ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, June 7, 2009


புலிகளின் தலைமையைத் தவறாக வழி நடாத்தியது யார்?


இன்று புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டிருப்பது மாறாத ஆச்சரியத்தை உண்டுபண்ணியிருக்கின்றது. வெல்லவே முடியாத மனிதர் என்று புலி ஆதரவாளர்களால் அதீத புகழ்ச்சிக்குரியவராக கணிக்கப்பட்டவராக பிரபாகரன் இருந்தாலும் கொரிலா போர் முறையிலாகட்டும் மரபு வழி போர் முறையிலாகட்டும் குறிப்பிடத்தக்க தேர்ச்சியும் செயற் திறமும் கொண்டவராகவே அவர் இனங்காணப்பட்டிருந்தார். நீண்ட 20 வருடங்களுக்கு மேலான இரண்டு தேசிய இராணுவங்களுக்கு எதிரான துல்லியமான போரியல் அனுபவங்களைப் பெற்றிருந்தார். இவையெல்லாம் இருந்தும் இன்று நடந்திருக்கும் போரில் அவர் கொல்லப்படும் நிலைக்கு இட்டு வந்ததில் அக புறகாரணிகள் இருக்கலாம் என்று பலரின் மனதில் சந்தேகம் தோன்றியிருக்கின்றது.

எவ்வாறு இவ்வாறான தவறான வழிகாட்டலுக்கு உள்ளானார் ? ஏன் என்பதை அறிந்து கொள்ள தமிழ்த் தேசியப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் துடியாய்த் துடிக்கின்றார்கள். நடை பெற்ற சம்பவங்கள் பலரையும் சந்தேகத்துடன் பார்க்கவே வழி வகுக்கின்றது.

பரந்தன் கிளிநொச்சி ஆனையிறவு குறிப்பாகச் சொன்னால் ஏ -9 நெர்டுஞ்சாலையின் மேற்குப்பகுதி முழுவதும் சிங்கள இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு ஏ-9 பாதயின் கிழக்குப்பகுதியில் புலிகளும் இலட்சக்கணக்கான மக்களும் ஒதுக்கப்பட்டவுடனேயே புலிகளின் தலைமை சுதாகரித்துக் கொண்டிருக்க வேண்டும். நிலமையின் தீவிரத்தை சரியாக விளங்க முடியாது போனதற்கு காரணங்கள் என்ன?

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் புலம் பெயர்ந்த நாடுகளின் மக்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் புலிகளின் ஆதரவு தமிழகத் தலைவர்களால் தமிழகத்திலும் போராட்டம் கொதி நிலையை அடைந்தது. இந்த வேளையில் அதிகரித்துச் செல்லும் பொது மக்களின் இழப்பு என்பதே புலிகளிடம் இருந்த ஒரேயொரு துருப்புச் சீட்டாகும்.

பொதுமக்களின் இழப்பின் காரணமாக வரக்கூடிய உலக நாடுகளின் அழுத்தத்தால் யுத்த நிறுத்தம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையை யாரோ கண்மூடித்தனமாக கொடுத்திருக்கின்றார்கள். இது நடக்கும் நடக்காது என்ற 50க்கு 50% வீத நிகழ்தகவைக் கொண்டிருந்தது. அதன் மேல் புலிகளின் தலைமையை முழு நம்பிக்கை வைக்கத் தூண்டியவர்கள் யாராயிருந்தாலும் அவர்களே இந்தத் தோல்வியின் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இவை இரண்டு புறக்காரணிகள் என்றால் இரண்டு அகக்காரணிகள், ஒன்று புலிகள் தங்கள் திறமையின் மீது வைத்த நம்பிக்கை, இரண்டு அதிக அளவில் இழப்புகளை ஏற்படுத்தும் போது சிங்களப்படை முன்னேறாது முடங்கி விடும் என்று சிங்களப்படையின் பலவீனத்தில் வைக்கப்பட்ட நம்பிக்கை.

ஏ-9 நெடுஞ்சாலை படைகள் வசம் வீழ்ந்த போது முல்லைதீவு மாவட்டம் முழுவதுமான 350-400 சதுர கிலோமீற்றராக இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் படையினரின் விரைந்த நடவடிக்கைகளால் வேகமாகச் சுருங்கத் தொடங்கியபோதும் ஏற்பட்ட அதிக அளவிலான மக்கள் இழப்பினாலும் ஏற்படும் என்று நம்பியிருந்த பிறநாடுகளின் தலையீடோ புறச்சூழல் மாற்றங்களோ ஏற்படாதவேளையிலேயே புலிகள் நெருங்கி வரும் அபாயத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அச்சந்தர்ப்பத்திலேயே புலிகளின் தலைமையும் மற்றவர்களும் மணலாறு -வன்னிக் காடுகளுக்குள் பின்வாங்கியோ கடல்வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தப்பியோடியோ செய்திருக்க வேண்டும். மாறாக புதுக்குடியிருப்பு நகருக்குப் பின்வாங்கியமை புலிகள் விட்ட மிகப்பெரும் தவறாகும். அதனையும் புலிகளின் புதிய தந்திரம் என்று பரபரப்புச் செய்திகளை கட்டவிழ்த்து விட்ட புலி ஆதரவாளர்களின் மடமையை என்னவென்று சொல்வது. சாள்ஸ் ஆண்டனி படை இன்னும் இறக்கப்படவில்லை இம்ரான் படையணி பாவிக்கப்படவில்லை என்று வீரப்பிரதாபக் கதைகளையும் கட்டவிழ்த்து விட்ட இவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கும் இவ்விழப்பில் மிகப்பெரும் பங்கிருக்கின்றது.

கடைசி கடைசியாக ஆனந்தபுரத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்த தடையினை அகற்றி 623 புலிவீரர்களைக்கொன்று கேணல் தீபனையும் கொன்று சிங்களப்படை முன்னேறிய கணமே புலித்தலைமைக்கு இருந்த இறுதிச் சந்தர்ப்பமாகும். ஆனாலும் அது 99% ஆபத்துடன் கூடியதே.

என்ன ஆச்சரியம் என்றால் இத்தனை சிறப்புடன் இதுவரை காலமும் செயற்பட்ட புலிகளின் தலைமை முட்டாள்தனமான நம்பிக்கையற்ற இத்தகைய ஆலோசனைகளையெல்லாம் கேட்டு கொண்டு அங்கு எப்படியிருந்தது என்பதுதான்.

இதில் பங்கேற்ற வெளிநாட்டுச் சக்தியொன்றும் தலைமையுடனான தகவல் தொடர்பாளர்களும் தொடர்ந்தும் பிழையான தகவல்களை நம்பக்கூடிய வகையில் கொடுத்துக் கொண்டிருந்ததே காரணம் என நம்பப்படுகின்றது. அதனைப் புரிந்து கொண்டு தங்களையும் தங்கள் தலைவரையும் காத்துக் கொள்ள முடியாத கூட்டத்தால் இறுதி நேரத்தில் சூழப்பட்டிருந்தார் என்பதே வேதனை. புலிகளின் இந்த மந்தமான போக்கினாலேயே அதிகரித்த மக்கள் இழப்பும் ஏற்பட்டிருந்தது.

இந்திய ஐ.நாட்டு அதிகாரி விஜயநம்பியார் போன்றோரின் தொடர்புகளும் புலிகளை இறுதி நேரத்தில் திட்டமிட்ட வகையில் பிழையாக வழிநடாத்தியிருக்கக் கூடும். அது சம்பந்தமான விசாரணைகளை ஊக்குவிப்பதன் மூலமே இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்திற்கு வரும். சரணடைந்தபின் சித்திரவதை செய்து கொல்லப்படுவது என்பது சர்வதேசப்போர்க் குற்றமாகும்.புலித்தலைவரின் இறுதி நேரப்படங்கள் அவ்வாறான ஒரு கொடூரம் நடைபெற்றிருப்பதையே வெளிக்காட்டுகின்றது.

தமிழ் மக்களுக்கெதிரான சிங்களப்பேரினவாதத்தின் கொடூரங்களை வெளிக்கொணர எடுக்கும் நடவடிக்கைகளின் மூலமே தொடர்ந்து எடுக்கப்படக்கூடிய விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தை இட்டுக்கொள்ளலாம் என்பதை அனைத்துத் தமிழர்களும் நினைவிருத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil