ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, October 26, 2009


மகிந்த ராஜபக்ஷவும் 'அரசியல் கோமாளி' கருணாநிதியும்!




பாரீஸில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் வந்த கட்டுரை:

மகிந்த ராஜபக்ஷவால் 'அரசியல் கோமாளி' என்று வர்ணிக்கப்பட்ட கருணாநிதி அவர்கள் அனுப்பிவைத்த பத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளனர். சிங்கள அரசால் வழங்கப்பட்ட தடல் புடல் மரியாதைகளினால் உள்ளம் குளிர்ந்துபோன இவர்கள் தாம் சென்ற இடங்களில் எல்லாம் அல்லல்படும் தமிழர்களின் அவலங்கள் குறித்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற டி.ஆர். பாலுவின் நடத்தையால் தமிழ் ஊடகமொன்று அவருக்கு 'சனீஸ்வரன்' என்ற பட்டத்தை வழங்கியது. வவுனியா அரச அதிபருடன் நடந்து கொண்ட விதமும் அவர்மேல் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.

வவுனியா முகாம்களுக்குச் சென்ற இந்த நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகித்த காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம்.ஆரோன் 'இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை' என சிங்களக் கொடுமைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். தமிழகம் திரும்பிய பின்னர் காங்கிரஸ் உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் 'நாங்கள் சென்ற முகாம்கள் எல்லாம் சர்வதேச தரத்தில் சிறப்பாகவே உள்ளது' என்று தமிழீழ மக்களின் உணர்வுகளைச் சிதறடித்தார். ஆக மொத்தத்தில், இலங்கைக்குச் சென்று, அங்குள்ள தமிழர்களை அவமானப்படுத்தித் திரும்பியுள்ளார்கள்.

ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டு தமிழகம் திரும்பிய இந்த நாடாளுமன்றக் குழுவினரை சக்கர நாற்காலியில் பவனிவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளார். நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய கலைஞர் கருணாநிதி விமான நிலையத்தில் வைத்தே, 'வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இரண்டரை லட்சம் மக்களில் 58 ஆயிரம் மக்களை அடுத்த 15 நாட்களுக்குள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்' என்று அறிவித்தார்.

கருணாநிதி அவர்களது இந்த அறிவித்தல் மறுநாள் இது குறித்து தமக்கு ஒன்றும் தெரியாது என்று ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா இந்தச் செய்தியை மறுதலித்திருந்தார். அத்துடன், 'தமிழகத்து இந்தக் குழுவின் வருகை, இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் குறைவதற்கு வழிவகுத்துள்ளது' என்று சிங்கள அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் நான்கு மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடாத்திய கலைஞர், தற்போது தனது மகள் கனிமொழியையும் இணைத்துக்கொண்டு ஒரு பயண நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறித்து ஈழத் தமிழர்கள் பெரிதும் அலட்டிக்கொள்ளாத போதும், தமிழகத்தில் இது குறித்துப் பாரிய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியைப் பாராட்டித் தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 'இலங்கைத் தமிழருக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர்!' என்ற வாசகங்களோடு கூடிய இந்த பாரிய சுவரொட்டிகள், கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களின் அவலங்களைத் தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது. கலைஞரின் இந்த சுவரொட்டிப் பிரச்சாரம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதம் குறித்தும், அதன் பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டதாக சிங்கள அரசால் கூறப்பட்ட வன்னி மக்கள் மூன்று இலட்சம் பேர் முட்கம்பி முகாம்களுக்குள் சிறை வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றியும், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பல்லாயிரக்கணக்கான இளம்வயதினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிறிலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டிருப்பினும், அவர்களைப் பார்வையிடுவதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்தும் மேற்குலக நாடுகள் அக்கறை செலுத்திவரும் நிலையில் முத்துவேல் கருணாநிதி அவர்கள் அதிலும் தன் அரசியலை நடாத்த முற்படுவது அருவருக்கத் தக்க விடயமாகவே உள்ளது.

இலங்கைத் தீவில் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப் பகுதிகளில் சிங்கள அரசுகளால் தொடர்ந்தும் இழைக்கப்பட்டு வந்த அநீதிகள், இன ஒதுக்கல்கள், இன வன்முறைகள் காரணமாகவே 1977 இல் தமிழீழத் தனியரசு கோரி தந்தை செல்வா அவர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக முறைமையுடன் தமிழீழ மக்கள் மேற்கொண்ட அரசியல் உரிமைப் போராட்டங்கள் அனைத்தும் சிங்கள அரசுகளின் ஆயுத ஒடுக்குமுறையால் தோல்வியைத் தழுவிய நிலையிலேயே தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் உருவானது. இந்தியாவால் ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, இந்திய மண்ணில் உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புக்களும் 'தமிழீழம்' என்ற சொற்பதத்தைத் தங்களது அமைப்புக்களின் பெயர்களில் இணைத்துக்கொண்டன. ஆனாலும், தற்போது கருணாநிதி அவர்களால் 'தமிழீழம்' என்ற சொல் மறுதலிக்கப்பட்டு 'இலங்கைத் தமிழர்' என்ற சிங்கள விருப்பங்களாலேயே ஈழத் தமிழர்கள் குறிப்பிடப்பட்டு வருகின்றார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழுணர்வு கலைஞர் கருணாநி அவர்களால் காசாக்கப்பட்டு, குடும்பச் சொத்தாக்கப்படுகின்றது. இந்தப் பேராசை பிடித்த மனிதரால் தமிழீழ விடுதலையும், தமிழீழ மக்களும் விலை கூறி விற்கப்பட்டுள்ளார்கள். சினிமாவுக்குள் அமிழ்ந்து போயிருந்த தமிழக மக்களின் சுய சிந்தனைகள், கலைஞரது சின்னத் திரைக்குள் சிறைபட்டுப் போயுள்ளது. அவர்களது அரசியல் விருப்பங்களும் விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்கப்பட்டு விட்டது.

சிங்கள தேசத்தை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கான இந்திய நிகழ்ச்சி நிரலில் இணைந்துகொண்டு தமிழக முதல்வர் நடாத்தி முடித்த நாடகத்தினால் தமிழகம் மீதான ஈழத் தமிழர்களின் இறுதி நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுவிட்டது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil