ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, June 21, 2009


இந்தியா... வருந்தும் நாள் வரும்





இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்தில் இலங்கைத் தமிழர்களின் துயரையும், அவர்களுக்கு அந்நிலை ஏற்படக் காரணமான நிகழ்வுகள் குறித்தும், அதில் இந்தியாவிற்கு இருந்த பங்கு குறித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களும் வருத்தத்துடனும் கோபத்துடனும் எடுத்துரைத்துள்ளனர்.

மாநிலங்களவையில் நடந்த இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, “அங்கிருந்து (இலங்கை) வரும் செய்திகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன, அப்பாவித் தமிழர்கள் பெரும் அளவிற்கு கொல்லப்பட்டுள்ளனர். அங்கு நடந்து வருவது இனப் படுகொலையே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் இதனை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளைக் கண்டு இரத்தம் கொதிக்கிறது” என்று பேசியுள்ளார்.


இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று சாடினார் திமுக உறுப்பினர் இளங்கோவன்.

“1940இல் ஜெர்மனியில் ஹிட்லரால் இலட்சக்கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டபோது அந்தக் கொடுமையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. இப்போது இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் இருந்த நாம் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று தங்களையும் (திமுக) உள்ளடக்கிய மத்திய அரசு வேடிக்கை பார்த்ததை வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார் இளங்கோவன்.

மறுமலர்ச்சி திமுக உறுப்பினர் கணேசமூர்த்தி பேசுகையில், “இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழர்களை படுகொலை செய்து உள்ளது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்கின்ற தங்களது இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கின்றது என்று சிறிலங்க அரசாங்கம் தெரிவித்ததை இந்திய அரசு மறுக்கவில்லை” என்று கூறியவர், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து இந்தியா வாக்களித்தது மன்னிக்க முடியாத துரோகம் என்று கூறியுள்ளார்.

எதற்கும் பதிலளிக்காத பிரதமரின் பதில்!

15வது மக்களவையின் முதல் கூட்டம் இது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரையில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து இந்திய அரசின் நிலைப்பாட்டை (அது எத்தனை முரண்பாடுகளைக் கொண்டது என்பது வேறு விடயம்) விளக்கினார்.

அந்தப் பிரச்சனையின் மீது பல உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு எந்தப் பதிலும் தராமல், “தமிழர்களின் சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அவர்களும் சம உரிமை பெற்ற குடிமக்களாக வாழ துணிச்சலான நடவடிக்கைகளை சிறிலங்க அரசு மேற்கொள்ளும் என்றுதான் எதிர்பார்ப்பதாக”க் கூறி பிரதமர் மன்மோகன் சிங் முடித்துள்ளார்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்’ எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியோ, பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடைசி சில நாட்களில் நடந்த தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றியோ, அப்படி படுகொலை நடந்தபோது இந்தியா வேடிக்கை பார்த்தது என்று தனது கூட்டணிக் கட்சியின் உறுப்பினர் கூறியது பற்றியோ, அங்கே நடப்பது இனப் படுகொலைதான் என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர் குற்றம் சாற்றியது குறித்தோ, ஏன் சிறிலங்க அரசிற்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களித்து என்பதற்கோ எந்த விளக்கத்தையும் அளிக்காமல், சிறிலங்க அரசிற்கு ஒரு வேண்டுகோளை மட்டுமே விடுத்துவிட்டு, பிறகு தமிழர்களின் மறுவாழ்விற்காக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று மட்டும் கூறி முடித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

முக்கியமான பிரச்சனைகளில் விவாதம் நடந்து முடிந்த பிறகு, விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் தனது தரப்பு நியாயத்தை மட்டுமே கூறி முடித்துவிடுவது பொருளாதார நிபுணரான இந்தியாவின் பிரதமருக்கு புதியதல்ல. அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பிரச்சனையிலேயே பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் - அவையின் நடைமுறை விதிகளில் வழங்கப்பட்ட ‘சுதந்திர’த்தை பயன்படுத்தி - தவிர்த்தவர்தானே மன்மோகன் சிங். அப்படியெல்லாம் ஜனநாயக நெறிகளை ‘மதித்து’ நடந்து கொண்ட பின்னரும் மீண்டும் வெற்றி பெற்று பிரதமரான பிறகு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? எனவே பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil