ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, June 5, 2009


தினமணி தலையங்கமும் இந்திய அராஜகமும்

தினமணி தலையங்கத்தில் பாகிஸ்தான் பற்றிக் கதை விட்டிருக்கின்றது. ஊரறிந்த துட்டப்பிள்ளை பாகிஸ்தான் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கின்றது. அதே கதையோடு இன்று இந்தியாவின் அராஜக முகமும் ஒத்துப் போகின்றதே. ஏன் இந்தியாவை வைத்து ஒரு தலையங்கம் தீட்டக் கூடாது. தினமணிக்கு அந்த சிரமமும் வைக்காது நானே அதை எழுதித் தருகின்றேன். பிரசுரிக்க செய்வீர்களா? முள்ளந்தண்டுள்ள பத்திரிகை ஜாம்பவான் என்று நிரூபிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம்.இதோ .."உங்கள் பிள்ளைகளில் நல்ல பிள்ளை யார்?' என்றால், "அதோ அங்கே கூரைக்கு தீ வைக்க கொள்ளிக்கட்டையோடு நிற்கிறானே அவன் தான்' என்று சொன்ன கதையாக இருக்கிறது பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தவா தலைவர் முகமது சய்யீத் விடுதலையாகியிருப்பது!

"உங்கள் அடியாட்களில் நல்ல பிள்ளை யார் ? என்றால், "அதோ அங்கே தமிழர் பிணங்களுக்கு தீ வைக்க கொள்ளிக்கட்டையோடு நிற்கிறானே அவன் தான்" என்று சொன்ன கதையாக இருக்கின்றது ஐ.நாவில் இலங்கையை இந்தியா காப்பாற்றியிருப்பது !


லஷ்கர்-இ-தொய்பா ஒரு தீவிரவாத இயக்கம் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்கும் தாய் அமைப்பாக இருப்பது ஜமாத்-உத்-தவா என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் தலைவர் ஹஃபீஸ் முகமது சய்யீத் மட்டும் தீவிரவாதி அல்ல என்று சொல்ல முடியும் என்றால், அதை பாகிஸ்தான் தவிர யாராலும் கூச்சமின்றி சொல்லுதல் இயலாது.

இலங்கை ஒரு மனிதப்படுகொலை செய்த நாடு என்பது உலகம் முழுவது தெரிந்த விஷயம். இந்த நாட்டிற்கு நிதியுதவியும் ஆயுத உதவியும் வழங்கிய தாய் அமைப்பாக இருப்பது இந்தியா.அனால் இலங்கை மனித உரிமை மீறலைச் செய்யவில்லை என்று சொல்ல முடியும் என்றால், அதை இந்தியா தவிர யாராலும் கூச்சமின்றி சொல்லுதல் இயலாது.

முகமது சய்யீத் மீது போதுமான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த விதமான ஆதாரத்தையும் அளிப்பதற்கு பாகிஸ்தான் அரசு இதுநாள்வரையிலும் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதுதான், வீட்டுக்காவலில் இருந்த அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு ஒரேயொரு காரணம்.

இலங்கை மீது போதுமான குற்றச்சாட்டை நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் இருந்தும் பல நாடுகள் முயற்சி செய்தும் இந்தியா இலங்கையைப் பாதுகாக்க முற்படுவது தான் இலங்கை தப்பிப்பிழைப்பதற்கு ஒரேயொரு காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், ஏற்கெனவே ஜமாத்-உத்- தவா அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்திருக்கிறது. மும்பை தாக்குதல் நடைபெற்றபோது, அதற்கு மூளையாக இருந்தது இந்த அமைப்புதான் என்று அமெரிக்காவும் வெளிப்படையாக உலகுக்கு அறிவித்தது. எல்லாருக்கும் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பு என்று தெரிகிறது. ஆனால் அத்தகைய ஒரு அமைப்பின் தலைவருக்கு எதிராக ஒரேயொரு ஆவணத்தைக்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பாகிஸ்தானால் முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்களுக்கு மனமில்லை என்பதாகத்தான் இருக்க முடியும்.
தொடக்கத்திலிருந்தே, இந்தியாவுக்கு எந்த வகையிலும் உதவிடக்கூடாது என்பதுதான் பாகிஸ்தான் அரசின் முதல் நோக்கமாக இருந்துவருகிறது. மும்பைத் தாக்குதல் நடைபெற்று, செல்போன் மூலம் அவர்கள் பேசிய இடங்களை அறிந்த பிறகுதான், தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அதை பாகிஸ்தான் மறுத்தது.


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், ஏற்கெனவே இலங்கை மீதான மனிதவுரிமை அத்துமீறல் தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டது.இலங்கையில் மனிதவுரிமை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது என்று சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கண்காணிப்பு அமைப்புகளும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருக்கின்றன.ஆனால் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது இந்தியா இலங்கையைக் காப்பாற்ற அடம் பிடித்து நிற்பதால்தான் இலங்கையைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியாது இருக்கின்றது. தொடக்கத்திலிருந்தே இலங்கையைக் காப்பாற்றி விடவேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருக்கின்றது.அப்படியல்லாவிடின் தடைசெய்யப்பட்ட இரசாயன மற்றும் கொத்துக் குண்டுகளை விநியோகம் செய்தது இந்தியாவே என்பது அம்பலமாகி விடும் என்று இந்தியா அஞ்சுகின்றது.

அதிர்ஷ்டவசமாக உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாபுவின் சொந்த கிராமம் பற்றிய விவரங்களை இந்திய அரசு வெளியிட, ஊடகங்கள் அவரது கிராமத்துக்குச் சென்று உறுதிப்படுத்தியபோதும்கூட, பாகிஸ்தான் அரசு ஏற்காமல் மறுத்துவந்தது. அதன்பிறகு போதுமான ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றது. எப்படியாவது தட்டிக் கழிக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தது என்பது ஊரறிந்த ரகசியம்.

அதிர்ஷ்ட வசமாக நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட விரும்புகின்ற நவநீதம் பிள்ளை போன்ற அலுவலர்கள் ஐ.நாவில் இன்னும் பதவியிலிருக்கின்றார்கள். ஐ.நாவின் உத்தரவை ஏற்காதிருந்த ஐ.நாவின் அலுவலர் விஜயநம்பியார் போன்றவர்கள் பொறுப்பினைத் தட்டிக் கழிக்க முயற்சித்தார்கள். விஜய நம்பியாரின் செய்கையின் பின்னால் இந்தியா இருந்தது ஊரறிந்த ரகசியம்.


அமெரிக்காவே வெளிப்படையாக இந்தத் தாக்குதலுக்கு காரணம் ஜமா-உத்-தவா என்று சொன்ன பிறகு, "பெரியஅண்ணன்' பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் அவரை கைது செய்தது பாகிஸ்தான் அரசு. ஆனால் இப்போதோ ஆவணங்களை கொடுத்து நிரூபிக்காமல் விடுதலையாகும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், உலக அளவில் அசிங்கப்பட்டு போவதையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டினை அம்பலப்படுத்தியிருக்கிறது பாகிஸ்தான்.

அமெரிக்காவே வெளிப்படையாக இலங்கை மீது மனித உரிமை மீறல் தொடர்பாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. அதன் பிறகே"பெரியண்ணன்" பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாது இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச்சபையில் வெளியிட விஜய நம்பியாரை இந்தியா அனுமதித்தது. ஆனால் இப்போதோ ஆசிய அரபு நாடுகளைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு இலங்கை குற்றச்சாட்டில் இருந்து விடுதலையாகும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் உலக அளவில் அசிங்கப்பட்டு போவதையும் பொருட்படுத்தாமல் மனிதப்படுகொலையை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டினை அம்பலப்படுத்தியிருக்கின்றது இந்தியா.

முகமது சய்யீத் இதுவரை 4 முறை கைது செய்யப்பட்டு, நான்குமுறையும் எந்த ஆதாரங்களும் இல்லை என்று விடுவிக்கப்பட்டவர். இதற்குக் காரணம் அவர் உண்மையிலேயே தீவிரவாதி அல்ல என்பதல்ல. பாகிஸ்தான் அரசு அவரை செல்லப்பிள்ளையாக பாதுகாக்க விரும்புகிறது என்பது தான்.
இதன் மூலம், பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதும், தீவிரவாத அமைப்புகளின் கைப்பாவையாக மட்டுமே பாகிஸ்தான் அரசு செயல்படுகிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை தங்கள் நாட்டில் ஒழித்துக்கட்டுவோம் என்று பாகிஸ்தான் சொல்வது உலக நாடுகளுக்காகப் பேசப்படும் வீரவசனமே தவிர, வேறில்லை.
தற்போது சய்யீத்தின் விடுதலை, இந்தியாவில் மறைவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்குக் கூடுதல் ஊக்கமாக அமையும். ஆகவே, பாகிஸ்தானை குறை சொல்லிக்கொண்டிருக்காமல், இந்திய எல்லைக்குள் தீவிரவாத அமைப்பின் செயல்பாட்டை ஒடுக்கி, அயல்நாட்டிலிருந்து பணம் வரும் வழிகளை அடைக்க வேண்டும். வாக்குவங்கியை மனதில் கொண்டு மெத்தனமாகச் செயல்பட்டால், இழப்புகளைச் சந்திக்கப்போவது இந்திய மக்களும் இந்திய அரசும் மட்டுமே என்பது நினைவிருக்கட்டும்!


இதுவரை மூன்று தடவைகள் இலங்கையின் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவாதம் ஐ.நாவில் எடுக்கப்பட்டிருக்கின்றது. அத்தனை முறையும் இலங்கையைப் பாதுகாத்தது இந்தியாவே. இப்போதும் மறுபடி இலங்கை மீதான விவகாரம் ஐ.நாடுகள் சபையில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை பிரித்தானியா ,பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் செக்குடியரசு,ஜப்பான்,தென்கொரியா போன்ற நாடுகளும் இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இவை அமெரிக்காவின் அதியுயர் நட்பைக் கொண்டிருக்கும் நாடுகள்.அமெரிக்காவின் விருப்பத்தையும் மீறி இந்தியா செயற்பட முயல்வதனால் இழப்பைச் சந்திக்கப்போவது இந்திய மக்களும் இந்திய அரசும் மட்டுமே என்பது நினைவிருக்கட்டும்.

இதனை தினமணி தலையங்கமாக்கினால் தினமணியின் பத்திரிகாதர்மமும் மனித நேயமும் உலகெல்லாம் வாழும் தமிழர்களால் போற்றப்படும்.

3 comments:

Anonymous said...

super comment

Anonymous said...

அறிவார்ந்த ஒப்பீடுகள்!
நன்றி!

தீப்பெட்டி said...

நல்ல ஒப்பீடு..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil