ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, June 3, 2009


கருணா அம்மானும் கருணாநிதியும்

கருணாநிதியின் புதிய வாரிசு

வில்லங்கம் எப்படி எங்கிருந்தெல்லாம் வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்படியொரு இக்கட்டான நிலை தான் கலைஞருக்கு வந்திருக்கின்றது. ஏற்கனவே கலைஞர் மீதுள்ள ஈழத்தமிழ் மக்களின் கோபம் பொங்கிக் கொதித்துக் கொண்டிருக்கின்றது. துரோகி கருணாவின் பெயருடன் கலைஞரின் பெயரும் சேர்த்து அரசல்புரசலாக உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிலையில் தன் தலைவர் கருணாநிதிதான் என்று கருணா எம்டி டிவிக்கு சொல்லப்போக கோபம் எரிமலையாக சீறிக்கிளம்பியிருக்கின்றது.

தமிழ் மக்கள் துரோகிகள் என்று தூற்றிக்கொண்டிருக்க சிங்களவர் கருணாநிதியை அடுத்த "வில்லன்" என்ற ரீதியில் விமர்சிக்க புறப்பட்டிருக்கின்றார்கள். இது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் ஸ்டண்ட் என்று இனங்கண்டு கொண்டாலும் சந்தேகக் கண் கொண்டும் நோக்கத் தவறவில்லை.

"இப்படித்தான் 1972 இல் இலங்கை அரசியல் அமைப்பு மாற்றப்படுகையில் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் படையெடுத்துச் சென்று பின்னர் டில்லி மூலம் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு நிகழ்ந்தது .." என்ற ரீதியில் ஆதி அனாதிக்கதைகளை நினைவு கூர்ந்து தங்கள் சந்தேகத்திற்கு வலுச் சேர்க்கின்றார்கள்.

86 வயதில் அடித்தது யோகம். தமிழ்நாடு முதலமைச்சர் பிளஸ் தமிழீழ போராட்டத் தலைவன். இனியென்ன ஆமி யூனிபோமும் தொப்பியும் இடுப்புப்பட்டையில் ரிவால்வருடன் புதிய தோற்றத்தில் கலைஞர் பட்டையைக் கிளப்பப் போகின்றார். ஜெயலலிதா என்றால் சும்ம பிச்சு உதறிவிடுவார். அவர் ஏற்கனவே "ரிவால்வர் ரீட்டாவோ... கன்பைட் காஞ்சனாவோ" ஏதோவொரு படத்தில் நடித்த அனுபவம் உள்ளவர்.

கலைஞருக்கு தமிழ் மன்னர்கள் போல் வாள் வேல் அம்பு இத்தியாதிதான் மிகப் பொருத்தமாயிருக்கும். விரும்பியோ விரும்பாமலோ புதிய ஒரு பதவி கலைஞரைத் தேடி வந்திருக்கின்றது. ராஜபக்ஷேயை அடக்க முடியாவிட்டாலும் ஆட்சியில் பங்கு கேட்கும் தங்கபாலு வகையறாக்களின் வாலை ஒட்ட நறுக்கவாவது இது உதவும்.

1977 இல் தனித் தமிழீழக் கோரிக்கையுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி கொண்ட பெருமிதத்தில் ஆளுக்கு ஒன்றாக உருவாக்கப்பட்ட இளைஞர் படைகள் ஆதரவைத் தேடி தமிழ்நாட்டிற்குச் சென்றபோது இதே கருணாநிதியும் எம்.ஜி.ஆருமே அவர்களை ஊட்டி வளர்த்தவர்கள் என்ற வெறுப்பு சிங்களவர் மனதில் இருந்து இன்னும் மறையவில்லை.

தமிழகத் தலைவர்களின் அரசியல் சித்து விளையாட்டுகளைக் கூட சந்தேகிக்க முடியாது அப்பிராணிகளாய் இருந்து இத்தனை இலட்சம் தமிழர்கள் சாம்பலோடு சாம்பலாய்ப் போன பின்னரும் அந்தப்பழி சிங்களவன் வார்த்தைகளில் தொடர்வது தமிழரின் சாபக்கேடே. கருணாநிதியை யோசனை கேட்டு இந்தியாவை நம்பி இன்னுமொரு சாம்பல் மேட்டை உருவாக்குவதற்கு கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படும் சம்பந்தன் வகைக் கூட்டணிக்காரரும் புலிகளின் மிச்சச் சத்தமாக உலவும் பத்மநாதனும் உதிரித் தொங்கல்களாக தொங்கிக்கொண்டிருக்கும் கருணா,டக்ளஸ் வகையறாக்களும் தமிழர்களின் தலைவர்களாய் உலா வருவது தமிழரின் கஷ்டகாலம் இன்னும் முடியவில்லை என்பதைத் தான் உணர்த்தி நிற்கின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil