ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Saturday, April 11, 2009
தமிழக தேர்தல் - சரியான திசை நோக்கி
தமிழக தேர்தலின் குழப்பம் பற்றி நிறையவே கவலை இருந்தது. இன்று தமிழக மக்களின் ஈழத் தமிழ் மக்கள் மீதான சரிசனை உணர்வு சரியான வெளிப்பாடாக இருக்க வேண்டுமே என்று மனது அல்லல் பட்டுக்கொண்டிருந்தது.அது நடக்காது விட்டால் தமிழக மக்களின் தமிழுணர்வு பற்றி வரலாறு எள்ளி நகைப்பதைத் தவிர்க்க இயலாது போய் விடும் என்ற துயரம் நிலைபட்டு இருந்தது. கோமாளி மாநிலம் என்று வடவரும் சிங்களரும் கேலி செய்வது தமிழகத்தை பொறுத்தளவில் நிலையாகிப்போகும்.
இத்தகைய கவலையை மனதில் விதைத்ததே இது வரை நிகழ்ந்த திராவிட அரசியல் தில்லுமுல்லுகளின் மீதான அனுபவங்களே.
கூட்டணி என்ற பெயரில் குழி பறிப்பதுவும் காட்டிக்கொடுப்பதுவுமே திராவிடப் பாரம்பரியமாக அரசியலாளர்களால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றது.பொதுவான கொள்கை குறித்த இணைப்புகள் தமிழக சரித்திரத்தில் என்றுமே திராவிடக் கட்சிகளிடையே ஏற்படாதிருப்பது ஒரு சாபக்கேடு போலும்.
ஆனாலும், இன்றைய பொது உடன்பாடாக இருக்கும் ஈழத் தமிழர் மீதான போரை முண்டுகொடுக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவது என்ற வேலைத்திட்டத்தின் படி தமிழக கட்சி இணைப்புகள் சரியான திசையிலேயே நடந்தேறியிருக்கின்றன.
தனிக்கட்சிகளின் சமூக நன்மைகளின் உடன்பாடு வேறுபாட்டுகளை மேவிய வகையில் இது அமைந்திருக்கின்றது. தமிழக மக்களுக்கு இது உடனடி நன்மைகளைக் கொண்டு வராது விடினும் காலப்போக்கில் ஒரு அரசியல் நாகரீகத்தை பின்பற்றும் தொடக்கமாக இருக்கக் கூடும்.
காங்கிரஸ் கட்சியின் கையை விடமுடியாத தி.மு.க வும் அதன் கூட்டுக் கட்சிகளும் அதலபாதாளத்தில் அமுங்குவது தவிர்க்க முடியாதது. அதுவே இன்றைய காலகட்டத்தில் தமிழர் உணர்ச்சியை பறைசாற்றும் முன்னுதாரணமாக இருக்கப்போகின்றது.
அ.தி.மு.க வின் ஈழத்தமிழர் முரண்பாடுகள் ஒரு புறம் இருக்க காங்கிரஸ் பதவி ஏற்றத்தை ஆதரிக்கும் தி.மு.க வை தோல்வியடையச் செய்வது இங்கு பிரதானமாகின்றது. ஈழத்தமிழர் ஆதரவை முன்வைக்கும் கட்சிகள் இங்கு இணைந்திருப்பது அ.தி.மு.க தலைமையின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். அல்லது கொண்டு வராதிருக்கவும் கூடும்.
எது எப்படியிருந்த போதும் அ.தி.மு.க தலைமையின் நகர்வுகள் அடுத்த தமிழகத் தேர்தல் வெற்றியை முன்னிறுத்தியதாகவே இருக்கும். அது குறித்த சிந்தனை யால் கூட்டுக் கட்சிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்க அதனை நிர்ப்பந்திக்கும். அ.தி.மு.க தலைமையைப் பொறுத்தளவில் ஈழத்தமிழர் மீதான நிரந்தர வெறுப்போ ஆதரவோ கிடையாது என்பது அவரின் பல நடவடிக்கைகளில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றது.
அதன் தாக்கம் மத்தியில் காங்கிரஸ்ஸிற்கு மாற்றீடாக இருக்கக் கூடிய பா.ஜ.க விற்கு ஆதரவளிப்பதன் மூலம் அல்லது அ.தி.மு.க இப்போது இருக்கக் கூடிய மூன்றாவது அணியை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றத் தூண்டுவதாகக் கூட வெளிப்படலாம்.
இவ்விரு தெரிவையும் விடுத்து காங்கிரஸிற்கு ஆதரவளிக்கும் சாத்தியப் பாடுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அது இன்னும் இரண்டு வருடங்களில் வரக்கூடிய மாநில ஆட்சி மாற்றத்தில் அ.தி.மு.க வின் வாய்ப்பைப் பெரிதாகவே பாதிக்கும். அதை அ.தி.மு.க தலைமையும் உணர்ந்தே இருக்கின்றது.
பா.ம.க வின் சந்தர்ப்பவாதத் தலைமை மத்தியில் காங்கிரஸ் தவிர்ந்த ஆட்சி அமையுமாயின் தொடர்ந்தும் அ.தி.மு.க விற்கே ஆதரவைத் தொடரும். ம.தி.மு.க வின் தெரிவு அ.தி.மு.க வைத் தாண்டிச் செல்லும் நிலை இன்று இல்லை.
தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கும் திருமாவின் அணி தான் மிகப்பரிதாபத்திற்கு உரியது. காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியின் தோல்வியின் பின்னால் அதன் வாய்ஸ் அடங்கிப்போகும். அல்லது பா.ம.க உதவியுடன் பின் கதவாலேனும் சரியான இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ள முயலும்.
பா.ஜ.க மாநிலக் கட்சிகளின் கூட்டுத் துணையுடன் ஆட்சியில் அமைந்தால் இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொழுத்திருக்கும் தனி நபர் முதலாளித்துவ வியாபாரிகளுடன் இணக்கப்பாட்டிற்கு வரச் சிறிது காலம் எடுக்கும். அது இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தொடர்வதை விடக் கூடிய கால அவகாசத்தை தமிழ்த் தேசியத்திற்கு வழங்கும்.
அது தமிழ்த் தேசியம் தன்னை புதுப்பித்துக் கொள்ளவும் போராட்டத்திற்கு தலைமை தாங்கவும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். அதே நேரம் திராவிடக் கட்சிகள் தமிழக மக்களின் மனப்போக்கினைக் கற்றறிந்து ஆட்சியை நடாத்தும் பயத்தையும் கொடுக்கும்.
காங்கிரஸ் -தி.மு.க கூட்டணியைத் தோல்வியடையச் செய்வது தமிழ் உணர்வாளர்களுக்கு நன்மையே பயக்கும். தமிழக அரசியல் போக்கிலும் தேவையான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆம்.சரியான திசையில் செல்கிறது. செல்ல வேண்டும்.காங்கிரசு கவர்மென்ட் மாறினாலே இலங்கைக்கு கிட்டும் உதவிகள் மறுக்கப்படும். அதுவே ஈழத்திற்கு கிட்டும் பயனாகும். பிஜெப்பியோ மூன்றாவது அணியோ ஈழத்தை அங்க்கீகரிக்கிரார்களோ இல்லையோ நிச்சயம் சிறிலங்காவுக்கு உதவபோவதில்லை. ஆகவே காங்க்ரசையும் அதற்கு ஜிங் ஜக்கு ஜிங் ஜக்கு போட்டு பல்லக்கு தூக்கி காவடி எடுக்கும் கருணாநிதியையும் தோற்கடித்து மத்தியில் மாற்று அரசு அமைய பாடுபடுவோம்.
Post a Comment