ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 6, 2009


சண்டை வேண்டாம், சகோதரர்களாக இருப்போம்


இது அமெரிக்காவின் ஒரு வித சரணாகதி என்று தான் தோன்றுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் கெய்ரோவில் அளிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற பேச்சின் சாரமே இதுதான்.இதை வரவேற்ற அரபு நாடுகளில் பல மக்களுக்கெதிரான செயற்பாடுகள் காரணமாக மக்களால் வெறுக்கப்படுகின்ற அரசாங்கங்களைக்கொண்டவை. அரசாங்கத்தின் மீதான வெறுப்பு அதை எதிர்க்கும் அடிப்படைவாத இஸ்லாமிய கடும்போக்காக வெளிப்பட இலகுவாக தீவிரவாதத்தில் விழும் அப்பாவிகளைக் கொண்ட நாடுகள்.

ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டில் இருந்த இந்நாடுகளை ஒபாமாவின் பேச்சு ஆசுவாசப்படுத்தியிருக்கின்றது.மற்றும் படி ஒபாமாவின் பேச்சு சாதிக்கப்போவது எதுவுமே இல்லை. அப்படியான ஒரு நல்லெண்ணம் இரு தரப்பிலும் நிகழ வேண்டுமென்றால் அமெரிக்கா அடிப்படையிலிருந்தே மாறவேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர்,பெரியண்ணன் போக்கு,உலகமயமாக்கல் பொருளாதாரம் அத்தனையையும் விட்டொழிக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு வெறுமனே பேச்சளவில் சகோதரர்களாக இருப்போம் என்பது வெறுங்கதையே.

சரிந்து போகும் உலகப் பொருளாதாரத்திற்கு முதன்மைக்காரணியும் அதிகளவு பாதிக்கப்பட்டதும் அமெரிக்காதான். அமெரிக்காவின் பொருளாதாரக்கொள்கைகள், குறைந்த காலத்தில் அதிகளவு இலாபம் பார்க்க விரும்பிய பேராசை, மொனோபோலிஸம் போன்ற செயற்பாடுகளே இன்றைய பொருளாதாரத் தேக்கத்திற்கு முக்கிய காரணங்களாகும்.

உலகின் மிகப்பெரும் கார் உற்பத்தியாளராகிய ஜெனரல் மோட்டேர்ஸ் திவாலாகிப்போவதையே ஒன்றும் செய்ய வழியில்லாது கையைப்பிசைந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அமெரிக்கா இன்றிருக்கின்றது. இந்த ஆண்டு மட்டுமே 31/2 இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்கின்றது. பாரிய நிதி நெருக்கடியைச் சரி செய்யவும் உள்நாட்டு விடயங்களில் கவனம் செலுத்தவும் அமெரிக்காவிற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது.

ஆப்கான் ,ஈராக் போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போர் அமெரிக்காவிற்கு மேலதிகச் சுமையாகிப் போய்விட்டது. இந்நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிராகப் போராடும் இஸ்லாமியர்களைச் சாந்தப்படுத்த அமெரிக்கா எடுக்கும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையே இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பேச்சு.

அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளும் தம் சுரண்டும் நவீன காலனித்துவப் போக்கை கைவிடவேண்டும். அந்த அந்த நாடுகளின் மூலப்பொருள்களாலும் உற்பத்திகளாலும் வளங்களாலும் கிடைக்கும் வருமானம் எதுவித சுரண்டலும் அற்று அந்நாடுகளின் மக்களையே போய்ச் சேரவேண்டும்.

அரபு நாடுகளின் எண்ணெய் வளங்களை ஒரு சில சுயநலமிக்க ஆட்சியாளர்களை வைத்து அமெரிக்க ஐரோப்பிய எண்ணெய்க்கம்பனிகள் சுரண்டிக்கொண்டு போவதே அராபியரின் இஸ்லாமியரின் அமெரிக்கா மீதான அடிப்படைக்கோபத்திற்குக் காரணமாகும். இதையெல்லாம் சரிசெய்ய அமெரிக்க அதிபரைக்கூட இந்த பெரும் முதலாளிகள் அனுமதிக்கப்போவதில்லை.

பராக் ஒபாமா விரும்பினால் தன் நாட்டில் இருந்தே இச்சீர் திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும். அதை விட்டு ஏமாற்றப்படும் மக்களையே எல்லாவற்றையும் மறந்து சகோதரர்களாக இருக்க அழைப்பது என்பது அதி புத்திசாலியின் கோமாளித்தனம் என்பதற்கப்பால் வேறு ஒன்றுமில்லை.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil