ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, June 23, 2009


கடிதம் எழுதும் சித்து விளையாட்டு...


கடிதம் எழுதுவது ஒரு சித்து விளையாட்டுத் தான்.. இரண்டு மனங்களை ஒன்றிக் கலக்கப்பண்ணுவது ஒரு பேருவகையான விளையாட்டே...

"அதிகாலை சுபவேளை
ஒரு ஓலை வந்தது..
காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது.."

அப்படியொரு சுகத்தைக் கொடுக்கக் கூடியது கடிதம்..

கண்மணி..அன்போடு காதலன்
நானெழுதும் கடிதமே...

அப்படி அன்பைப் பண்போடு எழுதும் கடிதங்களும் மனங்களைக் குளிர வைப்பது உண்டு.

காதலோடு அன்பையும் அந்நியோன்யத்தைக்கூட கடிதங்களில் எழுதிக்கொள்ளலாம். அன்னம் விடு தூது ..புறா விடு தூது.. என்று புதிய புதிய வழிகளைக்கண்டு பிடித்து ஒருவர் மேலுள்ள அக்கறையை வெளிப்படுத்தி விடுகின்றோம்.

அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்திய கடிதத்தை அரசியலும் வெளிப்படுத்தப்பயன் படுத்தலாம் என்று நிறுவியவர் கலைஞர். கறுப்புக்கண்ணாடி மூடிய இருண்ட இதயத்தில் கொப்பளித்த அரசியல் ஆசைகளையும் சுயநல தீ நோக்கங்களையும் தமிழின் சுவை என்ற தேன் தடவிக் கொடுத்தவர் கலைஞர். தமிழின் தேன் சுவைக்கும் அப்பாலிருந்த நச்சுச்சுவை அறியாது அவரைச்சுற்றிச்சுற்றிக் காகங்கள் போல் பறந்தலைந்தன ஒரு கூட்டம் கழகக் கண்மணிகள். காலப்போக்கில் கலைஞரின் கபடத்தனம் நெருக்கமாகி உடன் பிறப்புகளாயின.

இதற்குப் போட்டியாய் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது தான் இரத்தத்தின் இரத்தங்கள். எம்.ஜி.ஆர் போயாச்சு இரத்தத்தின் இரத்தங்களும் உறைந்தாயிற்று.

ஆனால் இன்றும் ஏன் கரைகின்றோம் என்றே தெரியாதபடிக்கு கரைந்து கொண்டுதான் இருக்கின்றன உடன் பிறப்புகளின் கூட்டம். கலைஞரின் தேன் தமிழால் கவரப்பட்டவர்களின் கரைதலுக்கு அந்தக் காரணமாவது இருந்தது. இன்று கரைபவர்களுக்கு பிச்சுத்தின்னும் வடையில் சிதறிப்பறக்கும் பொறையாவது கிடைக்காதா என்ற ஏக்கம் தான் ஒரே காரணமாய் இருக்கும். கலர் டீ.வி.க்கு அலையாத உடன் பிறப்புகள் உண்டா என்று கேட்டுப் பாருங்கள்.

தேய்ந்து போன பாதையும் வாரறுந்த செருப்பும் கதறிக்கதறி கதை சொல்லும். இப்போது ரேசன் சிபாரிசும் சேர்ந்து நிற்கின்றது. வாடி நிற்கின்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பற்றி சட்டமன்றத்திலேயே ஞாபகப்படுத்துகின்றார்கள். கொள்ளைக் கூட்டத்தில் சேர சட்டமன்றத்திலேயே காங்கிரஸ் விண்ணப்பிக்கின்றது. கொள்கைக் கூட்டம் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். கொள்கைகளை மறந்து போவதையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றார் கலைஞர்.

கடிதம் எழுதி கூட்டம் சேர்த்த கலைஞர் அக்கூட்டத்தை ஏமாற்றவும் எழுதுவதும் கடிதம் தான்.
ஈழத்தமிழரை ஏமாற்றியதும் கடிதம் வாயிலாகத்தான். நடக்கும் ..ஆனா இது நடக்காது போன்ற காமெடியன் வேலைகளுக்கு கலைஞரின் ஆயுதம் கடிதம் சக முதுகுவலி வியாதி.

நடந்தே தீர வேண்டுமென்றால் பிளைட் பிடித்து டில்லி போய்விடுவார்.. உதாரணம் அமைச்சுப்பதவிகள் இலாகாக்கள் பெற டில்லி போய் தள்ளுவண்டி ஊர்வலத்தால் டில்லித் தெருக்களை நிரப்பியது. தள்ளுவண்டியில் டில்லித் தெருக்களில் கருணாநிதியைப் பார்த்த சோகத்தை ஞானியும் எழுதியிருக்கின்றார்.

இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிப்பொருட்களை ஏற்றிவந்த "வணங்காமண்" தரை தொட முடியாதபடி நடுக்கடலில் அலையாடிக்கொண்டிருக்கின்றது. மீண்டும் கடிதம் எழுதக் கலைஞர் கையில் காகிதத்துடன்.

நடக்கும் ஆனால் நடக்காது... காமடியின் ஆரம்பக் காட்சி வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிற்கு கடிதத்துடன் ஆரம்பித்திருக்கின்றது. நாடகம் முடிவதற்குள் பசித்தவர்களின் பசியும் போய் பிராணனும் போய் விடும்.

தமிழக மக்கள் எல்லாம் காதைப் பொத்திக்கொண்டு வாழ்கின்றார்கள். சாப்பிடுவதற்குக் கூட வாயைத் திறக்கக் கூடாது என்று என்ன விரதமோ?

1 comment:

Unknown said...

அன்புடையீர்,
உண்மைகளைத் தெரிந்து தெளிவுடன் எழுதிய பாங்கினை, முயற்சியைப் பாராட்டுகின்றேன்.
வணக்கம்
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹுசுடன்
ஜுன் 23, 2009

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil