ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Sunday, June 7, 2009
இரண்டு மார்பிலும் பச்சை குத்தியிருந்தது
சிறுகதை என்பது என்ன? அனுபவமா? புனைவா? அனுபவம் பாடம் கற்றுக் கொடுக்குமென்றால் புனைவு எதைக் கற்றுக்கொடுக்கும். நம்ப முடியாத நடக்க முடியாத கதைகளைப் புனைவுகளாக படைப்பது ஒரு வித அத்து மீறல் அல்லவா ? அ. முத்துலிங்கத்தின் "மகாராஜாவின் ரயில் வண்டி" என்ற தொகுப்பில் வந்த "ஐந்தாவது கதிரை" என்ற சிறு கதையைப் படித்த போது அப்படித்தான் தோன்றியது.
திருமணம் என்பது புனிதமானது என்பது எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். குறைந்த பட்ச அளவிலேனும் புரிந்துணர்வு கொண்டதாகக் கூடவா இல்லாது போய்விடும். அப்படியே இல்லாது போய்விடின் பிரிந்து விடுதல் இலகுவானது அல்லவா? சேர்ந்திருந்து அனுதினமும் துய்க்கும் வலியை விட மேலானது அல்லவா பிரிந்து போதல்?
எல்லாம் ஒரு கதிரை வாங்குவது தொடர்பான பிரச்சினையால் வந்தது. உப்புச்சப்பில்லாத விடயம்தான்...என்று கூறிக்கொண்டே கதையின் பெண்பாத்திரமான பத்மாவதி ஒரு சூழ்ச்சிக்காரி ,துணிச்சல்காரி என்று பல சந்தர்ப்பத்தில் சோடிக்கப்படுகின்ற பாங்குடன் விவரிக்கப்படுகின்றது ஒரு சில உதாரணங்களுடன்.
14 வயதில் மகளிருக்கக் கூடிய தம்பதிகள் இன்னும் மேலதிகமாக ஒன்றிரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கக் கூடிய தம்பதிகள் இல்லறத்தில் ஆழ்ந்து அனுபவித்து துய்க்கின்ற விருப்புடையவர்கள் ..இவர்களுக்கிடையில் ஒருவரை மீளாத ஆழ்ந்த வலியில் ஆழ்த்துகின்ற குரூரம் கொப்பளிக்க முடியுமா?
பெண்விடுதலை பற்றிப் பேசுகின்றவர்களுக்கு சில வேளை இது உவப்பான விடயமாகக் கூட இருக்கலாம். ஆனால் அங்கு ஆணாதிக்கக் கொடுமைகளும் நிகழ்வதான போக்கு காணப்படாத இடத்தில் இலங்கையில் இருந்து வந்து மணம் செய்திருக்கும் ஒரு தமிழ்ப்பெண் இவ்விதமான ஒரு முடிவை எடுக்க முடியுமா? முடியுமா என்பதற்கும் முன்னால் தேவையா? என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
உழைக்கும் பெண்ணுக்கும் உழைக்கும் ஆணுக்கும் உரிய சிறு உரசல்கள் விட்டுக்கொடுப்பின்மை போன்ற சாதாரணச் சம்பவங்களே இடம் பெறும் குடும்பத்தில் இவ்வகையான முடிவை ஒரு தமிழ்ப் பெண்..தமிழ்ப்பெண்ணிற்குரிய சில சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் நம் சமூகம் முழுதாக இழந்து விடவில்லை என்ற கணிப்பினாலேயே ..தமிழ்ப்பெண் என்பதை இங்கு அழுத்திப் பதிவு செய்திருக்கின்றேன்.
ஒரு தமிழ் ஆணை அவமதிக்கும் செயலாக இதனைத் தேர்வு செய்கின்றாள் என்பது கதாசிரியரின் அனுபவமா? அல்லது பெண்கள் பற்றிய பார்வையின் வக்கிரமா? என்று புரியமுடியாத அந்தரத்தில் என்னைத் தொங்கவிட்டிருக்கின்றது.
எப்போதுமே விட்டுக்கொடுக்கின்ற கணவன் இப்போது மட்டும் விட்டுகொடுக்கவில்லை என்பதற்காக..எத்தனை ஆயிரம் தடவை கேட்டுக்கொண்டாலும்.. அவள் அப்படிச்செய்ததற்கான ஏதாவது காரணம் கிடைக்கின்றதா என்று கதை முழுக்க அலசிப்பார்த்தாலும் ..நான் கேள்விப்பட்ட வாசித்த கதைகளைச் செய்திகளைத் தோண்டிப் பார்த்தாலும் ..என்னால் இன்னும் தான் கூடவில்லை.
அதிக பட்ச கோபம் கொலை செய்ய வைக்கும் அல்லது தற்கொலை செய்யவைக்கும். அதற்கும் குறைந்த பட்ச கோபம் வீட்டை விட்டுப்போகச் செய்யும். இது எப்படி இன்னும் வாழ்க்கையை சேர்ந்தே கழிக்க இருக்கும் நினைக்கும் ஒரு பெண்ணால்...
"ஆவேசம் வந்து வலிந்து இழுத்தார். அது பிரிந்தது. தளும்பல் குறைவில்லாத மார்புகள்.
ஆனால் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. அவளுடைய இரண்டு மார்பிலும் பச்சை குத்தியிருந்தது. அந்த சைனாக்காரனின் டிராகன்கள் வாயை ஆவென்று விரித்துக் கொண்டு உறுமின. ஒரு பென்சில் கூட இடையில் புக முடியாத நெருக்கமான மார்புகள்.தன்னுடைய சொந்தப்பாவனைக்காக படைக்கப்பட்டவை என்று நினைத்திருந்தவை.யாரோ ஊர் பேர் தெரியாத நடைபாதை சைத்த்ரீகன் வரைந்தஓவியங்களின் கனம் தாங்காமல் ஆடின.
இருண்ட வனத்திலே பதுங்கியிருந்த மிருகம் ஒன்று தாக்கியது போல உணர்ந்தார். மெல்ல பலமிழந்து சரிந்தார். அவர்தான் இப்ப ஐந்தாவது கதிரை."
அந்தப் பெண் இப்படிச் செய்திருப்பாளா? இப்படிச் செய்ததன் மூலம் அவளின் வெற்றியென்ன?
இதை சொல்லியதன் மூலம் கதாசிரியரின் நோக்கம் என்ன?
ஆண்களை எதிர்ப்பதற்கான புதிய வழி முறைகளைச் சொல்லிக்கொடுப்பது தானா நோக்கம் ?
தன் மனைவியுடன் கூட முனையும் ஆண்களின் கைகள் நடுக்கத்துடன் தான் ஆடை நீக்கும். இதைபோன்ற ஆச்சரியங்கள் இருந்து விட்டால் என்ற படபடப்புடன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment