வன்னிப்போர் உக்கிரம் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் இழப்பும் அளவு கணக்கில்லாது பெருகிச் செல்கின்றது. பெருந்தொகையான மக்கள் தெரிந்தே விட்டில்பூச்சிகளாக இராணுவ வலையில் வந்து விழுகின்றார்கள். இறப்பதற்கு முன் சர்வதேசத்தின் கருணை தங்களைக்காத்து விடாதா? என்ற இறுதி இறுதியான நம்பிக்கையுடன் சுட்டெரிக்கும் பீரங்கிகளையும் வெடித்துச் சிதறும் குண்டுகளையும் தாண்டி வந்து கொண்டிருக்கின்றார்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சிங்களபிசாசுகளின் முகமூடியையும் இந்திய வல்லரக்கரின் மாயத் திரைகளையும் கிழித்துக்கொண்டு உண்மை வெளிவந்திருக்கின்றது. இலங்கைத் தீவிலே இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அப்பட்டமான இனப்படுகொலையை உலகமே உணர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளால் நவீன காட்டுமிராண்டித்தனத்தை மூடிவைக்கமுடியவில்லை. அகிம்சை போதித்த தேசம் இன்று இம்சைதேசமாக இனங்காணப்பட்டுவிட்டது.
சிறிலங்காவின் உள்நாட்டுப்பிரச்சினையில் தலையிட முடியாது என்றவர்களே இன்று கொழும்பிற்கும் டெல்கிக்கும் பறந்து பறந்து போர் நிறுத்தம் வேண்டிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தனையையும் புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழகத் தொப்பூழ் உறவுகள் உலகத் தமிழ் மக்கள் அனைவரின் வெந்நீரும் செந்நீரும் சிந்திய உழைப்பின் வெற்றிகள். ஒற்றுமைக்கு கிடைத்த பரிசு.
ஐ.நாடுகள் நீண்ட மெளனம் கலைந்து எழுந்திருக்கின்றது. பிரான்ஸ் ,பிரித்தானியா, அமெரிக்கா ஈழப் பிரச்சினையின் தீவிரத்தையும் எதிர்காலச் சிக்கலையும் நன்கு உணர்ந்து செயற்படமுனைந்திருக்கின்றன. இந்தியாவின் தெற்கு கோடியில் பரந்திருக்கும் தமிழினத்தை ஒதுக்கி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வரமுடியாது என்பதை காலங்கடந்தாவது ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
//" இலங்கையில் இருதரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரச்னைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முயன்றால் அது இலங்கையின் ஒற்றுமைக்கும், மறுசீரமைப்புப் பணிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைப் பிரச்னை குறித்து அமெரிக்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், தற்போதைய சூழல் இரு தரப்பினரிடையேயும் பகைமையை வளர்க்கவே உதவும் என்றும், இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
தற்போது சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும் சந்திக்க அனுமதிக்குமாறும், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.//
புலிகளைத் தோற்கடிக்க பிரபாகரனைக் கொல்ல இந்தியா அவகாசம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ராஜபக்ஸேயும் மாதம் வாரம் நாட்கள் என்று இந்திய எஜமானர்களுக்கு தவணை சொல்லி முட்டி மோதிக்கொண்டிருக்கின்றார். ஐ.நாடுகளின் நேரடிக் கண்காணிப்பை தமிழர் பிரதேசங்களில் துரிதப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் சிங்களப் பேயரசின் கைகளில் இன்னும் இன்னும் தமிழர் அழிந்து போவதைத் தடுக்க முடியாது .ஏற்கனவே அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு கடந்த 4 நாட்களில் சென்ற 26 ஆயிரத்து 184 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டு கணக்கில் சேர்க்கப்படவில்லை என சாட்சியமற்ற போர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
புலிகளுடனான பேடித்தனமான போரில் இம்மக்கள் கூட்டத்தை முன்னகர்த்தி ராஜபக்ஸேயின் பேடிப்படை நகர்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டின் காட்டுமிராண்டித்தனம் எங்கள் மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவையெல்லாவற்றையும் பார்த்து நாம் சும்மா இருப்பதா? கவனயீர்ப்புப் போராட்டத்தை அதியுச்ச நிலைக்கு முடுக்கிவிடவேண்டும். தமிழகத்தில் அரசியல் ஆதாயங்களுக்காக திசை திருப்பப்படும் போராட்டத்தை கவனமாகத் தவிர்த்து உண்மையான தமிழ் ஆதரவாளர்களான அண்ணன் வை.கோ ஐயா நெடுமாறன் பின்னால் அணிதிரளவேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் புலி ஆதரவு எதிர்ப்பு என்பதை விடுத்து தமிழாதரவு என்ற ஒரே குடையில் அணி திரள வேண்டும். இன்றைய நிலையில் பின்னடவு நிகழ்ந்து விட்டால் நாம் என்றுமே எழுந்திருக்க முடியாது போய் விடும். யார் எதை வேண்டுமாலும் சொல்லலாம். தமிழரைப் பொறுத்தளவில் பிரபாகரன் ஒரு புரட்சியாளர். பிரபாகரனை நாம் இழக்க முடியாது. நெல்சன் மண்டேலாவும் காந்தியும் கூட வெள்ளையருக்கு எதிரான புரட்சியாளர்கள்தான். இன்று தேசத்தின் தந்தைகள். எங்கள் தேசத்தின் தந்தையைக் காப்பாற்ற நாமல்லாமல் வேறு யார் முயல்வார்கள்?
1 comment:
superb.
Post a Comment