ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, June 3, 2009


காங்கிரஸிற்கு " பெப்பே "தானா? -கலைஞர்


இன்று கலைஞரின் பிறந்த நாள். யார் அதனை ஆவலுடன் எதிர்பார்த்திராது விட்டாலும் தமிழக காங்கிரஸார் எதிர் பார்த்திருந்தனர். 41 வருடக் கனவை எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டும் என்று அரூடங்களும் வியூகங்களும் வகுத்துக் கொண்டிருந்தனர். 1967 இல் தொலைத்த ஆட்சி சுகத்தை மீண்டும் தமிழகத்தில் பெற்றுக்கொள்ள முண்டியடித்தனர். மத்திய அமைச்சர் வாசன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்க பாலு உட்பட "அம்மா ..தாயே.." பாணியில் சோனியாவும் முதல்வர் கருணாநிதியுமே முடிவெடுக்க வேண்டுமென்று இரந்து நின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு தி.மு.க 94 எம் எல் ஏக்களையும் காங்கிரஸ் 35 எம் எல் ஏக்களையும் பெற்றபோதே அந்த எதிர்பார்ப்பு எட்டிப் பார்த்தது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் அரசு தி.மு.க என்ற ஊன்று கோலில் அதிகம் சார்ந்திருந்ததால் தமிழக காங்கிரஸின் வேண்டு கோளை சோனியா அதிகம் இரசிக்கவில்லை.

ஆனால் நிலமை இப்போது தலை கீழாக மாறியிருக்கின்றது.மத்தியில் காங்கிரஸ் முன்னரை விட பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.அதே நேரம் தி.மு.க விற்கு ஆதரவு கொடுத்த
பா.ம.க.வின் 18 பேரும் கம்யூனிஸ்ட்கள் 15 பேரும் வெளியேறிவிட்டனர்.

இப்போது தமிழக காங்கிரஸின் 35 எம் எல் ஏக்களே தி.மு.க வை மாநில ஆட்சியில் பிடித்து வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் தமிழக காங்கிரஸாரின் கனவுகள் வண்ணம் வண்ணமாகப் பூக்கத் தொடங்கியிருந்தது. கடந்த தமிழகத் தலைவர் காலத்தில் கோரப்பட்ட 25 வாரியத்தலைவர் பதவிகளுக்கும் மேலாக அமைச்சர், துணை அமைச்சர் பதவிகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது.

கட்சியை வளர்த்துக் கொள்ள என்று அவர்களால் சொல்லப்பட்ட காரணத்தில் உண்மையில்லாமல் இல்லை. 1967 இற்குப்பின்னர் கட்சி மாறியவர்கள் எவரும் காங்கிரஸில் சேரவில்லை. தி.மு.க அல்லது அ.தி.மு.க விலேயே மந்திரிக் கனவுகளுடன் சேர்ந்து கொண்டனர்.

இன்னும் தனது 2 வருடத்தைப் பூர்த்தி செய்து முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவாக்கிக் கொள்ள தி.மு.க விற்கு காங்கிரஸை விட்டால் வேறு வழி கிடையாது.இதனால் தமிழக காங்கிரஸாரின் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது. முதல்வரின் பிறந்த நாள் பரிசாக அத்தகைய அறிவித்தல் ஒன்று வெளிவரும் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இதில் முதல்வருக்கும் ஒரு சங்கடம் இருக்கின்றது. 1967 இல் காங்கிரஸ் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் பதவியேற்ற அண்ணா ,கருணாநிதி,எம்,ஜி,ஆர்,ஜெயலலிதா என்ற நான்கு முதலமைச்சர்களும் காங்கிரஸிற்கு பதவி கொடுக்காமலே ஆட்சி செய்திருந்தனர். அண்ணாவைத் தவிர மற்ற மூவரும் காங்கிரஸ் ஆதரவுடன் காங்கிரஸிற்கு அல்வா கொடுத்த படியே ஆட்சி செய்திருந்தனர்.

ஆனால் இப்போது கருணாநிதி தான் காங்கிரஸின் கிடுக்கிப் பிடியில் அகப்பட்டிருந்தார். இதை எவ்வாறு சமாளிக்கப் போகின்றார் என்று ஆதி முதலே நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.
"சோனியா கோரிக்கை வைத்தால் பரிசீலினை செய்வோம் "என்று முதல்வரே தன் வாயால் கூறியிருந்தபோது ஆவல் இன்னும் அதிகமாயிருந்தது.

இன்று கலைஞரின் பிறந்த நாளின் போது, 'இந்திய ஒருமைப்பாடு, மதசார்பற்ற ஆட்சி முறை இவற்றோடு மாநில சுயாட்சி என்னும் உரிமை முழக்கத்தையும் தொடர்ந்து வலியுறுத்துவோம்''என்று கருணாநிதி அறிவித்திருக்கின்றார்.

இதில் தமிழக காங்கிரஸ் எதிர்பார்த்த எதுவுமே வெளிவரவில்லை. அதே நேரம் காங்கிரஸிற்கு ஒரு எச்சரிக்கை மனியும் இங்கு அடிப்பதாகவே காண்கின்றேன். "மாநில சுயாட்சி என்ற உரிமை முழக்கத்தையும் வலியுறுத்துவதன் " ஊடாக காங்கிரஸின் கவனத்தை வேறு திசைகளுக்கு நகர்த்த முற்படுவதைத் தான் காண்கின்றேன்.

அப்படியெதுவும் நடக்காத பட்சத்தில் தமிழக காங்கிரஸ் காரியக் கமிட்டியைக் கூட்டி ஆராயப் போவதாக தமிழக காங்கிரஸார் முன்னரே கூறியிருக்கின்றார்கள்.இனியென்ன எப்போது இலவம் காய் பழுக்கப் போகின்றது என்று இலவு காத்த கிளியாகக் காத்திருக்க வேண்டியது தான்.

சோனியாவிற்கோ மத்தியில் இருக்கும் மற்றவர்களுக்கோ தமிழக காங்கிரஸ் பற்றி எந்தவித அக்கறையும் இல்லை. கிடைக்கக் கூடிய ஒன்று இரண்டு அமைச்சர் பதவிகளுக்காகவே தமிழகக் காங்கிரஸிலும் குழுக்கட்டி கூத்தடிக்கின்றார்கள். பிறகென்ன தமிழன் யாராய் இருந்தாலும் "பெப்பே" தான் அவன் காங்கிரஸ்காரனாய் இருந்தால் கூட.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil