ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, June 7, 2009


மீண்டும் பிட்டுக்கு மண் சுமந்த கதை


ரெண்டாம் வகுப்போ மூணாம் வகுப்போ படிக்கும் போது இந்தக் கதையைப் படித்ததுண்டு. சைவசமயம் என்னும் சமய பாடத்தில் இறைவனே பிட்டு விற்கும் கிழவிக்காக வைகை ஆற்றின் கரையைக் கட்டுவதற்காக மண் சுமந்தகதை. அவன் தான் பெருங்குறும்பனாச்சே.. ஒழுங்காக மண் சுமந்து விடுவானா? வந்த வேலையைக் காட்டவேண்டாமா? பார்க்க வேண்டாமா? என்றல்லவா வரவேண்டும்.. காட்ட வேண்டாமா ..என்று எழுதுகின்றீர்களே என்றால் ...காட்டுவதற்காகத் தானே வந்திருந்தான் ..உள்ளன்போடு தனைத் தொழும் மக்களுக்கு இறைவன் துணையிருப்பான் என்பதைக் காட்டத்தானே அவன் வந்திருந்தான்..

சமயவாதிகளும் அதைக்காட்டித்தானே மக்களை வளைத்துப் போட்டு மக்களுக்கு "மதம்" ஊட்டிக்கொண்டிருக்கின்றார்கள். மண்சுமந்தவன் செய்த சேட்டைகளைப்பார்த்து அப்போது மதுரையை ஆண்டு கொண்டிருந்த அரிமர்த்தன பாண்டியன் சவுக்கால் அடிக்கச் சொன்னதும் அவ்வடி உலகிலுள்ள அத்தனை பேர் உடம்பிலும் 'சுளீரென" பட்டதும் அதைப்படித்தபோது நாங்களும் அதே உணர்வு பெற்றதும் அப்போது பெற்ற உணர்வுகள்.

பின்னர் அதையெல்லாம் மேவி "மண் சுமந்த மேனியர்" யாழ் பல்கலைக்கழக சூழலில் பழக்கப்பட்டிருந்த காலத்தில் இயக்கங்கள் வளர்ச்சி பெற்று போராட்ட முகம் விறுவிறுப்புடன் கிளை விட்டுப்பரந்திருந்தது. அது தமிழ்த் தேசியவாதத்தின் கிளர்ச்சி மேலேறி சிங்களம் பொருமி வெடித்துக் கொண்டிருந்த காலம் . தமிழ்க்கிளர்ச்சி கையை மீறிப்போய் விட்டதாக அரசியல்வாதியிலிருந்து அடிமட்டச் சிங்களவன் வரை நித்திரையைத் தொலைத்து குழம்பிக்கிடந்த காலம்.

இடையில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் பொருதும் முரட்டு மேகங்களாக மடி கனத்து யுத்தம் செய்து தோற்ற ஆற்றாமையில் மாவட்ட மாநில சுயாட்சி என்று நம்பிக்கையீனத்திற்கும் அவசியத்திற்குமிடையில் ஊசலாடி ஆட்சிக்காலத்தை கடத்திக் கழிந்து போயினர். இத்தனைக்கும் விட்டுக்கொடுக்காத வைகைக்கரையின் அணையாக முண்டு கொடுத்துக் கொண்டிருந்த புலிகளின் ஆட்சியை உள்ளாலும் வெளியாலும் இருந்து அரித்தெடுத்த கரையான்கள் போன்ற உதிரிகளும் அரசியல் அனாதைகளும் கரை கட்ட கடகம் மண்வெட்டியுடன் கிலம்பிவிட்டார்கள்.

மீண்டும் யாழ்மாநகர சபை வவுனியா நகர சபை என்று சிறு மணல் குவித்து அணைகட்டும் உத்வேகத்துடன் மலையாக எழுந்திருக்க வேண்டிய அணையை உடைத்தெறிந்த எந்தக் கவலையுமில்லாது.

கிடைக்கும் எலும்புத் துண்டில் பெரிய பாகம் வேண்டி தமிழ் தேசிய முன்னணி முதல் அனைத்துக் கட்சிகளும் மக்களை மீண்டும் முப்பது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்தபடி. இப்படியாவது சனநாயகம் வாழ்ந்து விடும் என்ற கற்பனையுடன்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil