ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, April 20, 2009


கருணாநிதியின் துரோகம்


ஆறரைக்கோடி தமிழர்களின் தலைவர் என்றும் தமிழினக்காவலர் என்றும் தன்னைத்தானே மெச்சிக்கொண்டு வலம் வந்த கலைஞர் தான் யார் பக்கம் என்பதை நிரூபிக்கும் காலம் வந்து விட்டது என்றே தோன்றுகின்றது.

தமிழால் தமிழுக்காய் உயிர் வாழ்வதாக வரிக்குவரி கவிதை புனையும் , மேடைதோறும் மும்முடி வேந்தர்களின் வழித்தோன்றலாய் தனை முன்னிறுத்தும் தமிழகத்தின் உயர்வுக்காய் கட்சி நடாத்தும் ஆட்சியியற்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவராய் தனை வெளிக்காட்டிக்கொண்ட தமிழக முதலமைச்சர் தன்னை யார் என்பதை நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இன்று இருக்கின்றார்.

அவரை இந்நிலைக்கு ஆளாக்கியவர் இன்று ஈழதமிழரின் அழிவிற்காய் வெறிபிடித்து ஆணவத்துடன் படை நடாத்தும் சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் கேகலிய ரம்புக்கொல.

நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில்,

"தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு. கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி விடுதலைப் புலிகளின் நண்பன் எனக் குறிப்பிட்டது எமக்குக் கவலையளிக்கின்றது " என்று கூறியுள்ளார்.

அதை உறுதிப் படுத்தும் விதமாகவோ என்னவோ முதல்வர் கருணாநிதியும் தான் பிரபாகரனைப் பற்றி அவ்வாறு கூறவில்லை என்றும் செய்தியை திரித்துக் கூறியுள்ளார்கள் என்றும் மறுப்பறிக்கை விடுத்துள்ளார்.

இதில் இரண்டு விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

1) இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரை நண்பர் என்று உரிமை கொண்டாடுவதிலுள்ள சட்டச்சிக்கலைக் கருத்தில் கொண்டு முதல்வர் மறுப்பறிக்கை விட்டிருக்கலாம் என்று கொள்ளலாம்.

2) உண்மையிலேயே கருணாநிதியால் பிரபாகரன் பயங்கரவாதியாகப் பார்க்கப் படுவதாகக் கொள்ளலாம்.

முதலாவது விடயம் இந்தியாவின் இறையாண்மைக்குள் அடங்கிய அரசியல் சட்டப்பிரச்சினையாகக் கொள்வதானால் இரண்டாவது விடயம் அவருடைய தனிப்பட்ட கருத்தாகவும் கொள்ளலாம். அதைபற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

ஆனால் தமிழர்களின் எண்ணத்தில் கருணாநிதி ஈழத்தமிழர்களைத் தன் எதிரி என்று கூறமுடியாது. அவர் நடாத்திய மனிதசங்கிலி ஈழத்தமிழர் சார்பு பேரணிகள் என்பவை ஈழத்தமிழருக்கு ஆதரவான பார்வையைத்தான் காட்டியிருக்கின்றது. அவ்வாறு தான் தமிழக, உலக தமிழர்கள் அனைவரும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

கருணாநிதியின் அரசியல் சித்து விளையாட்டுகள் எவ்வாறு இருந்த போதிலும் தமிழர்களை எதிரியாக எண்ணும் நிலைக்கு அவர் வரவில்லை, வரமாட்டார் என்று உறுதியாக நம்புகின்றோம்.

ஆனால் சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புகொலவைப் பொறுத்தளவில் தமிழர்கள் அவரின் எதிரிகளே. தமிழர்களைப் பொறுத்த அளவிலும் சிறிலங்கா அரசும் மகிந்த ராஜ பக்ஸேயும் கேகலிய ரம்புக்கொலவும் தமிழர்களின் எதிரிகள் என்பதில் மறுப்பே கிடையாது.

குரூரமாகத் தமிழர்களை கொல்லுபவர்கள் ,அழிப்பவர்கள் எப்படி தமிழர்களின் நண்பராய் இருக்க முடியும்?

பிரபாகரனைப் பற்றிய செய்திக்கு அவசர அவசரமாக மறுப்பு விடுத்த கருணாநிதி கேகலிய ரம்புக்கொலவின் அறிக்கைக்கு மறுப்பேதும் சொல்லாது இருப்பது தான் தமிழர்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.

கருணாநிதி யார் என்ற கேள்வி இப்போது எழுகின்றது.

கருணாநிதி தமிழர்களின் நண்பனா?

அல்லது தமிழர்களின் எதிரிகளின் நண்பனா?


தமிழர்களின் நண்பன் என்றால் சிறிலங்கா அமைச்சரின் கூற்றுக்கு மறுப்பறிக்கை விடாதது ஏன்?

அல்லது காங்கிரஸின் வால் பிடித்து தமிழர்களின் முதுகில் குத்துவதைப்போல் சிங்களவரின் வால் பிடித்து தமிழர்களுக்கு செய்யும் துரோகத்தனமா இது?

தமிழக மண்ணில் வாழ்ந்து தமிழர்களின் வாக்கைப் பெற்று ஆட்சியமைக்கும் கருணாநிதி யார் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

குறிப்பு : தமிழர்களின் வாக்கு தமிழின உணர்வாளர்களுக்கு மட்டுமே என்பதில் உறுதியாய் இருப்போம்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil