ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 8, 2009


புதிய மேய்ப்பர் சீனா


இந்து சமுத்திரப்பிராந்திய நலன் சார் அரசியலில் இலங்கைக்கு எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலேயே இந்தியா விடுதலைப் போராளிகளை வளர்த்து விட்டதும் பின்னர் அவர்களை அழித்து விட்டதும்.

விடுதலைப்போராளிகளை வளர்த்து விட்டபோது இந்தியாவின் கைகளில் இலங்கை வகையாக மாட்டிக்கொண்டிருந்தது. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட இராஜீவ்-ஜே.ஆர் இடையே சைச்சாத்திடப்பட்ட இந்திய அமைதி ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்ப்போராளிகளுடன் ஏற்பட்ட மோதலினால் இந்தியா சிறிது காலம் இலங்கை மீதான பிடியைத் தளர்த்திக் கொண்டது. இன்னொரு வகையில் சொல்லுவதானால் இந்தியாவின் தமிழ்மக்களுடனான பிழையான அணுகுமுறையின் காரணமாக யார் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாத போக்கினுள் மாட்டிக்கொண்டது.

எப்போதும் இந்தியாவைச் சந்தேகத்துடனும் எதிர்ப்புடனும் எதிர்கொள்ளும் சிங்களம் இச்சந்தர்ப்பத்தில் சீனாவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது. இந்தியாவை கைப்பிள்ளையாகப் பாவிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இப்போக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தமது சட்டாம்பிள்ளையாக இந்தியாவை சீனாவிற்கு எதிராக வளர்த்து விட திட்டம் போட்டு வைத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியாவின் அசமந்தத்தனத்தில் வெறுப்பேற்பட்டிருக்கின்றது.

அதனால் தன் மற்றைய அடிபொடிகளின் மூலம் இலங்கையை நெருக்கடிக்குள் உள்ளாக்குவதற்கு அமெரிக்கா இப்போது முயற்சி செய்கின்றது. முதலில் பிரிட்டனின் நாளிதழான டெலிகிராவ் ஈழத்தமிழர் படுகொலை மற்றும் போர்க்குற்றம் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தது. தொடர்ந்து கொரியன் ரைம்ஸ் இதையே திருப்பிச் சொல்ல இப்போது ஜப்பானிய இலங்கைக்கான பிரதிநிதி ஜசூஸி ஆகாஸி இலங்கைக்குச் செல்லும் இத்தருணத்தில் ஜப்பான் ரைம்ஸ் மீண்டும் படுகொலை போர்க்குற்றம் சர்வதேச நீதிமன்றம் எனப் பிரஸ்தாபிக்கத் தொடங்கியுள்ளது.

இவர்கள் அனைவரும் தமிழருக்கான நீதி என்று மேலோட்டமாகக் கூறிக்கொண்டாலும் இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் மீதான அவர்களின் அபிலாஷைகள் அவற்றுள் அடக்கம் என்பது எல்லோரும் அறிந்ததே. நாளிதழ்கள் மூலம் இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை பின்னர் இராஜதந்திர ரீதியாகப் பரவலாக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத்தடை சர்வதேச நீதி மன்ற விசாரணை என்று விரிந்து செல்லும். அவ்வாறு விரிந்து செல்வதும் மூடி வைக்கப்படுவதும் இலங்கை எவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதைப் பொறுத்தே அவை முடிவெடுக்கும்.

மேற்கு சார்பாக இலங்கையின் போக்கு மாறினாலும் தொடர்ந்தும் இவற்றில் சில பல செயற்பாடுகளை முன்னெடுக்கவே மேற்கு நாடுகள் முயலும். மகிந்த ராஜபக்ஷ,கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க்குறற விசாரணைகள் நடைபெற சந்தர்ப்பங்கள் உண்டு. உடனடியாகச் சாத்தியமாகாவிட்டாலும் இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தின் பின்னரான காலத்தில் அவ்வாறு நிகழ சாத்தியமுண்டு.யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மிகைல்லோவிச் சிலியின் சர்வாதிகாரி ஆகஸ்டோ பினாசெட் கம்பூச்சியாவின் கேமர்ரூஜ் பொல்பாட் போன்றோர் சர்வதேச நீதிமன்றத்தில் நீதி விசாரணைக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தொடர்ந்து வரும் இலங்கையின் ஆட்சியாளர்களை மேற்குலகின் விசுவாசிகளாக வைத்திருப்பதன் ஒரு தந்திரம் அங்கு அடங்கியிருக்கின்றது. இதையெல்லாம் அறியாதவர்களல்ல ராஜபக்ஷேயின் முன்னால் பதவியிலிருந்த ஆட்சியாளர்கள். இவை எவற்றையும் யோசியாது அகலக் கால் வைத்த ராஜபக்ஷே சகோதரர்கள் சீனாவுடன் தொடர்ந்தும் நெருங்கியிருக்கவே விரும்புவர்.

அதன் முதற்படியாக உதிரிகளாக இருக்கும் சிறு கட்சிகளை அரச கட்சியுடன் இணைத்து அறுதிப்பெரும்பான்மையாக்கும் காரியங்களில் ராஜபக்க்ஷே அண்ட் கோ தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். கிழக்கில் மட்டுமல்லாது வடக்கிலும் இவ்வாறு உள்ளெடுக்கப்படும் தமிழ்க் கட்சிகள் மூலம் அரசின் அறுதிப்பெரும்பான்மை நிறுவும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். கருணா எனப்படும் முரளீதரன் மூலம் தமிழ்த் தேசிய முன்னணியையும் இணைக்கும் நோக்கில் பேச்சு வார்த்தைகளில் ஈடு பட்டுள்ளனர். இவ்வாறு உதிரிக்கட்சிகளை இணைத்து உள்வாங்குவதன் மூலம் பெறப்படும் பெரும்பான்மையைக் கொண்டு அரசியல் அமைப்பில்மாற்றங்களைக் கொண்டுவர அரசு முயல்கின்றது. நிரந்தர ஜனாதிபதி திட்டமும் அதில் ஒன்று.

இவையெல்லாம் இயல்பாகவே ஏற்பட்டிருக்கும் பயங்காரணமாக சர்வதேச நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்பிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளே. இந்த நிலையைத் தனக்குச்சாதகமாக்கிக் கொள்ளும் சீனா "இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடோ (இந்தியா) அல்லது சர்வதேசமோ தலையிடக் கூடாதென எச்சரித்திருக்கின்றது. அத்தோடு மனிதாபிமான உதவியினை மட்டுமே இவர்கள் இலங்கைக்கு வழங்கலாமென நிபந்தனைகளையும் விதித்திருக்கின்றது.

அதே நேரத்தில் போர்க்குற்றம் மீதான விவகாரங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மறுபடியும் முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. இதில் அமெரிக்காவும் இணைந்து கொள்ளலாம். யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த இறுதி மூன்று நாட்களில், அங்கு என்ன நடந்தது என்பது தமக்கு நன்றாகத் தெரியுமென அமெரிக்கா தெரிவித்த கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.

இவையெல்லாம் இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ராஜபக்ஷே அண்ட் கோ தங்களைக் காத்துக்கொள்ள வேண்டி சீனாவின் பக்கமே நகர்ந்து செல்லும்.

இச்செயற்பாடுகள் எல்லாம் பிராந்திய நலனை முன்னிட்டே வடிவமைக்கப்படுகின்ற போதிலும் கிடைக்கக் கூடிய சாத்தியங்களை ஈழத்தமிழர் நலன் சார்ந்தாக உருவாக்கிக் கொள்வதே அடுத்து ஈழத்தமிழர் சார்பாக பொறுப்பேற்கின்ற தலைமையின் கடமையாக இருக்கப்போகின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil