ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, June 21, 2009


புலிகளின் தோல்வியும் மறைந்திருக்கும் உண்மைகளும்


இன்று நடந்தேறியிருக்கும் புலிகளின் தோல்வியைத் தமிழ் மக்களின் தோல்வியாகப்பார்ப்பது மிகத் தவறானதாகும்.ஒரு பின்னடைவாக வேண்டுமென்றால் எண்ணிக்கொள்ளலாம். போக வேண்டிய பாதையை திருத்திக் கொள்ளும் சந்திப்பாகக் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம். இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் உள்ளும் புறமும் இருந்து கிளம்பிய அடக்கு முறைகளுக்கும் அராஜகங்களுக்கும் எதிராக நடாத்திய போராட்டத்தின் ஒரு உயர்ந்த படி நிலையில் வந்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களின் போராட்டமானது அரசியல் இராணுவ படிநிலைகளுக்கூடாக பல கட்டங்களாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. சில நிலைகள் மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும் சில நிலைகள் மக்கள் விரோதப்போக்குடனும் கடந்து வந்திருக்கின்றன.மக்கள் ஆதரவு விரோதம் என்பது நூறு சதவிகித மக்களின் நலன் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றது.ஆனால் தமிழ் மக்களின் போராட்டமானது நூறு சதவிகித ஆதரவையோ விரோதத்தையோ எப்போதும் பெற்றுக்கொள்ளாத ஒரு இரண்டுங்கெட்டான் போக்கிலேயே நகர்ந்திருக்கின்றது.

அதற்குப் பலகாரணங்களை முன்னிறுத்தினாலும் இயல்பாகவே தமிழ் மக்களுக்கிடையில் இருந்து கொண்டிருக்கும் பொருளாதார சாதீய பிரதேசவாத மத வேறுபாடுகளை முன்மைக்காரணிகளாக குறித்துக் கொள்ளலாம். இப்போக்கினை மேலும் சாத்தியமாக்கியதற்கு போராட்டச் சக்திகளிடையே காணப்படாத அரசியல் சித்தாந்தத் தெளிவின்மையை வெளிப்படையான காரணமாகக் கூறிக்கொள்ளலாம். ஆனாலும் மறைக்கப்பட்ட காரணங்களாக போராட்டத்தை முன்னின்று நடாத்திய சக்திகள் வரித்துக் கொண்ட ஆயுதங்களின் பலத்தை மட்டும் முழுமையாக சார்ந்து நின்றமை, சாதீய அடிப்படையில் பிரிந்து நின்றமை,பிரதேச பூகோள ரீதியான உயர்வு தாழ்வினை சித்தரித்து நின்றமை ஆகியவற்றைக் கூறிக்கொள்ளலாம்.

இவையெல்லாவற்றிற்கும் மேலான ஜீரணித்துக் கொள்ளவே கடுமையான விடயம் மக்களுக்கான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டமை. கருத்துக் கூறவோ விமர்சிக்கவோ முற்பட்டவர்களை துரோகியாக்கி போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போக்கு கடுமையாகவே மக்களைப் போராட்டத்துடன் ஒட்டவிடாது ஓரங்கட்டியது. புலிகளின் எழுச்சிக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு உறுதுணையாக இருந்ததோ பின்னர் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்கும் போக்கினால் மக்களை விட்டு விலகிச்சென்றதும் அவர்களின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

மக்களால் மக்களுக்காக நடாத்தப்படாத போராட்டங்கள் எப்போதும் வெற்றியடைந்ததில்லை. மக்களை இணைத்துச் செல்லாத போராட்டங்களும் குழுநிலைப் போராட்டமாக பிரிக்கப்பட்டு தோற்கடிக்கப்படும். இன்று புலிகளின் போராட்டம் சர்வதேச சமூகத்தால் அவ்வாறே பிரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் போராட்டம் என்று எத்தனை தூரம் வலிந்து எங்களால் கற்பிக்கப்பட்டாலும் அதன் உட்கூறுகள் ஒரு குழு நிலைப் போராட்டமாகவே தன்னை வெளிப்படுத்தியிருந்தது. மக்களை மனப்பூர்வமாக ஒன்றிணைக்கத்தவறிய ஒரு நிலையில் பயம் காரணமாக இணைத்து வைத்திருந்ததையும் எதிர்ப்புரட்சிச் சக்திகள் கணித்து வைத்திருந்தன.அதன் காரணமாகவே புலிகளின் போராட்டம் இலகுவாக முறியடிக்கப்பட்டது.

இது ஒரு ஜனநாயகப்போராட்டமாக சர்வதேச சமூகத்தாலும் உலகெங்கும் பரந்து வாழும் ஜனநாயகச் சக்திகளாலும் பார்க்கப்படாது போனமையே இவ்வாறான எளிதான வீழ்ச்சிக்கு அடிகோலியது. 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டபோதும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு நாடோ ஒரு ஜனநாயக அமைப்போ முன் வந்து ஆதரவான கருத்தெதனையும் கூறியிருக்கவில்லை என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். இது ஜீரணிக்கக் கஸ்டமான விடயமாக இருந்தாலும் மறுக்க முடியாத உண்மையாகும். யாருமே எம்மை ஆதரிக்க முன்வரவில்லையென்றால் நாம் ஏதோ தவறு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது தானே உண்மை. ஒட்டுமொத்த உலகமும் நமக்கெதிராக சதி செய்வதாக சொல்லிக்கொள்வதோ எண்ணிக் கொள்வதோ நம் அறியாமையே தவிர வேறல்ல. இன்னும் ஜனநாயக விழுமியங்களைக் காக்கும் ஆரோக்கியமான உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இல்லாவிட்டால் எந்தவித சட்ட , மனத் தடையுமில்லாது இலங்கை கறுப்பர்கள் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியுமா? அதன் மூலம் அந்நாடுகளில் வாழும் மக்களின் அனுதாபத்தையும் அரசுகளின் கவனத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமா?

இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அத் தோல்வி தமிழ் மக்களின் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் நாம் போராட்டத்தின் திசையை முன்னகர்த்த நிறையவே சிந்திக்க வேண்டியிருக்கின்றது.பல மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுடன் உட்கட்டுமானத்தில் மிகுந்த அளவில் ஜனநாயகச் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.கருத்துச் சுதந்திரத்தை மேன்மைப்படுத்தும் வகையில் அரசியல் சித்தாந்த தெளிவை மக்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ் மக்களின் போராட்டத்தின் நேர்மையையும் தேவையையும் சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்லும் வகையில் கல்விமான்கள் ,மாணவர்கள்,அறிவு ஜீவிகள் சித்தாந்த வாதிகள் சமூக அக்கறையாளர்கள்,தாய்மார்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.

இது ஒரு மக்கள் போராட்டம் என்ற நம்பிக்கையை அனைத்துத் தரப்பு மக்களின் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும்.மக்களை விட மேலாக ஆயுதங்களை நம்பும் கலாச்சாரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.பல்குழல் பீரங்கிகளும் சுடுகலன்களும் ஏற்படுத்தாத நற்பன்களை ஓங்கி ஒலிக்கும் மக்களின் குரல் உருவாக்கித் தரும்.படையணிகளின் அணிவகுப்பு ஏற்படுத்த முடியாத மாற்றங்களை மக்கள் பேரணி ஏற்படுத்தித் தரும்.முள்ளி வாய்க்காலில் அன்று புலிகளின் படையணிகள் இல்லாதிருந்திருந்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாவது ஒரு ஜனநாயகத்தின் குரல் அந்த மக்களைக் காக்க ஓங்கி எழுந்திருக்கும்.

இன்று பர்மாவில் வீட்டுக்காவலில் இருக்கும் யூகிசாங் வெறுங்கைகளாலேயே பர்மிய இராணுவ அரசிற்கெதிராக மகத்தான போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார். அவர் ஒருவருடம் காட்டும் உலகின் நல்லெண்ணத்தின் சிறு துளியையாவது அன்று புலிகளால் வென்றெடுக்க முடியாது போனதேன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனுபவங்கள் கற்றுத் தருகின்றன. அனுபவங்களைப் பாடமாக எடுத்துக் கொள்வது முன்னேற்றத்தை நோக்கி எம்மைக் கொண்டு செல்லும்.

இது இவ்வாறு இருக்க புலிகளின் எஞ்சிய சில சொற்ப நாட்டாமையாளர்களால் முன்னெடுக்கப்படும் "தேசம் கடந்த தமிழரசு" என்ற இயக்கம் மீண்டும் தமிழ் மக்களிடம் இருந்து பிரிந்து போகும் விதத்திலேயே அமைந்திருக்கின்றது. தங்கள் தவறுகளில் இருந்து திருந்திக் கொள்ளும், குறைந்த பட்சம் அந்த தவறுகளுக்காவது மனம் வருந்தும் போக்கு அவர்களிடம் காணப்படவில்லை. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை இணைத்துச் செல்லும் ஜனநாயக வழியைத் தன்னும் அவர்கள் தெரிவு செய்யவில்லை. இப்போக்கு இன்னும் பல சங்கடங்களையும் பின்னடைவுகளையுமே தமிழ் மக்களுக்கு உருவாக்கித் தருமேயொழிய சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்றுத்தரப்போவதில்லை.

மீண்டும் புலி முகம் பற்றிய தவறான எண்ணக்கருத்தையே சர்வதேச நாடுகளிடையே வலிந்து திணிக்கும்.சிங்களச் சிறிலங்காவின் அராஜகப் போக்கினை வலிந்து காக்கும் தர்மசங்கட நிலைக்கு உலக நாடுகளை மீண்டும் கொண்டு செல்லும்.

இன்னும் இன்னும் ஒரு சிலரின் தவறுகளால் துன்பப்பட தமிழ் மக்கள் தயாராகவில்லை. மக்களின் பால் அக்கறை கொண்ட அனைத்து முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணையும் நேரம் இது. வர்க்க முரண்பாடுகளைக் களைவதற்கு முன்னால் குறைந்த பட்சம் பிரதேச சாதீய ஏற்றத் தாழ்வுகளைக் களையும், சட்டரீதியாகப் பாதுகாப்பைக் கொடுக்கும், மனித உரிமைகள் மூலம் சாசனரீதியான நம்பிக்கையைக் கொடுக்கும் மேலைத் தேய அமைப்பியல் சார்ந்த குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் மூலமாவது ஒன்று சேரலாம். வர்க்க ரீதியான மாற்றத்தை நீண்டகால செயற்திட்டமாக கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்தலாம்.

மக்களின் எண்ணங்களை செயல்வடிவம் கொடுக்க முயலும் அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைய முற்படுவதே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியான பாதையில் முன்னகர்த்தும். செய்வார்களா?

1 comment:

Unknown said...

அருமையான பதிவு.

//மக்களுக்கான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டமை. கருத்துக் கூறவோ விமர்சிக்கவோ முற்பட்டவர்களை துரோகியாக்கி போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போக்கு கடுமையாகவே மக்களைப் போராட்டத்துடன் ஒட்டவிடாது ஓரங்கட்டியது. புலிகளின் எழுச்சிக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு உறுதுணையாக இருந்ததோ பின்னர் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்கும் போக்கினால் மக்களை விட்டு விலகிச்சென்றதும் அவர்களின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.//

இவ்வளவு இழப்புக்களின் பின்பும் தங்களின் பிழைகளை ஏற்றுக் கொள்ளாத, மீள் பரிசீலனை செய்யாத அமைப்பாக விடுதலைப் புலிகள் மீண்டும் புது வடிவம் எடுக்க நினைப்பது நகைப்புக்கிடமானது.

மீண்டும் புதை குழிக்குள் இலங்கை வாழ் தமிழர்களைத் தள்ளுவதற்கு எடுக்கும் அடுத்த கட்ட திட்டமே தேசம் கடந்த தனியீழ அரசு, எமது இனத்தை அழித்து விட வேண்டும் என்பதில் திடமாக இருக்கின்றார்கள், என்ன தான் செய்வது !

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil