ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Thursday, June 25, 2009
எல்லைகள் கடந்த தமிழீழ அரசும் உடைபடாத பொய்களும்
நான்காம் கட்ட ஈழப்போர் முடிவடைந்த நிலையில் எல்லைகள் கடந்த ஈழ அரசு நிறுவுவது பற்றி புலிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர். சொந்த மண்ணில் நடத்தமுடியாத போராட்டத்தை வேற்று மண்ணில் இருந்து நடாத்தும் திட்டமே இது. ஆனாலும் சொந்த மண்ணிலிருந்து நடாத்தும் போராட்டத்தை விட இது சிக்கலானது. இவ்வகையான அரசு ஒன்றைத் தன் மண்ணில் அமைப்பதற்கு சுதந்திரமான நாடு ஒன்றின் ஆதரவு வேண்டும்.
பாதிக்கப்படும் இனத்தின் ஆதரவாளர்களாகவோ அல்லது பாதிப்பை வழங்கும் நாட்டின் எதிராளியாகவோ கூட இந்த அனுமதி வழங்கும் நாடு இருக்கலாம். தொடர்ந்த அனுமதியழிக்கும் நட்பு நாடாகவும் இருக்கலாம். தமிழினம் சார்பாக நாடுகடந்த அரசினை அமைக்க முயற்சிகள் எடுப்பவர்கள் புலிகள்.
சொந்த மண்ணில் வலிமையாக இருந்து போராட்டம் நடாத்தி சர்வதேசத்தின் எந்தவொரு நாட்டின் வெளிப்படையான ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியாது வெளிப்படையான பகமையைச் சம்பாதித்து தமது போராட்டத்தில் இருந்து தோற்கடிக்கப்பட்டவர்கள் இவர்கள்.சர்வதேச சமூகத்தின் எந்தவொரு அனுதாபத்தையும் கடந்த 25 வருடங்களாகப் பெறமுடியாது தோற்கடிக்கப்பட்டவர்கள்.
இன்று அவர்களின் பெயரிலேயே எடுக்கப்படும் முயற்சி ஒரு வீண் வேலை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் ... ஆகவே அவர்களின் மீதான தடை அகற்றப்படவேண்டும் என்ற கோஷம் அண்மைக்காலமாக வலுப்பெற்றுக் காணப்பட்டிருந்தது. இது ஒரு வகை இராஜதந்திர உத்தியாகக் கூட சில புலி ஆதரவாளர்களால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இது ஒரு இராஜதந்திரம் என்றால் உங்கள் இராஜதந்திரம் ஒரு போதும் எடுபடப்போவதில்லை. புலிகள் மீதான தடையை, புலிகளிடம் ஜனநாயக ரீதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படும் வரை தடைவிதித்திருக்கும் எந்தவொரு நாடும் எடுக்கப்போவதில்லை. நீங்கள் கூறுவதைப்போலவே தடையை நீக்கினாலும் உங்கள் நடவடிக்கைகளில் போதியளவு ஜனநாயகக் கூறுகள் வெளிப்படாதவிடத்து மீண்டும் தடையைப்போடுவதில் எந்தத் தாமதமும் அந்நாடுகளுக்கு இருக்கப்போவதில்லை. ஆகவே தடையை எடுப்பதோ போடுவதோ இங்கு உடனடி தேவையில்லை.தேவை, உட்கட்டுமானத்தில் ஜனநாயக நீரோட்டம்.
உங்கள் உட்கட்டுமானத்திலும் ஜனநாயகப்பங்களிப்பிலும் மாற்றங்கள் ஏற்படாதவிடத்து உங்களைத் தலையெடுக்க விடாதபடிக்கு மிகக் கவனமாகவே இந்நாடுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கும். அந்தத் தேவை அவற்றிற்கு என்றும் இருந்து கொண்டிருக்கும். ஒபாமாவின் ஆட்சி மாற்றமும் கிளாரி கிளிண்டனின் தமிழ் மக்கள் சார்பு பேச்சுக்களும் உங்கள் மனங்களில் சில சபலங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவர்களின் நெகிழ்வுப் போக்கு தமிழ் மக்கள் சார்பானதேயொழிய புலிகள் சார்பானது அல்ல. இரண்டுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கின்றது. சர்வதேசத்தின் தமிழ் மக்கள் மீதான இரக்கத்தை அரசியலாக்கி உரிமைகளை வென்றெடுக்க புலிகள் இப்போது பொருத்தமானவர்கள் அல்ல என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகும். அதனையே அண்மைய அமெரிக்காவின் புலிகள் மீதான 5 வருட தொடர்ச்சியான தடை நீடிப்பும் எல்லைகள் கடந்த தமிழீழ அரசை அமைக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்ற எரிச்சல் மிகுந்த பதிலும் வெளிப்படுத்துகின்றது.
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் ..ஆகவே தடையை நீக்குங்கள் என்ற வாதம் எவ்வளவு பொய்மையானது என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள். அழிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு தடை நீக்கம் ஏன் ? என்பதை இந்த இராஜதந்திரவாதிகள் சொல்ல வேண்டும்.
அமெரிக்கா செய்ததையே பிரித்தானியா மற்று ஐரோப்பிய நாடுகளும் தொடர்ச்சியாகச் செய்யும். நாடுகடந்த அரசை புலிகள் அமைக்க இந்த நாடுகள் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. அப்படியே ஒரு பெயர் தெரியாத நாடு அனுமதி வழங்கினாலும் புலிகளின் சார்பிலான தமிழீழ அரசின் பிரதிநிதிகளை இந்த நாடுகள் என்றும் ஏர்றுக்கொள்ளப்போவதில்லை.
சர்வதேச சமூகம் மதிக்கும் அமைப்புக்களிலும் நாடுகளிலும் எல்லைகள் கடந்த அரசின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்காமல் தமிழ் மக்களுக்கான எந்த உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியாது.கடந்த 25 வருடங்களில் பெற்றுக்கொள்ள முடியாத ஆதரவை இனிப்புலிகளால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற சர்வதேச நம்பிக்கை துளிக்கூட கிடையாத படிக்கு சர்வதேசத்தின் மனநிலை இருந்து கொண்டிருக்கின்றது.
நிலமை இப்படியிருக்க போகாத ஊருக்கு வழிதேடி இன்னும் தமிழ் மக்களின் போராட்டக் காலத்தை வீணடிப்பதில் என்ன நன்மை கிடைத்து விடப்போகின்றது. தமிழீழப் போராட்டத்தில் புலிகளின் காலம் கடந்து விட்டது என்பதைத்தான் நகரும் உலகப்போக்கு விளக்கி நிற்கின்றது.
புலிகளின் பாசறையில் தொடர்பல்லாத நீதிக்கும் ஜனநாயகத்திற்குமான ஒரு அமைப்பையே சர்வதேசம் இன்று தமிழ் மக்களிடம் இருந்து எதிர்பார்த்து நிற்கின்றது.இந்த சின்ன உண்மையைப் புலிகள் விளங்கிக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் அவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.
இன்று அடைபட்ட முகாமிலும் அகதிகளாக வெளியிலும் அலையும் அனைத்துத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் இதுவாகத் தான் இருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
I do agree with this.
Post a Comment