அந்தப் புள்ளியைத் தேர்ந்தெடுப்பது மக்களாகிய நாம் தான். இந்தத் தேர்தல் கூட அதற்கான தொடக்கமாகலாம்.

கூட்டணிகளை கட்சிகளைப் பின்னணிகளைப் பார்த்து வாக்களிக்காது வேட்பாளரின் தகுதியைப் பார்த்து வாக்களிப்பது என்பது திறமையான நற்குணம் கொண்ட வாக்காளர்களை நிறுத்த கட்சிகளை நிர்ப்பந்திக்கும்.

அப்படியொரு நிலை உருவாகுவது ஜனநாயகத்தின் பலன்கள் நம்மைச் சேர உதவும் என்பதை நாம் நினைவிருத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: தொடரும் அடிமை விசுவாசம் எங்கே கொண்டு செல்லும்? என்பதையா படம் சொல்லுகின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil