ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 17, 2009


நரகாசுரன்களைக் கொல்லலாமா?


என்னவோ தெரியவில்லை. தீபாவளியென்கின்றபோதெல்லாம் இப்போது என் கையாலாகாத நிலையைப் பார்த்து ஆதங்கப்படும் சோர்வு தான் வருகின்றது.பலகாரங்கள் பட்சணங்கள் பட்டாசுகள் எல்லாம் பின் தள்ளப்பட்டு விட்டன. இத்தனை ஆனந்தங்களுக்கும் பின்னின்ற கெட்டவர்களின் அழிவு என்ற சந்தோஷம் காணாது போய்விட்டது. கெட்டவர்களுடனேயே வாழவேண்டிய நிர்ப்பந்தம் வந்து விட்டதாலோ என்னவோ தீபாவளி இப்போதெல்லாம் சந்தோஷத்தைக் கொண்டு வருவதில்லை. மனம் மண்டிக்கிடக்கும் துயரத்தையும் ஆற்றாமையையும் தான் நிறைத்துச் செல்கின்றது.

ஏன் அப்படி என்று பலமுறை கேட்டுப்பார்க்கின்றேன். நல்லவர்களெல்லாம் கெட்டவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றார்களோ என்று சந்தேகமாகவே இருக்கின்றது.யாரையும் நம்பமுடியாத ஒரு இக்கட்டில் வாழ்க்கைச் சக்கரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.கட்டிய மனைவியை நம்பியே பக்கத்தில் படுக்க முடியாத காலமாகி விட்டது.

ஆரியன் திராவிடன் யுத்தம் என்பதையெல்லாம் விட்டு விடுவோம். ஒரு கெட்டவன் அழிந்தான் நன்மை வென்றது என்று மட்டும் பார்ப்போம்.வீட்டிற்குள் ஊர்ந்து வரும் பாம்பை அதன் போக்கிலேயே விட்டுவிடுவோமா? தடியெடுத்து அடிப்பதில்லையா?

அப்படியிருக்க இப்போது மட்டும் எப்படி? இவர்களுடன் எல்லாம் கூடி வாழத் தயாராகி விட்டோம். நமக்கென்னவென்று ஒதுங்கிப் போக எப்படி பழகிவிட்டோம்.எல்லாம் சுயநலமென்று ஒதுக்கிவிடமுடியாது. பயம், மனதில் தோன்றிய பயம். வாழ்வு குறித்த எந்த மதிப்பீடும் இல்லாத வரட்சி. கம்பியூட்டர்,இமெயில்,இயந்திரம் என்று வாழ்க்கை வடிந்து விட்டதால் வாழ்க்கை குறித்த பெருமிதம் அற்றுப் போய்விட்டோம்.

காசு பார்க்கும் கலைகளுக்குள் ஒதுக்கப்பட்டு பளபளப்பையும் பருவத்தசைகளையும் பார்த்து நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றோமே அல்லாது வாழ்க்கையின் மேன்மை பிறவியின் பெருமை பற்றியெல்லாம் அறியாது இருக்கின்றோம். பக்கத்து வீட்டில் இழவு விழ நம் வீட்டில் நமக்கென்னவென்று இருக்கின்றோம். நம் வீட்டிலும் துன்பம் இறுக்க உதவ நாதியில்லாது தவிக்கின்றோம்.

ஏன்? 'உன்னைப்போல அயலவனை நேசி' என்ற மகான்களின் வார்த்தைகளை மறந்து விட்டோம். மற்றவர்களை நேசிக்க அறியாதனால் தன்னை மட்டும் நேசிக்க முடியுமா? தன்னைப் பற்றிய மேன்மையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முடியாதவனால் தன்னை உயர்வாக நினைக்க முடியுமா?

எல்லாம் எப்படி ஆகிவிடுகின்றது.தன்னைப்பற்றி தான் இருக்கும் இடம் பற்றி தன் சமூகம் ,நாடு பற்றிச் சிந்திக்காமையினால் ஏற்பட்டு விடுகின்றது. ஒதுங்கிச் செல்லச்செல்ல ஏறி மிதிக்கும் மூர்க்கமும் துரத்துகின்றது. அதனால்த் தானே தவறு செய்பவர்களும் மேலே மேலே செல்லத்துணிகின்றார்கள். தவறு செய்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் மூழ்கித் திளைத்து நம்மை வதைத்துக் கொண்டிருக்க முடியுமா?

நரகாசுரன்கள் ஆட்சியில் எப்படி நம்மால் சந்தோஷப்பட முடியும். அப்போது தீபாவளியை எப்படிக் கொண்டாட முடியும்.

நரகாசுரன்களைக் கொல்வோமா? என்றுதான் எழுத நினைத்தேன். நான் மட்டும் மகிஷாவர்த்தனி ஆகிவிட முடியுமா? நாம் என்றால் சிலவேளை பலம் சேரக் கூடும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil