ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 1, 2009


ஐ.நா.வில் நடந்த மனித உரிமை படுகொலை!



சுதந்திரத்தையும், சம உரிமையையும் கோரிப் போராடிய தனது நாட்டு மக்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியும், விமானத்தில் இருந்து குண்டு வீசியும், பெரு நாசம் ஏற்படுத்தும் குண்டுகளை வீசியும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்று குவித்த சிறிலங்க அரசிற்கு மனித உரிமைகளை மேம்படுத்தவும் காப்பாற்றவும் உதவுவோம் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உலகையே ஒரு அதிர்ச்சி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஐ.நா. மனித உரிமை மன்றம்!

21ஆம் நூற்றாண்டில், உலகின் 200க்கும் மேற்பட்ட சுதந்திர நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. அமைப்பில் மனித உரிமைக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை ஐ.நா.மனித உரிமை மன்றம் சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானம் மட்டுமே சாட்சியல்ல, அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பேச்சும் அதற்கு அத்தாட்சியாகும்.

“விடுதலைப் புலகளுக்கு எதிரான போரை முடித்துவிட்டோம்” என்று கடந்த 18ஆம் தேதி திங்கட்கிழமை சிறிலங்க இராணுவம் அறிவித்த போதே அது எப்படி முடிக்கப்பட்டது என்பது குறித்து உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி தெரிவித்தன.

வன்னிப் பகுதியில் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 2 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்ட நிலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தஞ்சமடைந்திருந்த 55,000க்கும் அதிகமான மக்களை சக்தி வாய்ந்த குண்டுகள் வீசி அழித்தொழித்துவிட்டு, விடுதலைப் புலி பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று கூறியது சிறிலங்க இராணுவம்.

மறுநாள் அதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச. போரை முடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட அந்தக் கணத்தில் இருந்து, இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் அந்த இடத்தில் இருந்து இதுநாள்வரை ஒரு செய்தியும் உலகத்திற்கு வரவில்லை. சொல்வதற்கு அங்கு சிறிலங்க இராணுவத்தைத் தவிர ஒரு மனிதரைக் கூட விட்டு வைக்கவில்லை. அப்படிப்பட்ட அப்பட்டமான மனிதப் படுகொலை ஒரு சில ஜனநாயக, அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் கன கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.

அந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்த பிறகுதான் சிறிலங்க அரசிற்கு எதிராக போர் குற்றம் புரிந்ததாகவும், இனப் படுகொலை நடத்தியதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாற்றுகள் எழுந்தன.

அங்கு நடந்த கோரப் படுகொலையை அமெரிக்கா, ஐ.நா. செயற்கைக் கோள்கள் படம் பிடித்ததாக செய்திகள் வரத் தொடங்கிய பிறகுதான் போர் குற்றத்திற்காக சிறிலங்கா அரசை பொறுப்பாக்க அங்கு பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.
ளடட்ர்ற்ர்ன


இதனைத் தொடர்ந்தே ஐ.நா. மனித உரிமை மன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அதன் 47 உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியும், அதோடு மேலும் 15 நாடுகளும் கோரிக்கை விடுத்தன்.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும். அதன்படி, கடந்த 26ஆம் தேதி செவ்வாய் கிழமை ஜெனிவாவில் அச்சிறப்புக் கூட்டம் கூடியது உலகத் தமிழர்கள் மத்தியிலும், அவர்களின் போராட்டத்தின் காரணமாக இலங்கை இனச் சிக்கல் குறித்து விழுப்புணர்வு பெற்ற ஐரோப்பிய நாட்டினரிடையேயும் ஏற்பட்டது. இதனிடையே வன்னியில் அப்பாவி மக்கள் தஞ்சமடைந்துள்ள பாதுகாப்பு வலயப் பகுதி மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று அளித்த உறுதி மொழியைத் தாண்டி, பொது மக்களை குறிவைத்து சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியதற்கான செயற்கைக் கோள் படங்கள் (ஐ.நா.வின் செயற்கைக் கோள் எடுத்தது) ஊடகங்களில் வந்தது.

இந்தப் பின்னணியில் கூடிய ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், அதற்குக் கோரிக்கை விடுத்த நாடுகளின் (Special procedures mandate holders) சார்பாக சுவிட்சர்லாந்து முன்மொழிந்த தீர்மானம் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இறுதிப் போர் நடந்தபோது அதில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எத்தனை ஆயிரம் பேர் என்றோ, காயமுற்றவர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்றோ, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்தோ அல்லது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி மே 18ஆம் தேதி காலையில் நடத்திய மனிதப் படுகொலை குறித்தோ அல்லது அன்று நடந்த போர் குற்றம் குறித்தோ அந்தத் தீர்மானத்தில் ஏதும் இல்லை.

மாறாக, போர் முடிவிற்கு வந்ததற்காக சிறிலங்க அரசிற்கு பாராட்டும், பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று விடுதலைப் புலிகளின் மீது குற்றச்சாற்றும்தான் இருந்தது.

அதைவிட வேடிக்கை என்னவெனில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் போர் விதிகள் மீறலோ அல்லது மனித உரிமை மீறலோ நடந்ததாக வரும் குற்றச் சாற்றுகள் மீது சிறிலங்க அரசே விசாரணை நடத்தி அதற்குக் காரணமானவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தின் 12வது கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தது।


போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த சிறிலங்க அரசே அதற்குக் காரணமானவர்களை விசாரணை நடத்தி கண்டுபிடித்து (!) பொறுப்பாக்க வேண்டுமாம்! எப்படியிருக்கிறது நாடகம்!

சிறிலங்க அரசே தன் மீது விசாரணை நடத்திக் கொள்ள எதற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தை சிறப்பாக கூட்ட வேண்டும்?

சுவிட்சர்லாந்து முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை படித்த அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் பிராண்சிஸ் பாய்ல் (இவர் சர்வதேச, மனித உரிமை சட்டங்களில் வல்லுனர்), “இப்படிப்பட்ட கொள்கையற்ற, வெட்கமில்லாத ஒரு தீர்மானத்தை ஐ.நா.வின் எந்த ஒரு அமைப்பும் அதன் வரலாற்றில் நிறைவேற்றியதில்லை” என்று கூறிவிட்டு, “இரண்டாவது உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலை தொடர்பாக ஹிட்லரே விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தால் அது எவ்வளவு பெரிய பித்தலாட்டமாக இருந்திருக்குமோ அதுவே இங்கு நடைபெறுகிறது” என்றும் விமர்ச்சித்தவர் ஜெனிவாவிலிருந்தே வெளியேறினார்.

ஆயினும் இந்த அளவிற்கு சிறிலங்க அரசை குற்றம் சாற்றாத ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற விடாமல் தோற்கடித்த இந்திய, சீன, இரஷ்ய நாடுகள், சிறிலங்கா தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு முன்மொழிந்த ஒரு தீர்மானத்தை மிகவும் பாராட்டி அதனை 29க்கு 12 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றின.

இந்த இரு தீர்மானங்களின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பேச்சு, இவர்கள் பிரச்சனைகளை புரிந்துதான் பேசுகிறார்களே அல்லது இவையாவும் முன் திட்டமிடப்பட்ட நாடகமா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.

“இக்கூட்டத்தில் தனது நாட்டு அமைச்சரையே பங்கேற்கச் செய்ததன் மூலம் மனித உரிமை காப்பதில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டினை சிறிலங்க அரசு மெய்பித்துள்ளது” என்று பல நாடுகள் பாராட்டின.

இந்த சிறப்புக் கூட்டத்தைத் துவக்கிவைத்து (வீடியோ காண்பரன்சிங் மூலம்) உரையாற்றிய ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, “கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து அங்கு நடந்த கடும் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர், காயமுற்றுள்ளனர் அல்லது இடம் பெயரச் செய்யப்பட்டுள்ளனர். போர் பகுதியில் இருந்து வெளியேறிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் முகத்தில் தெரிந்த அச்சமும், சக்தி முழுவதையும் இழந்த நிலையும் நமது நினைவுகளை விட்டு நீங்காதவை, அந்த காட்சிகள் நம்மை என்ன செய்ய வேண்டுமோ அதனை நோக்கி நம்மைத் தள்ளட்டும்” என்று கூறியவர், இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினரும் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளில் அத்துமீறியுள்ளார்கள் என்று நம்புவதற்கு இடமளிக்கிறது. எனவே, சுதந்திரமான ஒரு பன்னாட்டு புலனாய்வை நடத்தி மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு பொறுப்பாக்க வேண்டு்ம்” என்று பேசினார்.

ஆனால், இப்படி எந்த ஒரு நாட்டின் பிரதிநிதியும் பேசவில்லை. நவி பிள்ளை பேசியது போல் அப்படியெல்லாம் இலங்கையில் ஏதும் நடக்கவில்லை என்று நம்பியவர்களைப் போலவே பேசினர்.

இன்றுள்ள நிலையில் சிறிலங்க அரசிற்கு உரிய உதவிகளைச் செய்து அது சந்தித்துவரும் அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிட வேண்டுமே தவிர, இந்தச் சிறப்புக் கூட்டமெல்லாம் தேவையற்றது என்று இந்தியாவின் பிரதிநிதி பேசினார்!

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைக்கு அனைத்து உதவிகளையும் செய்த நாடுகளான இந்தியாவும், சீனாவும், இரஷ்யாவும் தங்களுடைய பன்னாட்டு நட்பு நாடுகளை ஆதரவாக்கிக் கொண்டு, மனித உரிமைகளையும், நாகரீக நடைமுறைகளையும் துவம்சம் செய்துவரும் சிறிலங்க அரசிற்கு மனித உரிமை காப்பாளர் என்ற நற்சான்றிதழை பெற்றுத் தருவதில் வெற்றி பெற்றுள்ளன.

இந்தச் சிறப்புக் கூட்டம் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்யத் தவறியது, மானுடத்தின் உன்னத மாண்புகளை ஆழ குழிதோண்டி புதைத்த ஒரு அரசை தங்கள் நட்புறவைக் கொண்டு காப்பாற்றி விட்டுள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு நடந்த ஒரு மாபெரும் மனிதப் படுகொலையை மறைக்கும் முயற்சியில் இந்த நாடுகள் வெற்றி பெற்றதாகக் கருதலாம். ஆனால் அவர்களின் இந்த மானுட துரோகம் ஒரு நாள் தலையெடுக்கும்.

இரத்தத்தோடு புதைக்கப்பட்ட உண்மை எதுவும் சாவதில்லை, மீண்டும் எழும்।

நன்றி: வெப்துனியா

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil