ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, April 21, 2009


ஜெ - ஒரு இரும்புப் பெண்மணி?


தேர்தல் மும்முரத்தில் அனைவரும் இருக்கின்றோம். அரசியல் வாதிகளின் அதிர்வெடிகள் அதிரத் தொடங்கிவிட்டன. மக்களும் நல்ல காலம் பிறக்காதா ? என்ற அங்கலாய்ப்புடன் இவர்களின் வாக்குறுதிகளை காது கொடுத்துக் கேட்கத் தொடங்கி விட்டனர்.

இதே நேரத்தில் இரு முக்கிய கூட்டணிக்கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க வின் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்து விட்டன. கட்சிகளின் செயற்பாடு குறித்த விடயங்களில் கட்சித்தலைமையின் வீரம் விவேகம் தன்னம்பிக்கை என்பவற்றை இனங் காணக் கூடியதாக இருக்கும்.

சில முக்கிய பிரச்சினைகளில் இரு கட்சித் தலைவர்களின் பிரச்சினைகள் குறித்த தெளிவு, தீர்வு குறித்த நம்பிக்கை, தீர்க்கப்படக்கூடிய வழியைத் தெளிவுடன் வைத்தல் என்பவற்றிலுள்ள துணிச்சலை அடையாளங் காணக்கூடியதாக இருந்தது.

தி.மு.க தலைவரின் அறிக்கைகள் "வழவழாகொழகொழா" பாணியில் தன் நம்பிக்கை குறைந்த, பொறுப்பில் இருந்து நழுவும் போக்கு வெளிப்பட்டு நிற்கின்றது. வலியுறுத்துவோம்.. கோரிக்கை வைப்போம் என்று மத்திய அரசைச் சார்ந்திருக்கும் சுய பலமற்ற போக்கு காணப்படுகின்றது.

ஆனால் அ.தி.மு.க தலைமையின் அறிக்கைகள் பொறுப்புடன் கூடிய தன்னம்பிக்கை நிறைந்த தீர்க்கப்பட வேண்டிய தெளிவான வழி முறைகளுடன் வெளிப்பட்டிருக்கின்றது.


மொழிக் கொள்கை

தி.மு.க: இந்தி திணிக்கப்படாது என்ற வாக்குறுதியைக் காப்பாற்ற வலியுறுத்துவோம். இந்திய மொழிகள் அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டுமென வலியுறுத்துவோம். சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க: தமிழ் உட்பட, எட்டாவது பட்டியலில் இடம்பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கவும், நேருவின் உறுதிமொழிப்படி இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்ய தேவையான சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்துவோம்.



இலங்கை பிரச்னை


தி.மு.க: இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டியும், தமிழர்கள் அமைதியாகவும், உரிமையுடனும் வாழ வழி வகுக்க வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்துவோம்.

அ.தி.மு.க: இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு, தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையை நிறுத்த கோரிக்கை விடுப்போம். சிங்களர்களுக்கு சமமாக தமிழர்கள் நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ தனி ஈழ மாநிலம் அமைக்க வேண்டும். அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழக பகுதிகளை புதுப் பிக்கவும், மேம்படுத்தவும், மறுவாழ்வு அளிக்கவும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.


கச்சத்தீவு


தி.மு.க: கச்சத்தீவிற்கு தமிழர்கள் செல்வதற்கும், அப்பகுதியை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்கும் மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

.தி.மு.க: கச்சத்தீவு தொடர்பாக இந்திய - இலங்கை உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கச்சத்தீவை மீட்க தேவையான அனைத்தையும் செய்வோம்.


சேது சமுத்திர திட்டம்


தி.மு.க: சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு விரைந்து முடித்து, எஞ்சிய பணிகளை முடிக்க வேண்டும்.

அ.தி.மு.க: கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சேது சமுத்திர திட்டத்தால் தனி நபரும், தனி குடும்பமுமே பலன் பெறும் என்பதால் சேது சமுத்திரத் திட்டம் ரத்து செய்யப்படும்.


நதிகள் இணைப்பு திட்டம்


தி.மு.க: தென்னக நதிகள் இணைப்பு திட்டத்திற்கான முழு நிதி உதவியை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும்.

அ.தி.மு.க: மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளை ஒன்றிணைக்க காலமுறை நடவடிக்கை எடுக்கப்படும். நதிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்கிடையே நதி நீரைப் பங்கீடு செய்துகொள்ள நிரந்தரமான ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும்.


வருமான வரி விலக்கு


தி.மு.க: நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள், மாத ஊதியம் பெறும் பிரிவினர், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு வருமான வரம்பை இரண்டு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்துவோம்.

அ.தி.மு.க: மாத வருவாய் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மற்ற பிரிவினருக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இங்கு சில முக்கிய பிரச்சினைகளும் கட்சித் தலைமைகளின் நிலைப்பாடும் நீலம் சிவப்பு நிறங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

சிவப்பு- அதீத உறுதி ,தன்னம்பிக்கை, தெளிவு என்று கொண்டால்

நீலம்- தன்னம்பிக்கையின்மை, தெளிவற்ற தன்மை, நழுவல் போக்கு எனக் கொள்ளவும்.

இந்தத் தேர்தல் அறிக்கையின் படியே கட்சிகள் செயலாற்றும் என்று கொண்டால் அதிக மதிப்பெண்கள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கைக்கே. ப்ரச்சினைகள் பற்றிய தெளிபும் அதைத் தீர்க்கும் திடமான வழிகளும் அ.தி.மு.க வாலேயே சொல்லப்பட்டிருக்கின்றன.

தி.மு.க தலைமையை விட அ.தி.மு.க தலைமையிடம் தெளிவான போக்கும் தீர்வும் காணப்படிகின்றது. நினைத்ததைச் சொல்வதில் அவர் இரும்புப் பெண்மணியாகவே இருக்கின்றார்.

குறிப்பு: ஆனால் இதே போக்கு எப்போதும் இருக்குமா? என்பது அந்த ஆண்டவன்னுக்குத் தான் வெளிச்சம்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil