ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, April 29, 2009


எழுதுவதே முட்டாள் தனம்



சில வேளைகளில் எழுதுவதே முட்டாள்தனமாகப் படுகின்றது. சாக்கடைக்குள் கால் வைக்காது வீதியைக்கடக்கும் ஜாக்கிரதையுடனேயே எல்லோரும் கடந்து போவது தெரிகின்றது. சாக்கடையுடன் வாழ்வது பற்றிய கவலை பெரிதாகத் தெரியவில்லை. தன் வீட்டுக் கதவு வரை சுத்தமும் சுதந்திரமும் இருந்தால் போதுமென்ற கவனம் இருக்கின்றது.வீதியில் இறங்கும்போது பல கவசங்களைப் போட்டுச் செல்லும் தந்திரம் தெரிகின்றது.

மிகப்பெரி்ய கவசம் அப்பாவி வேஷம் போட்டு மனம் நிறைய நரித் தந்திரத்துடன் கூர்மையாக வாழ்ந்து முடிப்பது. மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா ஓரிடத்தில் சொல்லியதைபோல மக்களில் அதிகம் பேர் அடிப்படை வாதிகளாக மாறிவருகின்றார்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நடுத்தர வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்திற்கு உயர்ந்து கொண்டிருக்கும் கீழ்த்தர வர்க்கத்தினரும் இவ்வாறான மனநிலையில் சமூக அக்கறையைக் குறைத்துக் கொள்கின்றார்.

தான் தன் குடும்பம் என்ற சுயநலம் உயர்ந்து போவதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஒரு நிலையான வேலை, அதனால் கிடைக்கும் செளகரியங்கள் இத்துடன் வாழ்க்கை முடிந்ததாக தப்பிதமான முடிவில் இருக்கின்றார்கள் என்றே படுக்கின்றது.

இவ்வாழ்க்கையை அலைக்கழிக்கும் எந்த விடயத்தைப் பற்றியும் அதிக அக்கறை கொள்ளும் மனநிலையில் இல்லாதிருக்கின்றார்கள்.

தமிழ் நாடு ஒரு தேர்தல் நேரத்தில் இருக்கும் போதும் அதுவிதமான எந்த முடிவும் அற்றிருக்கின்றார்கள்.தங்களுக்கு என்ன வேண்டுமென்ற குறைந்த பட்ச தெரிவைக் கூட சொல்லமுடியாதவர்களாக அல்லது சொல்ல விரும்பாதவர்களாக இருக்கின்றார்கள். இது வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு சாபக்கேடாகவே வளர்ந்து செழித்திருக்கின்றது. எவ்வளவு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் அனுசரித்துப் போகும் ஒரு கொடூரத்தைச் செய்ய முடிகின்றது.

இதனால்தான் இந்தியாவில் ஒரு வாட்டர் கேட் ஊழல்போல் எதுவும் வெளிப்படுவதுமில்லை. அதனால் மாற்றங்களும் ஏற்படுவதில்லை. அப்படியே வெளிப்பட்டாலும் அரசியல்வாதிகள் இலகுவில் தப்பித்து விடுகின்றார்கள். ஒரு சாதாரண எம் .எல்.ஏ கூட கேள்வி கேட்க முடியாத சட்டத்திற்கு அப்பாற்பட்ட பிம்பத்துடன் நடமாட முடிகின்றது.அவர்களுடன் கூட இருப்பவர்களுக்கும் அத்தகைய ஒரு "காப்பு" வழங்கப்படுகின்றது. அதனாலேயே அவர்களைச் சுற்றி ஒரு ஜால்ராக் கூட்டம் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் "மிஸ்டர் பிரசிடெண்ட்" என்று கூப்பிட்டு கேள்வி கேட்கும் உரிமை மிகப் பெரும் ஜனநாயக நாட்டில் மறுக்கப்படுகின்றது. பொருத்தமில்லாத அடைமொழிகளை போட்டு அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கற்பிக்கப்படுகின்றது. புனிதப் பிம்பங்களாக உயர்த்தும் ஒரு போலித்தன்மை உருவாக்கப்படுகின்றது.

இல்லாவிட்டால் 64 கோடி ரூபா இந்திய மக்களின் வரிப்பணத்தைத் திருடியவனைத் தப்பிக்கவிடும் கயவாணித் தனத்தைப் பார்த்தும் சும்மா இருக்கமுடியுமா? ஒரு வேளை சோற்றுக்கு அல்லல்ப்படும் மக்கள் இருக்கும் நாட்டில் இது எத்தனை பயங்கரமானது.எத்தனை கோடி மக்களின் ஒரு வேளை சோற்றைத் திருடிச் செல்ல நம் அரசியல் வாதிகளே உடந்தையாயிருக்கின்றார்கள். நாம் எதையும் கண்டு கொள்ளாது ஆமைகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஊழல் புகழ் வாதிகளை தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து புளகாங்கிதமடைகின்றோம்.என்ன ஒரு மந்தைத்தனமான வாழ்க்கை? இதையும் கடந்து எங்களைப் பற்றி எவ்வாறு உயர்வாகச் சொல்லிக் கொள்கின்றோம்.

பால் ஸக்கரியா சொல்வதைப்போல,அரசியலுக்கு சாகசத்தன்மையும், அதீதமான கடின உழைப்பும், அதனோடு மன மற்றும் உடற் கஷ்டங்களை சந்திக்கும் மனோபலமும் தேவை. மன விழிப்புணர்வும், மக்களை ஏற்றுக்கொள்ளவைத்து ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்பும் பேச்சும் தேவை . அதற்குக் கூட தயாரில்லாதவர்களை குறைந்தபட்ச மரியாதையுடனும் நினைக்க முடியவில்லை.

இப்போது மீண்டும் முதல் வரிக்கு வருகின்றேன். இப்போதெல்லாம் எழுதுவதே முட்டாள்தனமாகத் படுகின்றது ... அத்துடன் இந்த வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். "அதை வாசிப்பவர்களைப் பொறுத்து.."

6 comments:

ராஜ நடராஜன் said...

உங்கள் பதிவுக்கு பெரும்பாலானோர் வருகிறார்கள் என்றே நினைக்கிறேன்.ஆனால் பதிவின் தலைப்புக் கண்டோ அல்லது தளத்தின் பெயர் கண்டோ "வடை" தின்று அனுபவப் பட்டவர்கள் கருத்து கூறாமல் போய் விடுகிறார்கள் என நினைக்கிறேன்.

என் பதிவுக்கு கூட எட்டிப் பார்ப்பவர்கள் 50 பேராக இருந்தால் வர்ரேனுங்க சொல்பவர்கள் 5,10 பேர் மட்டுமே.ஹிட் கணக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளாத காரணத்தால் எதுவும் என்னை பாதிப்பதில்லை.

மனம் தளராமல் அடிச்சு ஆடுங்க.

பதி said...

இதில் நீங்கள் பால் ஸக்கரியா'வின் பேட்டிக்கு ஒரு இணைப்பு கொடுத்திருக்கலாமே?

http://www.rediff.com/freedom/27paul.htm

2 மாதத்திற்கு முந்திய இந்த பேட்டியை பற்றி 3 நாட்களுக்கு முன்பு தான் ஒரு பதிவிட்டேன்

http://pathipakkam.blogspot.com/2009/03/blog-post_28.html

இட்டாலி வடை said...

வருகைக்கு நன்றி ராஜநடராஜன் !

சமூகப் பிரச்சினைகளிலும் ஒதுங்கிக் கொள்வதைதான் புரிந்து கொள்ள முடியவில்லை.. சரி பார்ப்போம்..

இட்டாலி வடை said...

வருகைக்கு நன்றி பதி!

அது தான் நீங்கள் கொடுத்திருக்கின்றீர்களே நன்றி

இட்டாலி வடை said...

பதி!

சரவணகார்த்திகேயன் தனது பதிவில் தமிழ்ப்படுத்தியிருக்கின்றார். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்..

http://www.writercsk.com/2009/03/blog-post_11.html

பதி said...

//சரவணகார்த்திகேயன் தனது பதிவில் தமிழ்ப்படுத்தியிருக்கின்றார். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்.. தனது பதிவில் தமிழ்ப்படுத்தியிருக்கின்றார். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்..//

என்னுடைய பதிவிலும் சரவணகார்த்திகேயன் பதிவின் இணைப்பை கொடுத்துள்ளேனே.. தமிழ்படுத்த நான் அந்தப் பதிவைப் போடவில்லை.. அவருடைய அந்தப் பேட்டியில் எனக்கு பிடித்த விசயங்களை ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.. கடைசியில் சில சந்தேகங்களும் !!!! :)

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil