இலங்கை அதிபரின் மனைவியும், மகனும் யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம்
இலங்கை அதிபர் ராஜபட்சயவின் மனைவியும் மகனும் இன்று திடீரென யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள புத்த மத ஆலயத்தில் நிறுவுவதற்காக சங்கமித்ரா என்னும் பெண் துறவியின் உருவச் சிலையையும் அவர்கள் தங்களுடன் கொண்டு வந்தனர். (இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற சங்கமித்ரா முதலில் மாத்தக்கல் பகுதியில் தான் கால் பதித்தார் என்று நம்பப்படுகிறது. இவர் அசோகரின் மகள் மற்றும் புத்த மதத்தின் முதல் பெண் துறவி என்பது குறிப்பிடத்தக்கது.)
இன்று அதிகாலை அவர்கள் பலாலி விமான நிலையத்திற்கு கடும் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மாத்தக்கல் பகுதிக்குச் சென்றனர்
தமிழ் இளையோர்கள் அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் வவுனியா முகாம்களில் இருந்து அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். சிங்கள கிராமங்களுக்கு நடுவில் திறந்த வெளிச் சிறைச்சாலைகள் அமைத்து, அங்கு சிறீலங்கா படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்களை அடைத்து வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்கு தமிழ் இளையோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான இடத்தை தெரிவு செய்யும் செயற்பாட்டிலும், சிறிய குடிசைகள் அமைப்பதற்கும், தொண்டு நிறுவனங்களின் உதவியை சிறீலங்கா அரசு நாடியுள்ளது. அநுராதபுரம் கெப்பற்றிக்கொலாவ பகுதியில், முகாம் ஒன்றில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த சிறுவர்கள் ஏற்கனவே தனியாகத் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களிற்கான நன்கொடைகளை அபகரிக்கும் துணைப்படைக் குழுக்கள்
தடுப்பு முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களிற்கான தனியார், மற்றும் மனிதநேய அமைப்புக்களின் நன்கொடைகளை அபகரிக்கும் துணைப்படைக் குழுக்கள், அவற்றை அதே மக்களிடம் விற்பனை செய்து வருகின்றன.
வவுனியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி மற்றும் புளொட் போன்றன இதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. உலர் உணவுகள், கல்வி உபகரணங்கள், மற்றும் அத்தியாவசிப் பொருள்களை அபகரித்துள்ள துணைப்படைக் குழுக்கள், அவற்றை தடுப்பு முகாமிற்குள்ளேயே பணத்துக்கு விற்பனை செய்து வருகின்றன.
அத்துடன், சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான பொருள்கள் வவுனியா நகரிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்துள்ளன.
கச்சதீவில் நிரந்த கடற்படை மற்றும் இராணுவ தளத்தை சிறிலங்கா அமைக்கிறது - தமிழக மீனவர்கள் தகவல்
கச்சத்தீவில் நிரந்தர ,ராணுவம் மற்றும் கடற்படை முகாமை அமைக்க சிறிலங்கா முயன்று வருவதாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, அந்நாட்டு கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பில் 25 தமிழ் இளைஞர்கள் கைது
நேற்று புதன்கிழமை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 25 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்கள் வடக்கு , கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் வெற்றிவிழா கொண்டாட்டங்களை அடுத்து பாது காப்பு ஏற்பாடுகள் அதிதீவிரப்படுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
சிறீலங்கா தடுப்பு முகாம்களில் 13000 பேர் காணாமல் போயுள்ளனர்: ஐநா அறிக்கை
ஐநாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இடம்பெயர்ந்து சிறீலங்காவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களில் 13000 பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாக இன்னசிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment