ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, April 27, 2009
தமிழகத் தேர்தலும் ஈழத்தமிழனும்
ஈழத்தில் கொலைக்களம் சூடு பிடித்திருப்பதைப் போலவே தமிழகத்தில் தேர்தல்க்களமும் சூடு பிடித்திருக்கின்றது. யாருக்கு வோட்டு? என்பதில் அடிதடி குத்து வெட்டு என்ற அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
திராவிட தமிழ் அரசியலும் இந்துத்துவ தேசிய அரசியலும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. திராவிட தமிழ் தனித்துவங்களை இலகுவாக மழுங்கடிக்கும் தேசியவாத அரசியலில் திராவிடக் கட்சிகள் இணைந்து கொள்வதில் போட்டி போடுகின்றன.
இந்தியத் தேசியத்திடமிருந்து திராவிட தமிழ்ப்பாரம்பரியங்களைக் காப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்த திராவிடக்கட்சிகள் இன்று இந்திய தேசியத்தில் கலந்து கொள்ள அவற்றைக் கைவிடுவதும் அடகு வைப்பதுவும் நடந்து கொண்டிருக்கின்றது.
கொள்கை நோக்கமின்றி தமது சுயலாபங்களையும் குடும்ப நன்மைகளையும் மையமாக வைத்தே இந்திய ஜோதியில் கலப்பதில் முண்டியடிக்கின்றார்கள். இதன்மூலம் இவர்களை நம்பிய மக்களுக்கு இரட்டைத் தீங்கை ஏற்படுத்துகின்றார்கள்.
1) திராவிட தமிழ் பாரம்பரியத்தை அழிக்க உதவு கின்றார்கள்.
2) இந்தியத் தேசியத்தில் கலப்பதால் ஏற்படும் மேலதிக தேசிய சுரண்டலின் பழுவை மக்கள் மீது திணிக்கின்றார்கள்.
இந்திய தேசியத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனடையாதவர்கள் தான் தமிழகத்தில் அதிகளவு இருக்கின்றார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகையவர்களே பெரும் பான்மையாக இருக்கின்றார்கள்.
காரணம் இந்தியத் தேசியம் என்பது பொருளாதார அதிகார பலம் மிக்கவர்களால் உருவாக்கப்பட்டது. தொடர்ந்தும் சாமானிய மக்கள் மீதான சுரண்டலுக்காக காப்பாற்றப்படுவது. இந்தியாவின் வெளிநாட்டு உள்நாட்டுக் கொள்கைகள் இவர்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை ஒவ்வொரு சாமானியனும் புரிந்து கொள்ளும் வரை இந்த இழுபறி நிலை நிலைத்தே இருக்கும். இன்றைய உலக அரசியல் பொருளாதாரப் போக்கும் இத்தகைய தடைகள் அற்ற பரந்த நுகர்வுச் சந்தையை வேண்டி நிற்பது இந்தியத் தேசியத்தை இன்னும் வலுப்படுத்தும் காரணியாகும்.
இன்று ஈழத்தின் பிரச்சினையும் அன்னிய சக்திகளின் விருப்பு வெறுப்புகளின் போக்கில் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு உலகின் இத்தகைய போக்கே காரணமாகும். ஈழ விடுதலை என்பது பரந்த நுகர்வுச் சந்தைக்கு எதிரானனதாக பார்க்கப்படுவதே ஈழப்போரின் அனைத்துப் பின்னடைவுகளுக்கும் காரணமாகும். ஆனாலும் மக்களின் இனவிடுதலை என்பது இத்தகைய தடைகளையும் மீறி சாத்தியமாகக் கூடியதே.
இன்று ஈழத்தில் இத்தகைய நுகர்வுச் சந்தையை வேண்டி நிற்கும் முதலாளித்துவப் போட்டியே இத்தனை மனிதப் பேரழிவுகளுக்கும் காரணமாயிருக்கின்றது.
இன்று ஈழத்தில் அதிகளவு தாக்கத்தை உருவாக்குவது இந்திய முதலாளிகளின் தனி மனித பேராசைகளும் காங்கிரஸின் தனி மனித அரசியல் காழ்ப்புக்களும் என்று சொன்னால் அது மிகையில்லை. இத்தகைய நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் அல்லது அதன் ஆதிக்கத்தை தற்காலிகமாகவேனும் குறைத்து மனிதப் பேரவலத்தைத் தடுப்பதில் தமிழகத் தேர்தல் உதவக் கூடும்.
ஈழத்துப் பிரச்சினையின் உக்கிரம் எப்போதெல்லாம் கொழுந்து விட்டெரிகின்றது என்று கவனித்துப் பார்த்தீர்களேயானால் அது காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்திரா காந்தி காலத்தில் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்த இந்தியா இராஜீவ் காலத்தில் யுத்தம் செய்து இன்று சோனியா காலத்தில் உக்கிரத்தாண்டவம் ஆடுகின்றது. இது எவ்வாறு சாத்தியமாகின்றது?
இந்தியாவின் பாரம்பரியக் கட்சி என்ற சலுகையில் அதிகளவு முதலாளித்துவ கொள்ளையரின் அமோக ஆதரவிற்குரியது காங்கிரஸ் கட்சி. முதலாளிகளைத் தட்டிக்கொடுத்து அதிக சலுகைகளை வழங்குவதன் மூலம் மக்களை மேலும் மேலும் உறிஞ்ச வழி வகுத்துக் கொடுக்கின்றது. இந்தியாவில் அதிகளவில் ஏழை மக்களுக்குத் தீங்கு செய்யும் காங்கிரஸ் கட்சியின் படு போக்கிரித்தனங்களை அம்பலப்படுத்தும் சரியான வலுவான தேசியளவிலான எதிர்க்கட்சிகள் அமையாதது இந்திய ஏழை மக்களின் துரதிர்ஷ்டமே.
காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு எதிரான கொள்கைகளாலேயே வழி நடாத்தப் படுகின்றது. பொருளாதார எதிர்மறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதே நேரம் முதலாளித்துவ இருப்பை உறுதி படுத்தும் வகையில் பிரதேச இன் மொழி வாதங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகின்றன. பொடா தடா எமர்ஜென்ஸி என்ற அடக்கு முறைச்சட்டங்கள் பெரும் பாலும் காங்கிரஸ் ஆட்சியிலேயே அமுலுக்கு வருகின்றன. அதே நேரம் அதனை எதிர்க்கும் மக்கள் போராட்டங்கள் கிளர்ச்சிகள் என்பனவும் காங்கிரஸ் ஆட்சியிலேயே வெளிக்கிளம்புகின்றன.
இந்த மக்கள் விரோதப் போக்கு இந்தியா முழுமைக்கும் பொதுவானது. இதன் அடிப்படையை இனங் காணுவது தமிழகத்தில் யாரை ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதைத் தீர்மானிக்க உதவும்.
அ.தி.மு.க , தி.மு.க இரண்டிலும் கூடியளவு திராவிட தமிழ்த் தேசியத்தைப் பேசக்கூடிய கட்சி தி.மு.க தான். ஆனாலும் அதன் சமீபத்தைய நடவடிக்கைகள் இது தொடர்பான அதன் தீவிரத்தைக் குறைத்துள்ளதைக் காட்டுகின்றது. அ.தி.மு.க அதன் ஆரம்ப காலத்திலிருந்தே திராவிட தமிழ்ப் பாரம்பரியம் பற்றி அதிகம் பேசவில்லை. தனி மனித புகழே அதன் வெற்றிக்கு என்றும் காரணமாயிருந்திருக்கின்றது. அது இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு கட்சியாகவே இன்றைய தலைமையால் வழி நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழக ஏழை மக்கள் புறக்கணிக்க வேண்டிய கட்சியாக என்றும் இருப்பது காங்கிரஸ் கட்சியே. அதன் மீது கொண்டிருக்கும் காழ்ப்பினால் அல்லாமல் அது கொண்டிருக்கும் கொள்கைகளால் என்பது இந்திய மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். தமிழகத்தில் காங்கிரஸை ஓரந்தள்ளுவதன் முதல் படியாக அது இணைந்துள்ள தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மக்களுக்கெதிரான கட்சியை ஒதுக்குவது மக்களின் உடனடி நீண்ட கால நல்வாழ்விற்கு இன்றியமையாதது ஆகும். அதன் மூலம் காங்கிரஸுடன் கூட்டணி சேரும் பயம் அதிகரிக்கும். அது நாளடைவில் காங்கிரஸை முகவரி அற்றுப் போகச் செய்யும்.
காங்கிரஸ் போன்ற அதி தீவிர முதலாளித்துவக் கட்சி ஆட்சியில் இல்லாது போதல் ஈழத் தமிழ்ப்போராட்டத்தில் அதிகரித்து வரும் நெருக்கடிகளை குறைத்து ஆசுவாசப் படுத்தும். ஆனாலும் ஈழ விடுதலை போக வேண்டிய தூரம் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment