ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 26, 2009


சாருவும் "நானும்"


விதியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?

உண்டு.உதாரணம் இராஜீவின் மரணம்.

என்று சாரு ஒரு கேள்வி பதிலில் எழுதியிருந்தார். விதி வலிது என்பதில் எனக்கும் சமீப காலங்களாக நம்பிக்கை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. வழமை போல "புளக்கு"ளைச் சுவாசித்துக் கொண்டிருந்த போது இணைப்புகளில் தாவித்தாவி எங்கெங்கோ போய் விட்டிருந்தேன். தாவித் திசை தெரியாது திரிந்ததில் மீண்டும் படிக்கும் எண்ணமிருந்த பக்கங்களுக்கு வர முடியாது போய் விட்ட துர்ப்பாக்கியமும் நிகழ்ந்திருக்கின்றது. அப்படித்தான் சாருவின் கோணல் பக்கங்களுக்கும் போயிருந்தேன். விதி பற்றிய கேள்விக்கு சாருவின் இந்தப் பதில் என்னை யோசிக்க வைத்தது.

ஈழத்துப் போராட்டத்தில் இராஜீவின் மரணம் தொடர்பு பட்டதை என்னால் எப்போதும் இரசிக்க முடிந்ததில்லை. போராட்டத்தின் மூர்க்கம் வெளிப்பட்ட அளவு தந்திரம் வெளிப்படவில்லை என்பது தான் என் கருத்து. ஒரு இனத்தின் சுதந்திரப் போராட்டத்தின் மீது எதிர்மறையான பயங்கரவாத மாயை படிந்து போனதும் அப்போது தான். அதன் பின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற உலகப்பயங்கரவாத இருளின் மடியில் ஒளியிழந்து என்னென்னவோ நடந்து கொண்டிருக்கின்றது.

விதிக்கும் இராஜீவின் மரணத்திற்கும் இருக்கும் தொடர்பைப் போல கொத்துக்கொத்தாய் மடிந்து போகும் ஈழ மக்களின் மரணங்களும் விதியால் எழுதப்பட்டதா என்ற சர்ச்சை இங்கு எழுகின்றது. விதி என்று புறங்கையால் ஒதுக்கிவிட்டுப்போவதாயின் மனித விழுமியங்களின் பங்கு இங்கு என்னவாகின்றது ? வல்லாதிக்கச் சக்திகளின் சுரண்டலின் பிடிவாதம் இத்தனை மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பதை மறுதலிக்கும் நம்பிக்கையை நாம் வாழும் வாழ்க்கை நமக்குக்கொடுத்துக் கொண்டிருக்கின்றதா? அப்படிப்பட்ட ஒரு செளகர்ய உலகில் தானா நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்?

எழுத்தாளர்கள் ஒரு வகையில் போராளிகளாக இருப்பது இந்த சமூக அமைப்பில் தவிர்க்க முடியாதது. எதையாவது எதிர்க்கவோ மறுதலிக்கவோ வேண்டிய இம்சையை இச்சமூக அமைப்பு நாளும் நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு எழுத்தாளனை எவ்வாறு புரிந்து கொள்ளலாம்?

உங்களைப் பற்றி?

என் படைப்புகளின் மூலம் அறிந்து கொள்வது சரியாக இருக்கும்.

சமூக அக்கறையற்ற படைப்புகள் மூலம் அல்லது மேதமைத் தன்மையை வெளிப்படுத்தும் "விலாச"படைப்புகள் மூலம் யாரையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஒரு தனி மனிதனைப்பற்றிய ஒரு பகுதியையோ அல்லது அவன் சிந்தனையின் நிழலையோ அறிந்து கொள்ளலாமே தவிர முழுமையாக அறிய முடியாது. அது தேவையும் அற்றது.

அவன் படைப்பின் ஆதர்சத்தால் வாசகனைக் கவர்ந்து கொண்டானே தவிர தன் குணாதிசயத்தால் அல்ல.

அதையே நிறுவுவது போல புளக்கர் உலகத்தின் ஒரு சிலரைத் தவிர அத்தனை பேரையும் ஒட்டு மொத்தமாக புறந்தள்ளும் சாரு, அவர்களைப் பொருட்டாகவே மதிக்கவில்லை. அவருடைய தரத்திற்கு அவர்கள் பதிவுகள் கிறுக்கல்களாக இருக்கலாம். அது அவரின் தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்க முடியும்.

படைப்புகள் மூலமாக அல்லாமல் - வெறும் இலக்கியத் தகராறுகள் மூலம் தாங்கள் பரபரப்பு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே ?

என்ற கேள்விக்கு,

சிந்தனைத் தளத்தில் நடக்கும் விவாதங்களை ' தகராறுகள்' என்று சுருக்குவது வெகுஜனப் பத்திரிக்கைகளின் பார்வை. வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு சிறுபத்திரிக்கைகளில் நடக்கும் எந்தச் செயல்பாடுகளைப் பற்றியும் யாதொரு அறிவும் கிடையாது. கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியத் தரத்துக்கு ஏதேனும் நடந்திருக்கிறது என்றால் அது சிறு பத்திரிகைகள் மூலமாக மட்டும்தான். ஸ்வீடனைச் சேர்ந்த திரைப்பட மேதை பெர்க்மனைப் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டுமானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் சிறு பத்திரிக்கைகள். எல்லா மொழிகளிலும் வெகுஜனப் பத்திரிகைகள் உண்டு. ஆனால் தமிழ் நாட்டைப் போல் இந்த அளவுக்கு கலை , இலக்கியம் பற்றி எதுவுமே தெரியாத ஞான சூன்யங்களை பிற மொழிகளில் பார்க்க முடியவில்லை. என் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு மலையாளிக்கு நான் ஒரு எழுத்தாளன் என்று தெரிகிறது. அவர் என் எழுத்தைப் பற்றி என்னுடன் விவாதிக்கிறார். ஆனால் என் வீதியில் உள்ள எந்தத் தமிழருக்கும் நான் ஒரு எழுத்தாளன் என்று தெரியாது.

என்று பதிலளிக்கின்றார்.

"உலக இலக்கிய தரம் " என்ற அலம்பல் இங்கு ஏன் வந்தது என்று புரியவில்லை. நமது வாழ்க்கைத்தரமே உலக தரத்திலில்லாத சமுதாயத்தில் "உலகத் தரம் " என்ற சொல்லடை மட்டும் வந்து சாதிக்கப் போவது என்ன? முதலில் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொருளாதார சிந்தனா மட்டத்தில் உயர்த்தும் கடமையைப் புறந் தள்ளும் எழுத்தாளனால் நமக்கு ஆகப்போவது தான் என்ன? "ஏலியான்" போல் இந்தச் சமூகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் இவர்கள் பற்றிய பிரக்ஞை நமக்கு ஏன் வர வேண்டும்?

ஞான சூன்யங்களால் நிரம்பியிருக்கும் சமுதாயத்தை பற்றிய சிந்தனயில்லாது ஸ்வீடனைச் சேர்ந்த திரைப்பட மேதை பெர்க்மனைப் பற்றி தெரிந்து கொள்வதில் என்ன இலாபம் இருக்கின்றது?

சமுதாய அக்கறை குறிக்காது எழுதும் எழுத்துக்களோ வெறும் இலக்கியத் தகராறுகளோ அல்லது சாருவே கூறுவதைப்போல (மேற்குலக) சிந்தனைத் தளத்தில் நடக்கும் விவாதங்களோ நம் சமூக மக்கள் சிந்தனை மட்டத்தில் என்ன மாறுதல்களைக் கொண்டு வரக்கூடும். அப்படிப்பட்ட எழுத்துக்களின் உண்மையான அக்கறைதான் என்ன?

"புளக்கு"களில் எழுதப்படும் எழுத்துக்கள் தான் சமூகத்தின் அத்தனை கரடுகளையும் வெளிப்படுத்துகின்றன என்பது என் எண்ணம். ஏனெனில் இவ்வெழுத்துகள் மேதமை மிக்கவர்களாக எண்ணிக்கொள்ளும் எழுத்தாளர்களால் அல்லாமல் அறியும் ஆர்வம் கொண்ட வாசகர்களாலேயே எழுதப்படுகின்றன. இது வரை "தெரிவு செய்யப்பட்ட" செய்திகளையும் "புரட்சி" எழுத்துக்களையும் வாசித்து வந்த வாசகன் தான் வாழும் சமூகத்தின் வாசனையை அது எத்தனை அழுக்காக இருந்தாலும் சுவாசிக்கத் தொடங்கியுள்ளான்.

இதுவே இன்றைய எங்கள் சமுதாயத்தில் அரசியல் பொருளாதார சிந்தனா மட்டத்தில் மாற்றங்களை உருவாக்க முயலும் ஊக்குவினைகளாக வளம் பெறும்.

எத்தனையோ தீமைகளைத் திறந்த பொருளாதாரம் வழங்கியிருந்தாலும் அது கொடுத்த நன்மைகளில் இதுவும் ஒன்றுதான். அதே நேரத்தில் தேடல் மிக்க வாசகர்கள் இணைய வசதி காரணமாக சிறு பத்திரிகை எழுத்தாளர்களின் அடிக்கோடிட்ட மேற்குலக ஆச்சரியங்களை நேரிடையாகவே அறிந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இதனாலேயே எழுத்தாளர்களிடையே இருக்கும் "நான்"கள் தொழிலிழந்து போகின்றன. அது அவ்வாறு நிகழுமாயின் இவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ள இந்தச் சமூகத்திற்கு எத்தனயோ விடயங்கள் இருக்கக் கூடும்.

(மீள் பதிவு)


4 comments:

இட்டாலி வடை said...

வைத்தியநாதன் said...

நான் உங்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன். சாருவைப் பற்றியும் அவரின் 'நான்' என்பதைப்பற்றியும் நன்றாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

பெரும்பாலும், அவர் மட்டும்தான் நல்ல எழுத்தாளன் என்பாதகவும், மற்றவர்களுக்கெல்லாம் (அவரைப் புகழும் அல்லது அவருக்குப் பிடிக்கின்ற வெகு சிலரைத் தவிர்த்து) ஒன்றுமே தெரியாதது போலவும், எல்லோருக்கும் 'உலக இலக்கியம்??' தெரிந்து இருக்க வேண்டும் அல்லது அவ்வாறு தெரியாதவர்களெலாம் ஒன்றுமே அறியாதவர்கள் என்றும் அவர் நினைப்பது அவருடைய எழுத்தை நன்றாக (கவனிக்க, ஒருதலைப்பட்சமாக அல்லாமல்) அவதானிப்பவர்களுக்குப் தெரிய வரக்கூடும்.

இதுவரைக்கும் இந்த பதிவிற்கு பின்னூட்டமே இடப்படவில்லை என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் ஏன் மீண்டும் பப்ளிஷ் செய்ய கூடாது?

- வீவீ

இட்டாலி வடை said...

இட்டாலி வடை said...

வாருங்கள் வைத்தியநாதன்,
அவர் சிறந்தவராய் இருக்கலாம் ஆனால் "நான்" சிறந்தவன் என்று தம்பட்டம் அடிப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை..

இது வரை பின்னூட்டம் இடப்படவில்லை. மற்றவர்களால் கவனிக்கப்படும் தரத்தில் இல்லையோ என்னவோ..

மறுபடி எப்படி பப்ளிஷ் பண்ணுவது.. தெரியவில்லை உதவுங்கள்..
April 25, 2009 4:12 PM
அறிவே தெய்வம் said...

\\இது வரை பின்னூட்டம் இடப்படவில்லை. மற்றவர்களால் கவனிக்கப்படும் தரத்தில் இல்லையோ என்னவோ..\\

அதைப் பத்தி கவலைப்படாதீங்க, எப்பவுமே சற்று நுணுக்கமாக விஷயபூர்வமாக ஆராய்ந்து எழுதினால் படிக்கிற எல்லோரும் எஸ்கேப்தான்.எதற்கு நாம இதில் மாட்டனும்ங்கிற பாதுகாப்பு உணர்ச்சி, மற்றும் பயம்தான். நாம் கருத்துமோதல் மட்டும்தான் செய்கிறோம். நபரோடு அல்ல என்பதை புரிந்து கொள்வது இல்லை

உதாரணம்
http://arivhedeivam.blogspot.com/2009/04/blog-post_20.html
April 25, 2009 7:23 PM
இட்டாலி வடை said...

வாங்க அறிவே தெய்வம்!
அது உண்மைதான்..
April 26, 2009 5:13 AM
பதிவன் said...

அறிவே தெய்வம் சொல்வது மிகவும் சரி.
-------
தாங்கள் எழுதிய அந்த பழைய பதிவை அழித்துவிட்டு (காப்பி செய்து கொள்ளுங்கள்) பின் புதியதாய் போஸ்ட்-இல் சேர்த்து பப்ளிஷ் செய்யுங்கள். தற்பொழுது அப்பதிவு முதன்மையாக இருக்கும். நிறைய பேர் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
April 26, 2009 2:42 PM

latchoumanan velavan said...

by the bye who is saru?

இட்டாலி வடை said...

வாங்க லச்சுமணன் வேலவன்!

ஸீரோ டிகிரி புகழ் சாரு நிவேதிதா

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil