
26/10/2009 உயிரோசை வார இதழை வாசித்து ஆச்சரியப்பட்டுப்போனேன்.எங்கே செல்லும் இந்தப் பாதைகள் - என்ற தலைப்பில் வாஸந்தி கருணாநிதியின் வாழ்க்கையையும் ஆட்சியையும் கிழி கிழியென்று கிழித்து எழுதியிருக்கின்றார். தமிழக தமிழ்ப்பத்திரிகைகளை மட்டுமல்ல ஆங்க்கிலப்பத்திரிகைகளையும் தான். சாட்டையடி.. அது கருணாநிதிக்கு தேவையானது தான். இருக்காதா பின்னே பூனைக்கு மணிகட்டுவது யார்? என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களில் நீங்களும் இருந்தால் ..இதோ ..பூனைக்கு முதல் மணி கட்டப்பட்டிருக்கின்றது. அதுவும் ஒரு பெண்ணால் ஊரறிந்த உலகறிந்த எழுத்தாளினி.
எப்படி அவருக்குப் பயமில்லாது போய்விட்டது. ஒரு வேளை அவர் பெங்களூரில் குடியிருப்பதாலோ என்னவோ? இங்கும் இருக்கின்றார்களே பத்தி எழுத்தாளர்கள் இணைய எழுத்தாளர்கள் என்று. முதுகிற்கும் நோகாது குச்சிக்கும் நோகாது முதுகு சொறிய வல்லவர்கள். எழுதுகின்றார்கள் ...எழுதிக் கிழிக்கின்றார்கள். அவர்கள் எழுதுவது அவர்களுக்கே புரியுமோ என்னவோ?
சேறும் சகதியும் நிறைந்த இடத்தில் நின்று கொண்டு அத்தரும் 'சென்'ரும் பூசி வாசனையில் மிதப்பவர்கள். நிற்கும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டுமென்ற சமூகப் பொறுப்பு அற்றவர்கள். எழுதி எதைத்தான் சாதிக்கப்போகின்றார்கள். இவர்களின் கலை இலக்கிய இரசனை சில பின்னூட்டத்திற்குள்ளும் 'வாவ்' என்ற அமோதிப்பிற்குள்ளும் அடங்கிப் போக சம்மதமென்றால் ஆழ் கடலின் ஆரவாரிப்பு எதற்கு? தேங்கி நிற்கும் குட்டைநீரின் அமைதி போதுமே.
இதோ ஒரு முன்மாதிரி. யாரோ ஒருவர் ஆரம்பித்து வைக்கவேண்டுமே. அது இவராக இருக்கட்டும்.
இனி அவர் வார்த்தைகளில் ... (அதை வெளியிட்ட உயிரோசைக்கு நன்றி)
"தமிழ் நாட்டில் ஆங்கிலப் பத்திரிகைகள் கூட அரசின் செயல்பாடுகளைக் காட்டமாக விமர்சனம் செய்வதில்லை. ஊரக வளர்ச்சித்துறையின் ஊழலையோ, சாலைகளின் மோசமான இருப்பையோ தினமும் விமர்சிப்பதில்லை. முகத்தில் அடிப்பது போல புகைப்படத்தை தினமும் பிரசுரிப்பதில்லை. தமிழ் பத்திரிகைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். வம்புக்கே போகாது. விமர்சனம் செய்யாத, செய்யத் துணியாத பிராந்திய மொழி பத்திரிகை உலகம் இருக்கவேண்டியது சௌகரியம் மட்டுமில்லை, அவசியமும்கூட என்று அரசு நம்புகிறது. பத்திரிகையாளர்கள் முதுகெலும்பு ஒடிந்தவர்கள்/ ஒடிக்கப் பட்டவர்கள். என்னென்னவோ நடக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. எல்லாம் பெரிய இடத்து சம்பந்தம் என்கிற பேச்சு அக்கம்பக்கம் பார்த்து ரகசியமாகச் சொல்லப் படுகிறது. ஆனால் அதையெல்லாம் புலன் விசாரணை செய்யவோ விவரங்கள் சேகரித்து அம்பலப் படுத்தும் ஆர்வமோ எந்தப் பத்திரிகைக்கும் இல்லை. வெகுஜன பத்திரிகைகள் எல்லாம் சினிமாப் பத்திரிகைகள் ஆகிவிட்டன. கிளுகிளுப்பூட்டும் சினிமா வம்புகளை கற்பனை கலந்து வெளியிடும் அடாவடித்தனம் மட்டும்தான் இப்போது மிச்சம் என்பது கேவலத்திலும் கேவலம். ஆனால் அதிலும் ஆபத்து உண்டு. நிர்வாகத்துக்கு இருக்கும் அசாத்திய அதிகாரம் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்று மறந்தால் அதற்கும் [நியாயமாக] வம்பில்தான் மாட்டிக்கொள்ளவேணும். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக விற்பனை எண்ணிக்கையை நினைத்து செயல்பட்டு பிறகு வேலையிழக்க நேரிடும். அதோடு சிறை வாசமும் கிடைக்கலாம். சக பத்திரிகையாளரிடமிருந்து முழுமையான ஆதரவை எதிர்பார்க்கமுடியாது. கைதுசெய்ததை எதிர்க்கலாம், அடாவடித்தன செய்தி அறிக்கையை எப்படி ஆதரிப்பது? பெண்களை- அவர்கள் என்ன தொழில் செய்தால் என்ன, மிகக் கேவலமாக, மான பங்கப்படுத்துவதற்கு இணையாக செய்தி வெளியிட்டால் யார்தான் ஆதரிப்பார்கள்? பதில் சொல்லவேண்டிய கடமை பத்திரிகைத் துறைக்காவது இருக்கவேண்டும். பெண்களின் கண்ணியம் காப்பாற்றப்படவேண்டும் என்கிற கடமை தனக்கிருப்பதாக அரசு காண்பித்துக்கொள்வதற்குப் பின்னணி வேறு. அது என்ன என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.
நான் சொல்லவந்தது வேறு. சாலைகளைப் பற்றி ஆரம்பித்தேன். பழுதானால் அதைச் செப்பனிடுவது வருடாந்தர செலவாக [அல்லது உபரி வருமானமாக] இருக்கும் என்பதால் நிர்வாகத்துக்குப் பிரச்சினையில்லை. பதவியில் இருப்பவர்களுக்கு, அரசியல் வாழ்வில் அனுபவம் மிக்கவர்களுக்கு இந்தப் பணிகள் எல்லாம் மாமூலானவை. பணிகள் நின்று போனாலும் பிரச்சினையில்லை. அவர்களது நீண்டகாலத் திட்டங்கள் வேறு. சொந்த வளர்ச்சிக்கான பாதை வகுக்கும் திட்டங்கள். அதற்கான பாதையை நல்ல சிமெண்டுப் பாதையாக எந்த சுனாமி வந்தாலும் உடைந்து விரிந்து போகாத பாதையாகத் தமது கட்சிக்கும் வாரிசுகளுக்கும் போடுவதில்தான் அர்த்தம் இருக்கமுடியும் . இந்தப் பணியில் தமிழக முதல்வரைவிட அதி மேதாவியை எந்தக் காலத்திலும் பார்த்திருக்கமுடியாது. அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதால் நம்மில் அநேகருக்குக் கிட்டப் பார்வைதான் இருக்கிறது. தொலை நோக்கு என்பது அந்தத் தொண்ணூறை நெறுங்கும் முதியவருக்கு இருப்பதாலேயே தமிழகத்து அதிகார மையம் கோபாலபுரத்திலும் ஆழ்வார்பேட்டையிலும் குடிகொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் எல்லாத் துறையையுமே மண்டியிட வைத்திருக்கிறது. தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதான பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. விமர்சனம் செய்யவே முடியாத அளவிற்குப் பத்திரிகைத்துறை ஒடுக்கப்பட்டிருப்பது இருக்கட்டும். சினிமாத்துறையிலிருந்து கல்வித்துறை , அரசுப் பணியாளர், அரசு சாராப் பணியாளர், விவசாயிகள், மீனவர், சிறுபான்மை சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் , ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் என்று எல்லாத் துறைகளையும் , அதில் பங்குபெறுவோர் அனைவரையும் தன் வசம் முதலமைச்சர் கருணாநிதி வளைத்துக்கொண்டுவிட்டார்.
கருணாநிதியின் அளப்பரிய சாமர்த்தியத்தை நினைக்க நினைக்க வியக்காமல் இருக்கமுடியவில்லை. இதைப் போன்ற ஜன மயக்கு அரசு என்றும் தமிழ் நாட்டில் இருந்ததில்லை.இதற்கு முன்பு பதவியில் இருந்த காலத்தில் இதே கருணாநிதி இப்படி வாரி வழங்கியதில்லை. எல்லா தரப்பினரையும் அரவணைத்துக்கொள்ளும் ஆர்வம் காட்டியதில்லை. அவரது பழுத்த அனுபவம் அவரை மாற்றியிருக்கவேண்டும். பணத்தைப்போல அரசியலுக்கு உதவுவது உடன்பிறப்புகள் கூடச் செய்ய முடியாதது என்று உணர்ந்து கொண்டவர் அவர். பணம் அம்பானிகளைப் பிரிக்கும். ஆனால் பணத்தைக் கொட்டவல்ல அரசியல் பதவியும் அந்தஸ்தும் வாரிசுகளை இணைக்கும். தனித்துச் செயல்பட்ட குடும்பங்களை கைநீட்டி சமரசம் செய்யவைக்கும். இவையெல்லாம் சுயநலத் திட்டங்கள் என்று உடன்பிறப்புகள் தயவு செய்து நினைக்கவேண்டாம். இவையெல்லாம் கட்சியை பலப் படுத்த. வீட்டுக்குள் ஒற்றுமை இருந்தால்தான் கட்சிக்கு பலம்.
வாக்கு வங்கியை பலப்படுத்துவது அதேபோல முக்கியம். மைனாரிட்டி திமுக அரசு என்று தினமும் எள்ளிக் கொக்கரிக்கும் எதிரணித் தலைவி இனித் தலையே எடுக்கமுடியாதபடி செய்தாகவேண்டும். 2004 பாராளுமன்றத் தேர்தலிலேயே அதற்கான வெள்ளோட்டம் பார்த்தாகிவிட்டது. முதல் முறையாக தமிழகம் மற்றும் புதுவைக்கான 40 சீட்களையும் அவரது கட்சிக் கூட்டணி பலத்துடன் வென்று மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு வலுவான செல்வாக்கு மிக்க கூட்டாளி என்ற அந்தஸ்தைப் பெற்று அதன் வலிமையை உணர்ந்தவுடன் கருணாநிதியின் வியூகங்கள் சடசடவென்று மாறின. ஆட்சியை மாநிலத்தில் பிடித்தாகவேண்டும். பணத்தை கண்சொடுக்காமல் வாரி இறைத்தால்தான் எங்கும் பலன் இருக்கும். பணமும் பதவியும் இரட்டைப் பிறவிகள். ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. இருந்தாலும் மதிப்பில்லை. இதுவே கட்சியைப் பலப்படுத்துவது. பெரும்பான்மை எதிர்பார்த்தபடி கிடைக்காவிட்டால் என்ன? கிடைத்ததுபோல ஆட்சி செய்யலாம். சாமர்த்தியமாகக் கூட்டணிக்கட்சியினரை ஒதுக்கி வைக்கலாம். சரியான வியூகம் கொண்டு வானத்தை வில்லாக வளைக்கலாம் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்று இடையில் பூகம்பம் வெடித்தாலும்.. மக்கள் சுலபமாக வளைந்து கொடுப்பார்கள். இலவசங்களை வாரி வழங்கினால், டாஸ்மாக் கடைகளில் ஆண்கள் படுத்திருந்தாலும் எல்லா பெண்களும் பலதலைமுறைகளுக்கு வாக்கு அளிப்பார்கள். தமிழகத்துப் பெண் வாக்காளர்கள் எம்ஜிஆரை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். திமுகவில் அவரைவிட வள்ளல் பெருமக்கள் இன்று இருக்கிறார்கள். அதனாலேயே அதிக வசீகரத்துடன் இன்று தெரிகிறார்கள். கொடுப்பவருக்கே ஓட்டு. எல்லா பெருமையும் கலைஞருக்கே. வரலாற்றுச் சுவட்டில் இருக்கும் பாரி காரி, ஓரி என்ற கொடைவள்ளல்களா?- தயவு செய்து ஓரம் போங்கள். தமிழகத்தின் வரலாற்றை வேறு ஒரு மாமனிதர் எழுதி வருகிறார். அரசியல் சாதுர்யம், கொடை, தமிழ் உணர்வு- ஆகியவற்றில் எதில் நீங்கள் அவரை மிஞ்சமுடியும்?
கருணாநிதி இப்போது யாரைப் பற்றியும் கவலைப் படவேண்டியது இல்லை. உலகத் தமிழ் செம்மொழி மாநாடுக்கு ஏற்பாடுசெய்தாகிவிட்டது. யார் வந்தாலும் வராவிட்டாலும் அவர் பெயரைச் சொல்லி அது நடக்கும். அவரைப் புகழ் பாட முன்னாள் இன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரிசையாக நிற்கிறார்கள். அவர் பெற்ற விருதுகளை வரிசைப் படுத்தி எழுத ஒரு கரும்பலகை போதாது. புத்தகம் போட வேண்டும். போடுவார்கள். நோபல் பரிசுக்குக் கூட இங்கிருந்து சிபாரிசு போகும். ஏன் கூடாது? நேற்று முளைத்த ஒபாமாவுக்குக் கிடைக்கலாம், பல களம் கண்டு ஜெயித்த, பன்முகத்தன்மை கொண்ட ஆற்றல் படைத்த சாணக்கியர் கருணாநிதிக்கு ஏன் கிடைக்கக் கூடாது?
தமிழர்களான நமக்கு எத்தனை பெருமையாக இருக்கும்? தான் தமிழர் என்றுகூட சொல்லாத வெங்கிக்கும் அம்பிக்கும் கொடுத்து என்ன உபயோகம்?"
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2142
3 comments:
கருணாநிதி மலைப்பாம்பு, தமிழ்நாட்டையே விழுங்கி ஏப்பம் விடுகின்றார். வாஸந்தி நச்சுப்பாம்பு. ரெண்டும் மொத்தத்தில் மனுசனுக்கு கேடு.
panam paththum seivathu maddumalla paathaazham maddum paayum
வாஸந்தி போன்றவர்கள் ஈழத்தமிழரின் காலைச் சுற்றிக் கடிப்பவர்கள். ஈழத்தமிழருக்கு கருணாநிதியும் வாஸந்தியும் ஒன்றுதான்.
Post a Comment