ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, April 20, 2009


புலிகளின்பாதை


வன்னியில் போர் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இது தமிழர்களின் வாழ்வா? சாவா? என்ற போராட்டம். உலக நாடுகள் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீது என்ன கோபமோ ? அவர்களைக் கொல்லுவதற்கு இந்தியா வகை வகையாக ஆயுதங்களைக் கொடுத்து சிங்கள வெறிநாய்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது. வெறிநாய்களும் ஆக்ரோஷத்துடன் பாய்ந்து தமிழர்களின் குரல் வளையை கடித்துக் குதறிக் கொண்டிருக்கின்றன.

உலகத்தின் முதலாளித்துவச் சுரண்டல்வாதிகள் குற்றுயிரும் குலையுயிருமாய் இருக்கும் ஈழத்தின் மண்ணில் இலாபம் பார்க்கும் உத்தேசத்துடன் நாக்கைத் தொங்கவிட்டுக் காத்திருக்கின்றார்கள்.

விழுந்து கிடக்கும் உடல்களின் மேலும் கொட்டிக்கிடக்கும் இரத்தத்தின் மீதும் நவ உலகத்தை புனர்நிர்மாணம் செய்யப்போகும் பசப்பலுடன் உலக மனிதாபிமானம் காத்திருக்கின்றது.

அத்தனையும் வேஷங்கள். மனித நேயப்பார்வைகள் அத்தனைக்குள் இருந்தும் தெறித்து விழும் கொடூரப்பார்வைகள். பற்களில் இருந்து வட்டியும் இரத்தத்தின் ருசியில் மனித உடலம் தின்னும் வேட்கை மிகுந்து வெளிப்படுகின்றது. மனிதரை மனிதர் தின்னும் வேட்கைக்குத் தான் எத்தனை இராஜ தந்திரக் கவசங்கள்.

தமிழரை அழிக்கும் வேட்கைக்கு புலிகளை அழிக்கும் வேஷம். புலிகளும் அப்படி என்ன தான் குற்றம் செய்தார்கள்?

சிறுவர்களைப் படையில் சேர்த்ததாக , தம் மக்கள் தலைவருள் சிலரைக் கொன்றதாக, சகோதர யுத்தம் செய்ததாக அனைத்தும் நீங்கள் சொன்னதுதான்.

வேறு என்ன? இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தார்களா? ஓடும் ரயிலில் குண்டு வெடித்தார்களா? ஆகாய விமானத்தைக் கடத்தினார்களா?

என்ன படு பயங்கர வாதம் செய்தார்கள்? பயங்கரவாதம் செய்வதற்காக குழு சேர்ந்தவர்களா? மாபியா கும்பலா? பாதாளலோக தாதாக்களா?

அகிம்சை போராட்டத்தில் அடைய முடியாததை, அகிம்சை காட்டிய தலைவர்களின் பொறுமையை கபட நாடகங்களாலும் போலியான ஒப்பந்தங்களாலும் சோதித்ததாலும் உலகாலும் இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொண்டாடப்பட்ட தலைவர்களால் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட முடிவு இன விடுதலை. தங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் பெற்றெடுக்க,வென்றெடுக்க தமிழ் மக்களால் கண்டடைந்த இறுதி முடிவு. இளைஞர்களின் கிளர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டபோதும் பேச்சு வார்த்தைகளால் அலைக்கழிக்கப்பட்ட போதும் இனக்கலவரங்களால் தமிழர்கள் அழிக்கப்பட்ட போதும் இந்த மனிதாபிமான காவலர்கள் கண்டு கொள்ளாது விட்டதேன்?

இளைஞர்களின் போராட்டம் ஆயுத முகம் கொண்டபோது வளர்த்து விட்டதும் பிரித்து விட்டதும் இதே இந்தியா தானே? ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணங்களை அறியும் முயற்சியில்லாது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட தன்னிச்சையான ஒப்பந்தம் பற்றி அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றி இந்த மேன்மை தங்கிய சர்வதேசசமூகம் கருத்தேதும் கூறாது மெளனம் சாதித்தது ஏன்?

போராட்டம் மீண்டும் வெடித்துப் பரவ சர்வதேச சமூகம் முன்னெடுத்த முயற்சிகள் கைகூடாது போனதேன்?

ஐந்து ஜனாதிபதிகள்ஆட்சிக்காலம் , எட்டு அரசாங்கங்கள், பல கட்சிகள் வேறுபட்ட நபர்கள், டசினுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் பத்திற்கும் மேற்பட்ட யுத்த நிறுத்தங்கள் , இந்தியா நோர்வே அமெரிக்கா பிரித்தானியா ஜப்பான் என்று சிறப்புத் தூதுவர்கள் விஷேட பிரதி நிதிகள் இத்தனை காலங்களும் இத்தனை நபர்களும் நாடுகளும் தமிழ் மக்களுக்குத் தந்தது என்ன?

சின்னஞ்சிறு தீவில் அமைதியையும் சம நிலையையும் சகோதரத்துவத்தையும் கொண்டு வர முடியாது போன இந்தச் சர்வதேச சமூகத்திற்கு எங்களைப் பற்றி எங்கள் போராளிகள் பற்றிப் பேசுவதற்கு என்ன முகாந்திரம் இருக்கின்றது?

சில இலட்சம் மக்களைக் காக்கும் சில ஆயிரம் போராளிகளுடன் போராடுவதற்கு சிறிலங்கா சிங்களப் பேரினவாதம் கட்டமைத்திருக்கும் படைபலமோ 300,000 நபர் கொண்ட பெரும் படை . ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்ய மாதாமாதம் 7000 புதிய நபர் சேர்ப்பு. அத்துடன் உலக நாடுகள் வாரி வழங்கும் இலவச விலை குறைப்பு ஆயுதங்கள். கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 40% ஊதிப் பெருத்த இராணுவம்.

மனித நேயம் மிக்கவர்கள், பரோபகாரிகள், சாந்திக்கும் சமாதானத்துக்குமாகப் பாடு படுபவர்கள் , அகிம்சையைப் போதிப்பவர்கள் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக இரங்குபவர்கள் கண்ணீர் விடுபவர்கள் ஏன்? சிங்கள இராணுவத்தை ஊதி வளப்படுத்த வேண்டும்? ஆயுத உதவிகளை அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டும்?

அழிக்கப்படும் தமிழர் தரப்பை மட்டும் ஆயுதத்தைக்கைவிட வேண்டுகோள் விடவேண்டும்? சொந்த மண்ணில் இருக்கும் மக்களைப் பயணக்கைதிகளாக வடிவம் கொடுத்து போலிக்கண்ணீர் விட வேண்டும். மக்கள் கொல்லப்படுவதற்காக கவலைப்படுபவர்கள், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஓலமிடுபவர்கள் ஏன் அவர்களைக் கொல்லும் ஆயுதங்களின் முழக்கங்களை நிறுத்தச் சொல்லி ஆணையிடாது இருக்கின்றீர்கள்?

சிங்களச் சிறீலங்காவிற்குக் கொடுக்கும் ஆயுதங்களை ஆதரவை பண உதவிகளை நிறுத்தாது பசப்புகின்றீர்கள்?

மனித அவலம் பற்றிக் கூக்குரல் இடும் நீங்கள் ஏன் வெறி கொண்ட இராணுவ நடவடிக்கைகளை முடக்கிப்போட முயலாதிருக்கின்றீர்கள்? சர்வதேசம் முழுவதும் தமிழர்கள் சாத்வீக வழியில்த் தானே போராடுகின்றார்கள். வன்னியில் கொத்துக் கொத்தாய் சாகும் மக்களை காக்கச் சொல்லித் தானே போராடுகின்றார்கள்? உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்? எத்தனை மாதங்களாகத் தொடர்போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்?

ஏன் மனித் நேயக் காவலர்களின் இரக்கம் எங்கள் மக்கள் மீது இன்னும் திரும்பவில்லை? இன்னும் எத்தனை மனித உயிர்கள் போனால் உங்கள் கருணைப் பிச்சை எங்களுக்குக் கிடைக்கக் கூடும்? விழுந்து படும் உயிர்களின் எண்ணிக்கை இன்னும் போதவில்லையோ உங்கள் இரக்கத்தின் பார்வை எம்மக்கள் மீது திரும்பி வர?

எங்கள் போராளிகளே எங்கள் அரண் என்பதை உங்கள் பாராமுகமும் குருதி இறங்கி வழியும் எங்கள் மண்ணும் உரக்கவே சொல்கின்றதே. இன்னும் சிலராவது அந்த மண்ணில் உயிரோடு இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் தியாகத்தால்தான்.

புலிகளின் பின்னாலான காலம் தமிழருக்கு என்றும் கிடையாது. அது தான் உண்மை . அந்த உண்மையைத்தான் இந்த இரக்கமற்ற காலம் உணர்த்தி நிற்கின்றது. புல்லுத் தடக்கி விழுபவனும் புலியைக் குறை கூறும் கேடு கெட்ட தனத்தைத் தான் பார்க்கின்றோம். தன் வயிறு வளர்க்க உயர்தியாகம் மிக்க போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.

மார்க்ஸிஸம் பேசி மக்கிப்போன மூளையுடன் திரியும் தோழர்களே !
பின்நவீனத்துவம் பேசி புனர் நிர்மாணம் புது வாழ்வு என்று கனவு காணும் சோதரரே ! புலிகளும் இல்லையேல் எலிகளுக்கும் பயப்படும் காலமே தமிழருக்கு வாய்க்கப்பெறும். புலிகள் எலிகள் என்று பிரிந்து நின்றால் இருந்த இடத்தில் புல் முளைத்துப்போகும்.

உலகமே எதிர்த்து நின்றாலும் தளராது போராடுவதே எமக்கு உலகம் விதித்த நியதி இன்று. புலம் பெயர் தேசத்து மக்களே! புலம் பெயர் தேசத்தில் போராடுவதிலும் நம் புண்ணிய தேசம் சென்று போராடுவதே நம் இறைமையை உறுதி செய்யும்.

நமது போராட்டத்தை நம்மை நம்பி நாம் எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளோம்। யூதர்கள் சென்று குவிந்ததைப் போல நாமும் சென்று குவிய வேண்டும்। சர்வதேச சமூகத்தின் பாராமுகம் அதைத்தான் நமக்கு உறுதி செய்கின்றது। அடிமையாய் வாழ்வதை விட சுதந்திரனாய் சாவது உயர்வில்லையா?

3 comments:

சவுக்கடி said...

***புலிகளும் இல்லையேல் எலிகளுக்கும் பயப்படும் காலமே தமிழருக்கு வாய்க்கப்பெறும். புலிகள் எலிகள் என்று பிரிந்து நின்றால் இருந்த இடத்தில் புல் முளைத்துப்போகும்.***

விடை அளிக்கும் - தெளிவுறுத்தும் - உரை.

இட்டாலி வடை said...

வாங்க சவுக்கு!

பதி said...

நல்ல பதிவு..

//எங்கள் போராளிகளே எங்கள் அரண் என்பதை உங்கள் பாராமுகமும் குருதி இறங்கி வழியும் எங்கள் மண்ணும் உரக்கவே சொல்கின்றதே. இன்னும் சிலராவது அந்த மண்ணில் உயிரோடு இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் தியாகத்தால்தான்.//

புலி இல்லை எனில் எலி கூடத் தின்றிருக்கும் எம் தமிழனத்தை அங்கு...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil