ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 1, 2009


இலங்கையில் மையங் கொள்ளும் பிராந்தியப் போர்


எல்லாம் முடிந்தாகிவிட்டது . பிராந்திய வல்லரசுகளின் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான ஒற்றுமையும் தான். இப்போது தங்களுக்குள் மோதிக் கொள்ள அவை தயாராகி விட்டன. இலங்கையின் சிங்கள அரசு கடந்த காலங்களைப் போலவே இந்தியாவுடன் மட்டும் கட்டுண்டு கிடக்க விரும்பவில்லை. புலிகளுக்கெதிரான போரில் சீனா,பாகிஸ்தான்,ரஷ்யா போன்ற இதர பிராந்திய வல்லரசுகளுடன் ஏற்பட்ட தொடர்பினாலும் ஆதாயத்தினாலும் மிகவும் மகிழ்ந்து போய் இருக்கின்றது.

எத்தகைய நெருக்கடிகளிலும் இது தன்னைக் காத்துக்கொள்ள உதவும் என்பதை ஐ.நாடுகள் சிறப்புப் பிரேரணை அனுபவத்தில் இருந்து உணர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவும் விரும்பினால் ஒரு பங்காளியாக இருக்கலாமேயன்றி ஏகப் பெரு முதலாளியாக இருக்க முடியாது என்று ரஷ்யாவிற்கான நன்றி தெரிவிக்கும் ஊர்வலத்தை கொழும்பில் நடாத்தியது மூலம் தெரிவித்திருக்கின்றது.

ஈழத்தமிழ் மக்களுக்கான கனடாவின் ஆதரவிற்கு எதிரான கண்டன ஊர்வலத்தையும் நடாத்தி தூதரகமும் தாக்கப்பட்டுள்ளது.

வேறெவரும் உள்நுழைவதற்குள் நிவாரணப் பொருட்கள் உதவிகள் என்ற போர்வையில் தனது 34 வர்த்தக நிறுவனங்களை உள்நுழைக்கும் முயற்சியில் இந்தியா அவசரப்படுகின்றது. யுத்தத்தில் புலிகளை முறியடிக்க பிராந்திய வல்லரசுகளின் உயர் தொழில்நுட்பம் உதவி செய்தது என்று சிறிலங்கா நன்றி கூறியுள்ளது. நன்றியுடன் மட்டும் நில்லாது தமக்கான பங்கை அவை எதிர்பார்த்து நிற்கின்றன.

சீனாவிற்கு ஏற்கனவே தங்காலையில் அமைக்கப்படும் துறைமுகம் பரிசாகக் கிடைத்துள்ளது. அதைப்போலவே பாகிஸ்தானுக்கும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் புத்தளமோ காத்தான் குடி வாகரை பிரதேசங்களோ கிடைக்கக் கூடும். ஏற்கனவே நல்ல நண்பர்களாக இருக்கும் பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாக இடம் இல்லை.

ஆனால் ஏகப்பெரு தனிப்பாதுகாவல்லனாக இருந்த இந்தியாவின் நிலை தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போய் விட்டது. இந்தியாவின் புலிகளுக்கெதிரான வெறுப்பு தமிழ் மக்களுக்கெதிரான வெறுப்பாக மாறிப்போயிருக்கின்றது. அதே போல தமிழ் மக்களும் இந்தியாவை தமது முதல் எதிரியாக இந்த ஈவிரக்கமற்ற நியாயமற்ற போரின் மூலம் இனங்கண்டு கொண்டுள்ளனர்.

இது தன் மீது கொண்டுவரக்கூடிய தாக்கத்தையும் இந்தியா உணர்ந்திருக்கின்றது. இதனாலேயே புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே ஒரு உளவியல்ப் போரை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அதன் ஆரம்பமே பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இல்லை என்பது போன்றமாயையை உருவாக்கியிருக்கின்றனர். புலம் பெயர் மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத படி ஒரு உணர்வு பூர்வமான போராக இதனை வழி நடாத்துகின்றனர்.

சிங்கள அரசிற்கெதிரான அடுத்த போர் புலம் பெயர்ந்த தமிழ் மக்களாலேயே கட்டமைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். புலம் பெயர் தமிழர்கள் இப்போது தனிமையானவர்கள் அல்ல. அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல் பொருளாதாரம் அனைத்திலும் வலிந்த தாக்கத்தை உருவாக்கும் வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அந்த அந்த நாடுகளில் இருக்கும் அரசு இயந்திரங்களில் பங்களிப்புப் பெற்றுள்ளனர். அந்த நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையில் காத்திரமான பாதிப்பை உருவாக்கக் கூடியவர்கள். குறைந்த பட்சம் நெகிழ்வுப் போக்கினை அந்த அந்த அரசுகள் கொள்ளும் வகையில் தாக்கத்தை எடுக்கக் கூடியவர்கள்.

அந்த பிரதிபலிப்பே பிரித்தானியா பிரான்ஸ் கனடா நாடுகளின் ஈழத்தமிழர் சார்பு நடவடிக்கைகளை அதிகம் தூண்டியிருந்தது.ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் இந்நாடுகள் அவர்களின் அபிலாஷைகளை இனி அலட்சியம் செய்ய முடியாது.ஈழத்தமிழரின் போராட்டம் இந்நாடுகளில் ஒரு அதிர்ச்சிகரமான மனநிலையைத் தோற்றுவித்திருக்கின்றது.


மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்களுக்கு 25 தொன் உணவு ஒரு நேரத்திற்கும் காணாது என்ற அரசியல் கணக்கை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றார்கள். வானத்திலிருந்து வாகனத்தின் இலக்கத்தகட்டின் இலக்கத்தையும் தெளிவாகச் சொல்லக் கூடிய தொழில் நுட்பத்தின் மூலம் இறுதி யுத்தத்தில் அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தெரியாது என்று சொல்லப்படும் கபடத்தையும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அசமந்தப் போக்கினையும் அலட்சியத்தையும் புரிந்து கொண்டு புலம்பெயர் மக்கள் தம் சகோதர மக்களைக் காக்கும் நிகழ்ச்சிநிரலைத் தயாரிக்க வேண்டும். தாம் வாழும் நாடுகளின் அவசர உதவிகளை உடனும் முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் மக்களைச் சென்றடைய நிர்ப்பந்தத்தினை அதிகரிக்க வேண்டும்.

5 ஆம் கட்டப்போர் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்தே ஆரம்பிக்கின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil