ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, April 6, 2009
இட்டாலி டூ ரேபரேலி
காங்கிரஸ் காரர்கள் மூஞ்சையைத்தூக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். சகுனம் சரியில்லை.. இருக்காதா பின்னே ... நாள் பார்த்து சகுனம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்யப்போகும் போதா அந்த போன் கால் வரவேண்டும். அம்மம்மா (அம்மாவின் அம்மா ) இத்தாலியில் இருந்து கண்ணீர் சிந்தி மூக்குச் சிந்தி செய்தி சொல்லப்போக ...அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர் தான் அம்மா.
உற்சாகமாக புறப்பட்ட அம்மா சுருண்டு போக பக்கத்தில் நின்ற மன்மோகன் சிங் என்ன ஏதென்று புரியாமல் பம்மிக்கொண்டு நின்றார். வாசலில் காத்திருந்த பிரணாப் , சிதம்பரம் வகையறாக்கள் அடிக்கடி கையை உயர்த்தி வாட்சைப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். எத்தனை லட்சம் செலவழித்து கட்டம் போட்டு சோழி உருட்டி பார்த்து வைத்த நல்ல நேரம் போகுதே என்ற கவலை.
பார்த்து வைத்த நல்ல நேரத்தில் அம்மா தொடங்கி வைத்தால் தானே காங்கிரஸ் வென்று ஆட்சி பிடித்து மந்திரியாய் ஐந்து வருடம் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கலாம். இல்லையென்றால் வீட்டில் கிச்சடி அரைக்க விட்டுவிடுவார்கள். அவர்கள் வீட்டுக்காரம்மாக்கள் அவ்வளவு ஸ்ராங்கு...
தெருவில் நின்ற தங்கபாலு வகையறாக்கள் .. மடித்துக்கட்டிக்கொண்டிருந்த வேஷ்டியை சிறு சலசப்பிற்கும் அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தார்கள். முஷ்டி பலத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்த அவர்களுக்கு தெரு அளவில் நிற்கக் கிடைத்தது பற்றியே அளவில்லாத பெருமை.
எங்கிருந்தோ வந்த ராகுலைக் கண்டதும் மன்மோகன் சிங்கிற்கு ஆறுதலாகவிருந்தது. என்ன விடயம் என்று சைகையால் கேட்ட ராகுலிற்கு கிழக்கும் மேற்குமாக தலையை அசைத்தார் பிரதமர். என்ன கிழக்கும் மேற்கும் உங்கள் முணுமுணுப்பு எனக்கும் கேட்கின்றது. இத்தாலி இந்தியா இணைப்பை - அதே தான் உங்களுக்குப் புரிந்து விட்டது ..ஒரு ஷொட்டுப்போட்டுக்கொள்ளுங்கள். உருவத்தில் அவரும் அருவத்தில் அம்மாவும் பிரதமராய் இருக்கும் மகிமையைத்தான் அப்படி விளக்குவதாய் ஒரு எண்ணம். அவர் எப்போது வாயைத் திறந்து பேசினார் ..இதை மட்டும் அவர் வாயில் இருந்து பிடுங்கியா எடுக்கமுடியும்.
அம்மாவின் கையைப்பற்றி அருகிருந்த ராகுலை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் காதில் ஏதோ சொன்னார் அம்மா. விடயம் மன்மோகனின் காதுக்கு வர கடத்தப்பட்டு பிரணாப் ,சிதம்பரம் நெஞ்சத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது.
அடடா எவ்வளவு பெரிய விடயம். அதுவும் அம்மாவின் பிறந்தகத்தில் ஒரு விடயமென்றால் நாம் புகுந்தகத்தின் பெருமையைக்காப்பாற்ற வேண்டாமா? வெளியுறவுத் துறை அமைச்சரென்ற அளவில் எத்தனை கப்பல்களை அனுப்புவது
என்ற கணக்குகள் பிரணாப்பின் மனதில் ஓட உள்துறை அமைச்சர் சிதம்பரமோ தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டுக்கொண்டிருந்தார்.
எதிர்காலத்தின் முக்கியம் புரிய அம்மா திடுக்கிட்டெழுந்து வாசலை நோக்கி போக
மன்மோகனும் நிழலாய்த் தொடர கப்பலை நடுக்கடலில் விட்டு பிரணாப்பும் சிதம்பரமும் பின்னால் ஓடினார்கள். அம்மாவின் தலைக்கறுப்பு தெரிந்தவுடன் தெருவில் நின்ற தங்கபாலு வகையறாக்கள் கோஷம் போடத் தொடங்கினார்கள்.
ஹிந்தி தெலுங்கு பஞ்சாபி எல்லாவற்றையும் மேவி தமிழ் கேட்டது. அது தான் தங்கபாலு.
பாரிய கேட்டைத்தாண்டி கார் தெருவிற்குள் நுழைந்தபோது கோஷமும் கைகாட்டலும் தெருவைத் தூசி பரத்த அம்மாவும் கை காட்டினார். குறிப்பாக தங்க பாலுவைக்குறிவைத்து இலவச இணைப்பாக ஒரு புன் சிரிப்பும் . தமிழ் நாட்டில் அம்மா வளர்த்து வரும் கடா அது என்பது அம்மாவுக்குத் தான் தெரியும். அவரை வெளிநாட்டுக்காரி என்று திட்டிய ஒரு கணக்கு தீர்த்துக் கொள்ள பாக்கி இருக்கின்றது.
காலம் கனிந்து வரும் வரை காத்திருப்பது தானே அம்மாவின் சாணக்கியம். புலிகளுடனான கணக்குத் தீர்க்கப்பட்டுக்கொண்டிருப்பதைப்போல இதுவும் தீர்க்கப்படும். காலையில் பீகார் சண்டியர் விட்ட சவுண்டைப் பற்றிய செய்தி இன்னும் காதில் இனித்துக் கொண்டிருக்கின்றது. இது ஓரகத்திச் சண்டை. இருந்தாலும் "ரோலர்" ஏத்திக் கொல்வேன் என்று லாலு ஏன் சொன்னார் என்பது இன்னும் புரிந்தும் புரியாமலும் கொன்றுகொண்டிருக்கின்றது. ரெயில்வே தானே அவருக்கென்றே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது. பிறகென்ன ரோடு போடும் ரோலர் பற்றிப் பேசுகின்றார். நெடுஞ்சாலை அமைச்சகத்திலும் கண் வைத்து விட்டாரோ என்ற சந்தேகம் தான் கொன்று கொண்டிருக்கின்றது.
இன்னும் எத்தனை பேரைச் சமாதானப்படுத்த வேண்டும். இதைபுரியாமல் லாலு கனவு காண்கிறாரோ என்று தான் சங்கடமாகவிருந்தது. எல்லா மாநிலத்திலும் கூட்டு வைத்து ஆட்சி பிடிப்பதன் சங்கடம் இது தான் .... தாவு தீர்ந்து போகின்றது.
இந்த முறையாவது மெயாரிட்டி கிடைத்து விடவேண்டும். இரண்டு முறை கலைந்த கனவு நிறைவேற வேண்டும். மெயாரிட்டி கிடைத்தால் வசதியாகச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துவிடலாம். அப்படி மட்டும் நடந்து விட்டால் எலிஸபெத் தின் பின்னால் இந்தியாவை ஆண்ட வெள்ளை ராணி நானாகத் தான் இருப்பேன். எவ்வளவு பெருமை. தன் எண்ணத்திற்கு தடை போட்ட அம்பேத்கார் மேல் கோபம் வந்தது. கோபத்தை வெளிக்காட்டாது சிரிக்கும் இராஜ தந்திரம் இன்னும் சரி வர வாய்க்கவில்லை. தலையைக் குனிந்து ஏசு அப்பாவிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். கார் எலக்க்ஷன் அலுவலகத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது.
செய்தி1: இத்தாலியில் நில நடுக்கம் 50 பேர் கொல்லப்பட்டார்கள்.
செய்தி2: சோனியா ரேபரேலியில் வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment