ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, June 5, 2009


பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை - சில சந்தேகங்கள்


தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும்..என்று புதிய ஒரு அதிரடியுடன்

புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வெளிக்கிட்டுள்ளார். இதுவரை பேச்சாளர் என்று தான் அறிவித்துக்கொண்டிருந்தார். இப்போது பொறுப்பாளர் என்று புதிய"பொறுப்பை"ச்சுமந்து கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.

கடமை அனைவருக்கும் பொதுவானது. தமிழராய்ப் பிறந்த அனைவரும் ஒன்று பட்டுச் செய்யவேண்டியது இது.

அதன் தொடர்ச்சியாக - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும்.

இந்தப் பணிகளை நிறைவேற்றி - நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.

சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து - ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் - தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.

சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது.

முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.

சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.


உருவாகவில்லை. இது உருவாக்கப்பட்டது.கிட்டத்தட்ட 25 வருட காலம் தமிழ்மக்களினதும் தமிழர் பிரதேசங்களினதும் கட்டுப்பாட்டை வைத்திருந்த ஒரு இயக்கத்தின் கையாலாகாத் தனம் இந்நிலமையை உருவாக வழி விட்டிருக்கின்றது. இதை நேர்மையாக ஒப்புக்கொள்வதில் பத்மநாதனுக்கு என்ன மனத்தடை இருக்கின்றது. தெளிவான அணுகு முறையுடன் இவர்கள் வெளிப்படாது விட்டால் மக்களிடம் சரிந்திருக்கும் செல்வாக்கை மீட்டுக்கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.

இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை.

நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.


பாடங்கற்றுக் கொள்ளவேண்டியவர்கள் புலிகளே தவிர மக்கள் அல்ல. யாரெல்லாம் புலிகள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் மகோன்னத தலைவர்களாக அவதாரம் எடுத்துச் செயற்பட்டார்களோ அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கின்றது.

முதலில் கருத்து முரண்பாடு கொண்டவர்களை, கேள்வி கேட்பவர்களை "'துரோகிகள்" பட்டஞ்சூட்டுவதை நிறுத்த வேண்டும். வீடு பூந்து அடிக்கும் அதரப்பழைய கைக்கூலி வேலைகளை நிறுத்த வேண்டும். இப்படி எவ்வளவோ பாடங்கற்றுக் கொள்ள வேண்டியவர்கள் புலிகளே.

ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.

தற்போதும் - இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே - மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.

தொடர்ந்தும் - அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.


"மோட்டுச் சிங்களவன்" என்று சொல்லிச் சொல்லியே "எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்ளுவார்" என்று சொல்லிச்சொல்லி ஒரு தனி மனிதனை இருக்கும் போதும் நிம்மதியாக இருக்கவிடாது இறக்கும் போதும் நிம்மதியாக இறக்கவிடாது செய்தது யார்?

புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிச் சொல்லியே தமிழ் மக்களில் கணிசமான பகுதியினரை போராட்டத்தில் இருந்து மட்டுமல்ல தமிழரைக்கண்டாலே காத தூரம் ஓடச்செய்தவர்களே ..இது அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டும். அறிவு ஜீவிகளை ஆயுத முனையில் களைந்த "அனைத்து விடுதலை வீரர்களும்" இதற்கான தார்மீகப் பொறுப்பினை ஏற்க வேண்டும்.இதில் 75% இற்கும் அதிகமான பொறுப்பு புலிகள் இயக்கத்தையே சாரும். அத்தனை தூரம் தமிழ்ச் சமூகத்தை அறிவிலிகளாக முடக்கிப்போட்ட பெருமை அவர்களையே சாரும்.


நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?

நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?

இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?

இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும்.

அந்த நம்பிக்கையுடன் - நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் - நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் - தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.


25 வருடங்களால் ஏன் உங்களால் இத்தகைய மாற்றங்களை உருவாக்கமுடியவில்லை. உலகத்தில் வாழாமல் வேறு கோளிலா நீங்கள் வசித்தீர்கள். எத்தனை பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டீர்கள்.எத்தனை மனிதர்களைச் சந்தித்திருப்பீர்கள். அப்போதெல்லாம் உலகம் மாறிக்கொண்டிருக்கின்றது என்பது எப்படி உங்களுக்குத் தெரியாது போய் விட்டது.

எத்தனை அரசியல் தலைவர்களுடன் இராஜதந்திரிகளுடன் பழகியிருப்பீர்கள். அப்போதெல்லாம் "உலக அரசியல் அதன் போக்கு "பற்றியெல்லாம் அவர்கள் உங்களுக்குச் சொல்லித் தரவில்லையா? குறைந்த பட்சம் தங்களுக்கு என்ன வேண்டும், இலங்கையில் எப்படிப்பட்ட சூழல் இருப்பது அவர்களுக்கு இலாபமாய் இருக்கும்.. அதற்கு இசைந்து நடந்தால் உங்களுக்கு ,தமிழ் மக்களுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்றாவது சொல்லியிருப்பார்களே.. அப்படிக்கூட உலகின் விருப்பு வெருப்புகள் அரசியல் விஞ்ஞானம் உங்களுக்கு விளங்கவில்லையா? யுத்தத்தில் தோற்றவுடன் விளங்கிக் கொள்ளும் விடயங்கள் இதற்கு முன்னர் விளங்கவில்லையா? இத்தனை பின்னடைவிற்கும் நீங்களே காரணம் என்பதையும் ஒத்துக்கொள்ள மறுக்கும் உங்கள் நேர்மையில் சந்தேகம் எழுகின்றது. உங்களை நம்பி எப்படி மக்கள் இன்னும் பலிக்கடாவாக வருவார்கள் என்று திடமாகவே நம்புகின்றீர்களா?


யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும்.

நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.


யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளவேண்டியது நீங்கள் தான். உங்களால் முன்னொருபோது அடித்து விரட்டப்பட்ட மற்ற இயக்கத்தினர் இருக்கின்றார்கள். கல்விமான்கள், கருத்தாளர்கள் ,நாட்டு நலன் விரும்பிகள் என்று ஒரு கூட்டம் இருக்கின்றது. தமிழீழ மக்கள் இருக்கின்றார்கள். அவர்களையெல்லாம் இணைத்துச் செல்வதற்கு என்ன வேலைத் திட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அவர்கள் யாரையாவது இதுவரை சந்தித்துப் பேசினீர்களா? குறைந்த பட்சம் உங்கள் மீது இருக்கக் கூடிய பயத்தினை நம்பிக்கையீனத்தை அகற்றவாவது ஏதாவது செய்தீர்களா?

இதையெல்லாம் செய்யாது நீங்கள் அறிக்கை விட்டால்... அதுவும் உங்கள் ஆதரவுத் தளங்களில் மட்டும் விடுவீர்கள்... மக்களெல்லாம் ஓடி வந்து ஆலோசனை மட்டும் சொல்லவேண்டும். நீங்கள் மட்டும் எல்லாவற்ரையும் செயற்படுத்த முன்நிற்பீர்கள். உங்களை மீறி யாரும் வெளிவர முடியாது... கூடாது.


தமிழீழத்தலைவர் சேர்த்து வைத்த சொத்துக்கூட மக்களுக்குச் சொந்தமானது தானே.. அதைக்கூட அவதிப்படும் மக்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கொடுத்து உதவலாம் தானே.. அப்படி ஏதாவது செய்தீர்களா? செய்யும் உத்தேசமாவது இருக்கின்றதா?

ம்ஹீம்.. இதெல்லாம் வேலைக்காவது. மக்களிடமிருந்து நீங்கள் எப்போதோ விலகிப் போயாகிவிட்டது. இன்னும் பழைய கனவில் துருப்பிடித்த கத்தியுடன் அலைவது உங்களுக்கு மட்டுமல்ல.. நொந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கும் எப்போதும் அழிவைத் தான் கொண்டுவரும்.


குறிப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது செயலிழந்து போன ஒரு இயக்கம் என்பதனாலும் சிறிலங்கா அரசாங்கத்தின் கூற்றின் படி அந்த இயக்கத்தின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டமையாலும் - அமெரிக்காவும் ஏனைய மேற்குலக அரசுகளும் விடுதலைப் புலிகளை தமது பயங்கரவாதப் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil