ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 26, 2009


சிதம்பரத்தின் கடைசிச் சொட்டு இரத்தம்


ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் ஆதரவுப் பேச்சு பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல் இது காங்கிரஸின் ஈழத் தமிழர் பற்றிய பார்வையில் விழுந்த சவுக்கடி என்பதை இச்சலசலப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.

"இது ஒரு இந்திய இறையாண்மைக்கு எதிரான பொறுப்பற்ற வேண்டு
கோள் " என்று ராஜ்யங்களுக்கான அமைச்சர் கபில் சிபால் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களுக்கான தீர்வு தமிழீழமே என்பது எவ்வாறு இந்திய இறைமையில் தீங்கு பயக்கும் என்பதை இந்த அரசியல் மேதைகளே விளக்கவேண்டும். இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல. இலங்கையில் கேட்கப்படும் தமிழீழக் கோரிக்கையானது இலங்கையின் ஒற்றையாட்சிக்கு மாறானது என்று மட்டுமே கொள்ளலாம். இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாகப் பார்க்கும் அறிவிலித் தனத்தில் இருந்து எப்போது இவர்கள் வெளியேறுவார்கள்?

ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் சார்பான அறிக்கையைத் தொடர்ந்து கபில் சிபாலைத் தொடர்ந்து ப.சிதம்பரம் சம்மட்டியுடன் களமிறங்கியுள்ளார்.

"பயங்கரவாதிகளோ இந்தியாவிற்கு எதிரான பேச்சுக்களோ செயல்களோ இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகச் செயற்படுவதை எனது கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரையில் அனுமதிக்க மாட்டேன்" என்று சவால் விட்டுள்ளார்.

அவருடைய கருத்துக்கள் இந்திய உள்துறை அமைச்சரின் கருத்துக்களாகக் கொள்ளப்பட்டாலும் இப்போது வெளியிடப்பட வேண்டிய அவசரம் என்ன வந்தது என்ற கேள்வி எழுகின்றது. ஜெயலலிதாவின் பேச்சுக்கு எதிரான சோனியாவின் எதிர்ப்பாகத்தான் அவரது பேச்சு அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகின்றது.

மே 18 இல் தமிழக வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் மீதான வெறுப்பை இத்தகைய அதிரடி ஸ்டேட்மெண்டுகள் இன்னும் வளர்த்து விடவே துணை புரியும்.

காங்கிரஸ் தலைமையின் தமிழக தேர்தல் பிரசார தேதிகள் இப்போது வெளிவிடப்பட்டிருக்கின்றது. காங்கிரஸ் தலைமையை தமிழக மண்ணில் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற திரைப்பட மற்றும் வக்கீல்கள் சங்கம் மாணவர்களின் போராட்டத்தை இது மேலும் அனல்படுத்தப்போதுமானதாகும்.

அண்ணா தி.மு.க வின் ஈழத்தமிழர் நேரடி ஆதரவுப் பிரவேசம் ஈழத்தமிழர் ஆதரவுவாதிகளின் கரம் உயர வழிவைத்திருக்கின்றது. ஏற்கனவே நெடுமாறன் ஐயா பா.ம.கட்சி ராமதாஸ் ம.தி.மு.க அண்ணன் வை கோ ஆகியோர் அ.தி.மு.க தலைமையின் கருத்தை ஆதரித்துச் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

இதே நேரம் இது வரை காலமும் தமிழின ஆதரவின் பேரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீமான் குளத்தூர் மணி நாஞ்சில் சம்பத் போன்றவர்களை விடுதலை செய்ய வேண்டி உரத்த குரல் எழுப்ப வேண்டும்.

தமிழின உணர்வென்பது இந்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கை அல்ல என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது.

பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட உண்மையிலேயே ப.சிதம்பரம் விரும்பினால் கார்கிலிலோ அல்லது எல்லை தாண்டி வரும் பாகிஸ்தானிய தீவிர வாதிகளுடனோ போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.

அவ்வாறு அவர் விரும்பினால் தமிழின உணர்வாளர்களே மாலை மரியாதைகளுடன் தமிழ் வீரணாக அவரை எல்லைப் புறத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil